'இரப்போர்க்கு (வேண்டுவோர்க்கு) இல்லையென்று சொல்லாத நிலை என்றும் நீடித்திருக்க வேண்டும்' என்று, தான் வாழ்ந்த காலத்தில் தெய்வத்திடம் வரம் கேட்டவள் கற்புக்கரசி கண்ணகி.
அவளே தெய்வமாக நின்று, தன்னடி சேர்வோர்க்கு வினைகள் நீக்கி வேண்டியதைத் தந்து கொண்டிருக்கிறாள் சிறுவாச்சூரில்!
செந்தமிழ் நாட்டின் மையப்பகுதியான பெரம்பலூர் மாவட்டத்தில்தான் இருக்கிறது சிறுவாச்சூர். இங்கே இவளுடைய பெயர்... மதுரகாளி!
'மதுரகாளி எப்படி கண்ணகியாவாள்... அவளுக்கு எப்படி இங்கே கோயில்?' - இந்தக் கேள்விகளுக்குக் கோயிலின் புராண வரலாற்றைப் புரட்டினால் விடை கிடைக்கும்.
மதுரையை எரித்த கண்ணகி, மனம் கொள்ளாத ஆத்திரத்தோடு கால் போன போக்கில் வந்து கொண்டிருந்தாள். சிறுவாச்சூர் வந்தபோது மனத்துயரம் கொஞ்சம் குறையக் கண்டவள், இரவு அங்கே தங்கிச் செல்ல முடிவெடுத்தாள்.
அங்கிருந்த கிராம தேவதையான செல்லியம்மனிடம் அதற்கு அனுமதி கேட்டாள். ஆனால், ஊரையே மந்திர சக்தியால் அடக்கி வைத்திருக்கும் மந்திரவாதியின் கட்டுப்பாட்டில் இருந்த செல்லியம்மன், கண்ணகி தங்குவதற்கு அனுமதி மறுத்தாள்.
''அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்’' என்று சொல்லி அங்கேயே தங்கினாள் கண்ணகி. அன்றிரவு ஆங்காரத்தோடு வந்து நின்ற மந்திரவாதியை, தன்னுடைய நெஞ்சகத்து தீயால் வதம் செய்தாள் கண்ணகி.
இதைக் கண்ட செல்லியம்மன், ''பக்கத்தில் உள்ள பெரியமலைக்கு நான் போய் விடுகிறேன். நீ இங்கேயே இருந்து மக்களைக் காத்தருள வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டு, இடம் பெயர்ந்தாள்.
கோவலனை இழந்த கோபத்தில் காளியாக மாறி, மதுரையை எரித்த கண்ணகிக்கு, மிச்சமிருந்த கோபம் இங்கே கரைந்துபோக, மதுரமானவளாக (இனிமையானவளாக) ஆனாள். அதனால் அவள் மதுரகாளி என்றும்...
மதுரையில் இருந்து வந்ததால் 'மதுரைக்காளி' என அழைக்கப்பட்டு 'மதுரகாளி'யானாள் என்றும்... இரண்டு விதமான பெயர்க்காரணங்கள் இங்கே கூறப்படுகின்றன.
சிம்ம வாகனத்தில் இடது காலை மடித்து, வடக்கு பார்த்தபடி அமர்ந்திருக்கும் அன்னை, தன் நான்கு கைகளில் உடுக்கை, பாசம், சூலம், அட்சயபாத்திரம் ஆகிவற்றை ஏந்தியிருக்கிறாள். மந்திரவாதியை அழித்தது வெள்ளிக்கிழமை.
செல்லியம்மன் வேண்டுகோளின்படி அவள் தெய்வமாகி நின்றது திங்கட்கிழமை. இதை நினைவுகூரும் வகையில் இந்த இரண்டு கிழமைகளில் மட்டும்தான் கோயில் திறந்திருப்பது கால காலமாக வழக்கம். தற்போது...
அமாவாசை, பௌர்ணமி, தமிழ், ஆங்கில வருடப் பிறப்புகள், தீபாவளி, தைப்பொங்கல், தைப்பூசம், மகாசிவராத்திரி, மார்கழிப் பிறப்பு, கார்த்திகை தீபம், நவராத்திரி நாட்கள் ஆகிய தினங்களிலும் திறக்கப்படுகிறது.
காலை 11 மணிக்கு நடைபெறும் அபிஷேகத்தைப் பார்வையிட்ட பிறகு, பரவசத்தோடு சந்நிதியில் நின்றிருந்தது சென்னையைச் சேர்ந்த செல்லம்மாள் - நாகராஜன் குடும்பம்.
