மகாபெரியவாளை தரிசனம் செய்ய ஏழை, பணக்காரர்,உயர்ந்தவர், தாழ்ந்தவர்னு எல்லாருமே எந்த பேதமும் இல்லாமல் வருவாங்க
அந்த சமயத்துல பெரும்பாலும் ரெண்டே ரெண்டு வாழைப்பழத்துலேர்ந்து கூடைகூடையா ஆப்பிள் வரைக்கும் ஒவ்வொருத்தரும் அவங்கவங்களால் முடிஞ்சதை பெரியவாளுக்கு காணிக்கையா கொண்டு வந்து தர்றது உண்டு.
அநேகமா எல்லாருமே எதையாவது எடுத்துண்டு வந்தாலும் அவாள்ல சிலரோடதை ஆசார்யா வாங்கிக்க மறுத்துடுவார். சிலர்கிட்டே நேரடியா காரணத்தைச் சொல்லி வேண்டாம்பார். சிலர்கிட்டே மறைமுகமா வேற ஏதாவது சொல்லி தவிர்த்துடுவார்.
இந்த விஷயத்துல கொண்டுவரப்பட்ட பொருள் விலை உயர்ந்தது, கொண்டுவந்தவர் வி.ஐ.பி. என்றெல்லாம் எந்த பேதமும் பார்க்காம வேண்டம்னா வேண்டாம்னு சொல்லிவிடுவார் பரமாசார்யா.
அந்த மாதிரி ஒரு வி.ஐ.பி.விஷயத்துல நடந்த சம்பவம்தான் இது. மகா பெரியவா கலவையில் முகாமிட்டிருந்த காலகட்டம் அது.
ஒருநாள் காலம்பற வேளையில் ரொம்ப பிரபலமான வக்கீல் ஒருத்தர் பரமாசார்யாளை தரிசனம் பண்ணரதுக்காக குடும்பத்தோட வந்திருந்தார்.
தான் கொஞ்சமும் ஆசாரம் தவறாதவன்கறதை காட்டிக்கிற மாதிரி, பஞ்சகச்சம்,அங்கவஸ்திரம் உடுத்திண்டு, நவரத்ன மாலையைப் போட்டுண்டு வந்திருந்தார். அவர், அவரோட ஒய்ஃப் மடிசார் புடவை கட்டிண்டு வந்திருந்தா. பிள்ளைகள் ரெண்டுபேரும் பட்டுவேஷ்டி கட்டிண்டு,பட்டுத் துண்டு போட்டுண்டு இருந்தா.
பெரியபெரிய தட்டுகள்ல நிறைய புஷ்பம்,கல்கண்டு,ஆப்பிள்,ஆரஞ்சு,முந்திரிப்பருப்பு,தேன் குடுவைன்னு ரொம்பவே டாம்பீகமா எடுத்துண்டு வந்து பெரியவா திருவடி முன்னால வைச்சுட்டு, சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார் அவர்.
அவா எடுத்துண்டு வந்திருந்த பழத்தட்டுக்களைப் பார்த்த பரமாசார்யா,அதுல மேலாக ஒரு கவர் இருக்கறதைப் பார்த்தார்.
"கனிவர்க்கம்,புஷ்பமெல்லாம் எடுத்துண்டு வந்திருக்கே... கூடவே பெரிசா ஒரு கவர் வைச்சிருக்கியே,அது என்னது?!" அப்படின்னு கேட்டார்.
"அதுல என்னால முடிஞ்ச கொஞ்ச பணம் வைச்சிருக்கேன்.!" சொன்னார்,லாயர்.
"சொற்ப பணம்னா என்ன பத்து ரூபாயா? பதினோரு ரூபாயா?"-கேட்டார்,ஆசார்யா.
மகாபெரியவா இப்படிக் கேட்டதும், அந்த வக்கீல் முகத்துல கொஞ்சம் கர்வம் தெரிஞ்சுது.. அதோட, 'நான் எவ்வளவு பெரிய கிரிமனல் லாயர். என்னைப்போய் இவ்வளவு தாழ்வா எடைபோட்டுட்டாரே..!' அப்படிங்கறமாதிரி ஒரு எண்ணம் அவர் மனசுல வந்துடுத்து.
"அவ்வளவு குறைச்சலா எல்லாம் இல்லை பெரியவா...பதினஞ்சாயிரம் ரூபாய் அதுல வைச்சிருக்கேன்!" பவ்ய பாவத்துடன் சொன்னாலும் லாயர் குரல்ல ஒரு கர்வத்தொனி தெரிஞ்சுது.
கொஞ்ச நேரம் மௌனமா இருந்த பெரியவா, " நீங்கள்லாம் கார்லதானே வந்திருக்கேள்? ஒண்ணு பண்ணு,இந்தக்கனிவர்க்கங்களையும்,பணக்கவரையும் எடுத்துண்டுபோய் கார்ல வைக்கச் சொல்லிடு,புஷ்பம் மட்டும் போதும்! புரிஞ்சுதா " என்று சொன்னார் பெரியவா.
அப்படியே ஆடிப்போயிட்டார் அந்த வக்கீல். மடத்துல உள்ளவாளுக்கும் அது கொஞ்சம் பதட்டமாத்தான் இருந்தது. ஏன்னா, அப்போ மடத்தோட பொருளாதார நிலை ரொம்ப் க்ஷீண நிலையில இருந்தது. பதினஞ்சாயிரம்கறது பெரியதொகை. அதைப்போய் வேண்டாம்கறாரேன்னு பலருக்கும் தோணித்து.
திகைச்சு நின்ன லாயர் ஏதோ சொல்லறதுக்காக,"பெரியவா...!" அப்படின்னு ஆரம்பிச்சார்.
"என்ன, நீ இன்னும் நான் சொன்னதைச் செய்யலையா? மொதல்ல, அதையெல்லாம் கொண்டுபோய் வைச்சுட்டு வா!" இந்த தரம் பெரியவா குரல் ஆணையாகவே ஒலிச்சுது.
மறுபேச்சு பேசாம அப்படியே கொண்டுபோய் வைச்சுட்டு வந்தார் அந்த லாயர்.
அதுக்கப்புறம் அவர்கிட்டே சகஜமா கொஞ்சநேரம் பேசிண்டு இருந்துட்டு, கல்கண்டு,குங்கும பிரசாதம் எல்லாம் குடுத்து ஆசிர்வாதம் பண்ணினார் பரமாசார்யா.
உத்தரவு வாங்கிண்டு அவர் புறப்பட்டுப் போனதுக்கு அப்புறம் பக்கத்துல நின்னுண்டு இருந்த சிஷ்யாளைப் பார்த்தார் மகாபெரியவா.
"என்னடா, மடம் இருக்கற நிலையில, வந்த பணத்தை பெரியவா வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்டாரேன்னு பார்க்கறேளா? அது பாவப் பணம்.
பொய் வழக்கு ஒண்ணுல மனசாட்சிக்கு விரோதமா வாதாடி ஜெயிச்சுக் குடுத்து அதுக்கு வந்த ஃபீஸுல ஒரு பங்குப் பணத்தைத்தான் இங்கே எடுத்துண்டு வந்திருக்கார் அவர். பாப சம்பாத்யம் இங்கே வந்தா பாபம்தான் சேரும்.
தர்மத்தை யாருக்காகவும் மீறக்கூடாது. ஒரே ஒரு உப்புக்கல் போதும். ஒரு குடம்பால் திரிஞ்சுபோறதுக்கு புரிஞ்சுதா?"
ஸ்ரீமடத்துல மறைமுகமாகக்கூட எந்தப் பாவமும் சேர்ந்துடக்கூடாதுங்கறதுல கவனம இருக்கறதோட, பாவம் செஞ்சு பணம் சம்பாதிக்கக் கூடாதுங்கற மகத்தான பாடத்தை தங்களுக்கும் மகாபெரியவா உணர்த்தியிருக்கார்ங்கறது புரிஞ்சுது, அங்கே இருந்தவர்களுக்கு.
No comments:
Post a Comment