Monday, April 20, 2020

‛ மக்கள் பணியாளர்கள் வெல்வர்! இன்று, 'மக்கள் பணியாளர் தினம்'

நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில், நாம் மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டு இருக்கிறோம்.

'கொரோனா' வைரஸ் என்ற கொடிய அரக்கனுக்கு எதிரான போரில், நம் நிர்வாக துறையினர் ஆற்றிவரும் அளப்பறிய சேவைக்கு, நாட்டு மக்கள், தங்கள் முழு ஆதரவின் வாயிலாக, அங்கீகாரம் அளித்து வருகின்றனர். மக்கள் பணியாளர் தினமான இன்று, அதை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

கேபினட் செயலர் முதல், தலைமை செயலர்கள் வரை, போலீஸ் டி.ஜி.பி.,க்கள் முதல், அதிகாரிகள், டாக்டர்கள் வரை, அனைவரும், போர்களத்தின் முன்வரிசையில் நின்று, வைரஸ் தாக்கத்துக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். அவர்களுக்கு என் பாராட்டுகள்.நம் மருத்துவ கட்டமைப்பு, மக்கள் தொகை, புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை, உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, நாம் கொரோனா வைரசால் ஏற்படும் இறப்பு விகிதத்தை, கட்டுக்குள் வைத்துள்ளோம் என்பது, மிகப் பெரிய சாதனை.

இது போன்ற நெருக்கடியான காலகட்டத்தில், மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படப்போகும் பாதிப்புகளை முன்கூட்டியே யூகித்து, தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அதிரடியான நடவடிக்கையை முன்கூட்டியே துணிச்சலுடன் முன்னெடுத்து உள்ளனர். அதை, சுகாதாரத் துறை, கல்வி, போலீஸ், தகவல் தொடர்பு, போக்குவரத்து, கட்டுமானம், விவசாயம், வங்கி, வர்த்தகம் தொழில்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த மக்கள் பணியாளர்கள், மிகத் திறமையுடன் கையாண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், அரசியல் தலைமைக்கும், நிர்வாகத் தலைமைக்கும் இடையே, நாடு முழுதும் உள்ள புரிதல் மற்றும் ஒத்துழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் கடமை மற்றும் நிலைமையை உணர்ந்து, ஒற்றுமை உணர்வுடன் பணியாற்றுகின்றனர்.

நாட்டின், முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலின் நம்பிக்கைக்கு ஏற்ப, மக்கள் பணியாளர்கள், நாட்டிற்கு இரும்பு அரணாக விளங்குகின்றனர். நிர்வாக திறமையுடன், அரசியல் உறுதி இணைந்தால், சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை, நாம் இன்று கண்கூடாக பார்த்து கொண்டிருக்கிறோம்

.ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த, 16 பயணியர் உட்பட, 28 பேருக்கு, நம் நாட்டில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தபோதே, பிற நாட்டில் இருந்து வரும் பயணியரை நாம் கண்காணிக்க துவங்கிவிட்டோம்.பின்னர், 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், 21 நாட்களுக்கான முதல் கட்ட முழு அடைப்பு அறிவிக்கப்பட்டது. அதன்பின், 19 நாட்களுக்கான இரண்டாம் கட்ட முழு அடைப்பு அறிவிக்கப்பட்ட போது, நாட்டில் உள்ள, 730 மாவட்டங்களில், பாதிக்கும் மேல், ஒரு தொற்று கூட இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.

வைரஸ், காட்டுத் தீயை போல, பரவிக் கொண்டிருந்த நேரத்தில், மக்கள் பணியாளர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், சிறப்பான செயல்பாடுகளும், தொற்றை கட்டுப்படுத்து வதில் பெரும் பங்காற்றின.உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ், நம் நாட்டில் பரவாமல் தடுக்க வேண்டுமென்றால், 130 கோடி இந்தியர்களும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என, பிரதமர் நரேந்திர மோடி, நம்பிக்கையுடனும், உறுதியுடனும் உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கு, பொது மக்களும், மாநில முதல்வர்களும், அதிகாரிகளும், டாக்டர்களும் தங்கள் முழு ஆதரவை அளித்ததன் விளைவாகவே, இந்த, 40 நாள் முழு அடைப்பு, முழு வெற்றி அடைந்து உள்ளது.தகவல் தொடர்பு துறையில் புரட்சி, 38 கோடி அடித்தட்டு மக்களுக்கு வங்கி கணக்கு துவங்கியது, அரசு மானியங்களை மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக சேர்த்தல், சரக்கு மற்றும் சேவை வரி மூலம் வர்த்தகம் சுலபமாக்கப்பட்டது,

'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் போன்றவை, நம் மக்கள் பணியாளர்களின் சாதனைகளில் சிறு துளி. மக்கள் பணியாளர்களின் அயராத உழைப்பால், கொரோனா போன்ற நெருக்கடியான கால கட்டத்தை நாம் சுலபமாக கடந்து கொண்டிருக்கிறோம். ஏழை எளிய மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும், அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உணவும், உறைவிடமும் உறுதி செய்யப்பட்டுள்ளன, விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய முடிகிறது, 'ஆன்லைன்' வாயிலாக கல்வி சேவை வழங்கப்படுகிறது.சட்டம் - ஒழுங்கு காக்கப்படுகின்றன. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படுகின்றன. நேற்று முதல், முழு அடைப்பில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெகு விரைவில் பொருளாதாரம் முழுவதுமாக சீரடையும் என்பதில், எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தம், எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. ஆனால், நமது திறமைமிக்க மக்கள் பணியாளர்கள், இந்த யுத்தத்தை திறம்பட வெல்வர்.
-வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...