''இவ, எங்க குலதெய்வம். வருஷத்துக்கு ரெண்டு, மூணு தடவை கண்டிப்பா வந்து தரிசிச்சுட்டுப் போயிடுவோம். எந்தக் காரியமா இருந்தாலும் இவளை நினைச்சு மஞ்சத் துணியில காசு முடிஞ்சு போட்டுட்டுத்தான் தொடங்கு வோம்.
கோயிலுக்கு வரும்போது அதை உண்டியல்ல போட்டுடுவோம். என் சின்ன மகன் வெளிநாட்டுல இருந்து இப்பதான் குடும்பத்தோட இந்தியா வந்தான். அவனோட குழந்தைக்கு மொட்டையடிச்சு காது குத்தத்தான் இப்ப வந்திருக்கோம்'' என்று முகம் கொள்ளாத மகிழ்ச்சி யுடன் சொன்னார் செல்லம்மாள்.
அபிஷேகம் முடிந்தவுடன் தங்க அங்கி உள்ளிட்ட சர்வ அலங்காரி யாக காட்சி தரும் அன்னைக்கு, பகல் ஒரு மணிக்கு நடைபெறும் பூஜைதான் சிறப்பு வாய்ந்தது. இரண்டு பூசாரிகள் உடுக்கை அடித்து பாடுகிறார்கள்.
அந்தக் குரலும், உடுக்கை ஒலியும் சேர்ந்து, பக்தர்களை மருள் வந்து ஆட வைக்கிறது. வாய் கட்டி, தலைப் பாகைக் கட்டி, தார்பாய்ச்சிய வேட்டி யுடன் இருக்கும் வயதான பூசாரி, சந்நிதிக்குள் அம்மன் வந்துவிட்டதை உணர்ந்து தீபம் ஏற்றுகிறார். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் காட்டப்பட்டு, விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
கொலு மண்டபத் தில் வைக்கப்பட்டிருக்கும் படங்கள், விக்கிரகங்களுக்கு எதிரில் இருக்கும் பூசாரியிடம் நாம் நம் மனக்குறைகளை சொன்னால் அவர் அதை அப்படியே தெய்வத்திடம் சொல்லி முறையிடுகிறார்.
அதற்கு பிறகு நம் துயரங்கள் அனைத்தும் சூரிய ஒளி பட்ட பனித்துளி போல் மறைகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை!
வீட்டிலிருந்து எடுத்து வரும் மாவிளக்கை இங்கு போட அனுமதியில்லை. வேண்டுதல் நிறைவேற பிரார்த்திப்பவர்கள்... இங்கே வந்து அரிசி, வெல்லம் வாங்கி கோயிலில் இருக்கும் கல் உரல்களில் இடித்து மாவு பிசைந்து, அதில்தான் மாவிளக்கு போட வேண்டும்.
அப்படி மாவு இடித்துக் கொண்டிருந்த சிவகங்கை சௌந்தரவல்லி, ''நெனச்சதெல்லாம் நடத்திக் கொடுப்பா இந்த ஆத்தா. அப்படி நாங்க வேண்டிக்கிட்ட தெல்லாம் நடந்திருக்கு.
இப்பவும் என் வீட்டுக்காரரோட புரமோஷனுக் காகத்தான் குடும்பத்தோட வந்திருக் கோம். அடுத்தடுத்த மாசத்துலயே கட்டாயம் கிடைச்சுடும். அதுதான் எங்க மதுரகாளி மகிமை!'' என்று சொல்லி நெகிழ்ந்தார்.
அன்னையின் இன்னும் பல மகிமைகளை நம்மிடம் அள்ளி வைத்த ஆலய பரம்பரை பூசாரிகளில் ஒருவரான கனகராஜ்,
''பில்லி, சூனியம், மந்திர வித்தைகளால ஊரை அடக்கி வாழ்ந்த மந்திரவாதியை அடக்கியவள் இந்த அன்னை. அதனாலதான் பில்லி, சூனியத்தால பாதிக்கப்பட்டவங்க
இங்க வந்தா மிகப்பெரிய நிவாரணம் கிடைக்குது. குழந்தை பாக்கியம் இல்லாதவங்களுக்கும் அதை கிடைக்கச் செய்றா அன்னை. மனசுல இருக்கற குரோதம், வெறுப்பு, பகைனு எல்லாத்தையும் களைஞ்சி, பக்தர்களை அன்புமிக்கவர்களா, அருளாளர்களா ஆக்கறா!'' என்று சொல்லி பரவசத்தில் ஆழ்ந்தார்.
No comments:
Post a Comment