ராஜா ஒரு நல்ல கிடாரிஸ்ட்! – பிரதாப் போத்தன்
தமிழ் சினிமா, ராஜாவை தன் பொக்கிஷமாக்கிக் கொண்டதில் அதிர்ஷ்டம் செய்திருந்தாலும், கிட்டத்தட்ட அவரைக் கொண்டாடியதில் மலையாள சினிமாவுக்கும், மலையாள இயக்குநர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அவரது இசைக்காக, மலையாளத்தில் இருந்து வந்து தமிழில் படம் இயக்கியவர்களில் ஒருவர் பிரதாப் போத்தன். மலையாளத்தில் ராஜா இசையிலும், சிவாஜி நடிப்பிலும் ‘ஒரு யாத்ராமொழி’ என்கிற கம்பீரமான காவியத்தைக் கொடுத்த லக்கி மேன். ‘மூடுபனி’ என ராஜாவின் இசைக்கு கிடார் தூக்கி நடித்தவர். ராஜாவுடனான தன் அனுபவ நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.
''பாலுமகேந்திராவின் படங்களில் பெரும்பாலும் நானும் இருப்பேன். ‘மூடுபனி’ வாய்ப்பும் அப்படித்தான் அமைந்தது. படத்துக்கு இதுதான் இசை, இப்படித்தான் இருக்கும் என எதுவும் எனக்குத் தெரியவே தெரியாது. ஜேசுதாஸ் அண்ணா, தான் பாடி முடிச்சதும், ஸ்டூடியோவுக்கு என்னைக் கூப்பிட்டு, ‘பாட்டைக் கேளு’ன்னு சொன்னார். அந்த கிடார் பகுதிகளைக் கேட்ட நொடி தொடங்கி கொண்டாட துவங்கிட்டேன். பாலுமகேந்திரா படங்களில் நானும் பெரும்பாலும் ஒரு பாடலிலாவது கிடாரைக் கையில் வைத்துக் கொண்டிருப்பேன். ராஜா ஒரு நல்ல கிடாரிஸ்ட் என்பதால், ‘முடிந்தவரை படத்தில் ராஜாவின் கிடார் போர்ஷன்களுக்கு நாம ஜஸ்டிஸ் செய்யணும்’ என்கிற காரணத்தால், பார்த்து பார்த்து நடித்திருப்பேன். பாலுமகேந்திராவும் ராஜாவும் இசை கம்போஸிங்கிற்காக அமர்வதே ஓர் அழகு. என் முதல் படமான ‘மீண்டும் ஒரு காதல் கதை’யின் கதையை சொன்ன போது, ‘குழந்தை மனசுக்கு நடுவில் காதலா? குழந்தை மனசு எப்படி இருக்கும்?’ என யோசித்துக் கொண்டே டியூன் போட்டுக்கொடுத்தார். ‘அதிகாலை நேரமே….’ பாடல் டியூன் அப்படித்தான் உருவானது. ஆயிரம் படங்களுக்கு ராஜா இசையமைத்திருப்பது எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், இந்த உலகில் இசை இருக்கிற வரையில் என்றென்றைக்கும் ராஜா எனக்கு என் இனிய பொன் நிலாதான்” என்கிறார் பிரதாப் போத்தன்....
No comments:
Post a Comment