ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் மருந்து, பலசரக்கு, காய்கறி போன்ற அத்தியாவதியக் கடைகளை தவிர அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தில் இன்று காலையில் மிக்ஸி மற்றும் கிரைண்டர் சரிசெய்யும் கடை ஒன்றை அதன் உரிமையாளர் திறந்து வைத்து வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த ஶ்ரீவைகுண்டம் காவல் உதவி ஆய்வாளர் ரென்னிஸ், அந்தக் கடையை அடைக்குமாறு உரிமையாளரிடம் கூறியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையறிந்து அங்கு வந்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும், உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றவே, வியாபாரிகள் அனைவரும் திறந்திருந்த அத்தியாவசிய கடைகளையும் மூடிவிட்டு, வியாபாரிகளிடம் கெடுபிடி காட்டும் உதவி ஆய்வாளர் ரென்னிஸை உடனே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஶ்ரீவைகுண்டம் பிரதான சாலையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில்ஈடுபட்டனர். 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வியாபாரிகளிடம் காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உதவி ஆய்வாளர் ரென்னிஸை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர்.
அதன்பேரில் வியாபாரிகள் சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். வியாபாரிகள் போராட்டத்தை தொடர்ந்து உதவி ஆய்வாளர் ரென்னிஸ் உடனடியாக ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment