Monday, April 20, 2020

'வேண்டாம் மக்களே !'உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள்.

'கொரோனா காரணமாக இறக்கும் நபர்களை, தகனம் அல்லது அடக்கம் செய்ய, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள் மற்றும் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தெளிவான நடைமுறை பின்பற்றப்படுகிறது. இறந்தவர்களின் உடலில் இருந்து தொற்று பரவாது' என, சுகாதாரத் துறை கூறியுள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும், தம் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளிக்கும் டாக்டர்களை மரியாதையுடன் நடத்தி, கவுரவப்படுத்த வேண்டும்; நமக்காக உயிர் விடும் டாக்டர்களை, உயர்ந்த மரியாதை யுடன் அடக்கமோ, தகனமோ செய்ய, மனமுவந்து உதவ வேண்டும்.
'வேண்டாம் மக்களே !'உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள்

சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்தவர், டாக்டர் சைமன் ஹெர்குலஸ், 55; நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். கீழ்ப்பாக்கத்தில் உள்ள, 'நியூ ஹோப்' மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர். கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த காரணத்தால், டாக்டர் சைமனுக்கும் தொற்று ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தார்.அவரது உடலை அடக்கம் செய்ய, சக டாக்டர்கள் மற்றும் உறவினர்கள், டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள, கல்லறை தோட்டத்திற்கு எடுத்து சென்றனர். அருகில் வசிக்கும் மக்கள், கொரோனாவால் இறந்தவர் உடலை, இங்கு அடக்கம் செய்தால், எங்களுக்கும் நோய் பாதிக்கும் எனக்கூறி, எதிர்ப்பு தெரிவித்தனர். டாக்டர் உடலை, ஆம்புலன்சில் ஏற்றி, நியூ ஆவடி சாலையில் உள்ள, வேலங்காடு மயான பூமிக்கு எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்து, அன்னை சத்யா நகர் பகுதி மக்கள், அங்கு கூடினர்; அவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அண்ணா நகர் போலீசார், பொது மக்களிடம் பேச்சு நடத்தினர். மாநகராட்சி ஊழியர்கள், உடலை அடக்கம் செய்வதற்கான, பணிகளை துவக்கினர். அப்போது, திடீரென ஒரு கும்பல், மாநகராட்சி ஊழியர்கள் மீதும், ஆம்புலன்ஸ் மீதும், கல் மற்றும் கட்டைகளை வீசி, தாக்குதல் நடத்தியது. ஆம்புலன்ஸ் வாகனத்தின், கண்ணாடிகள் உடைந்தன.மாநகராட்சி பொறியாளர் செந்தில் குமார், 42, உதவி பொறியாளர் கலையரசன், 34, 'பொக்லைன்' வாகன டிரைவர் முத்தரசன், 38, ஆகியோர் பலத்த காயமடைந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அதன்பின், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, டாக்டரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இது தொடர்பாக, 74 பேர் மீது, அண்ணா நகர் போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல, சில தினங்களுக்கு முன், கொரோனாவால் இறந்த, ஆந்திர மாநில டாக்டர் உடலை எரிக்க, அம்பத்துார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்தடுத்து, இது போன்ற சம்பவங்கள் நடப்பதால், நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள, டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவங்கள், மனித குலத்திற்கே, பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளன. மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே, இது போன்ற போராட்டங்களுக்கு காரணம் என, தெரிகிறது.

ஆரம்பத்திலேயே அரசு, 'கொரோனா பாதித்து இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்வதாலோ, எரிப்பதாலோ யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது' என, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதை செய்ய தவறியதால், மக்களுக்கு சேவை செய்த, டாக்டர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூட, மக்கள் எதிர்க்கும் சம்பவங்கள், அரங்கேறி உள்ளன.'கொரோனா நோய் பரவலை தடுக்க, வீட்டில் குடும்பத்தோடு தனித்திருங்கள்' என, அரசு அறிவுறுத்தி வருகிறது. அதை கேட்காமல், ஏராளமானோர் ஊர் சுற்றி வருகின்றனர். இதனால் தான், நோய் பரவுகிறது என்பதை அறிந்தும், கவலைப்படாத மக்கள், இறந்தவரின் உடலை எரிப்பதற்கு, எதிர்ப்பு தெரிவிப்பது கேவலமான செயல்.குடும்பத்தை மறந்து, உயிரை துச்சமாக மதித்து, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளித்த டாக்டர்கள், அதே நோய் தொற்றால் இறந்தால், அவர்களின் தியாகம் போற்றப்பட வேண்டும்; அவர்களின் உடலடக்கம், அரசு மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.அதை விடுத்து, எதிர்ப்பதும், அடிப்பதும், உயிர் காக்கும் மருத்துவ சேவையை அவமானப்படுத்துவதாகி விடும் என்பதை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதேபோல், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல இடங்களிலும், கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி உள்ளனர்.கொரோனாவில் இறப்பவர் உடலை தகனம் செய்வதால், எவ்வித நோய் தொற்றும் பரவுவதில்லை என்பதை, உலக சுகாதார நிறுவனம், திட்டவட்டமாக தெளிவுப்படுத்தி உள்ளது. மேலும், போதிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியே, உடல்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்படுகின்றன.அந்த உடல்களை ஏற்றி வரும், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அடக்கம் செய்யும் மாநகராட்சி ஊழியர்களின் நிலைமையை, எண்ணிப் பாருங்கள். அவர்களுக்கு ஏற்படாத தொற்றா, அருகில் வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்டு விடப் போகிறது? எனவே, உண்மையை உணர்ந்து, உடல்களை அடக்கம் செய்ய, எதிர்ப்பு தெரிவிப்பதை கைவிட வேண்டும். அதுபோன்ற செயல்களில், இனிமேலும் யாரும் ஈடுபடாதீர்கள்.

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி மற்றும் மாநில சுகாதாரத் துறை விடுத்துள்ள வேண்டுகோள்:இந்த தொற்று நோயால், சில நல்ல மனிதர்களை, நாம் இழக்க நேரிடுவது, கடினமான ஒரு நிகழ்வு. நாம் வாழும் இவ்வுலகில், அவர்களும் ஓர் பகுதியே. சக மனிதர்களாகிய அவர்களை, தகுந்த மரியாதையுடன், இங்கிருந்து அனுப்பி வைப்பது, நம் ஒவ்வொருவரின் கடமை. கொரோனா காரணமாக இறக்கும் நபர்களை, தகனம் அல்லது அடக்கம் செய்ய, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள் மற்றும் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தெளிவான நடைமுறை பின்பற்றப்படுகிறது.சடலத்தை கவனமாக, மரியாதைக்குரிய விதத்தில் கையாளவும், சரியான முறையில் தகனம் செய்யவும், அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, சென்னை மாநகராட்சி, அவர்கள் உடல்களை, கவனமாக தகனம் செய்ய, எல்லா விதிமுறைகளையும் பின்பற்றுகிறது.

இறந்த நபர்களின் சடலத்தில் இருந்து, எந்தவொரு நோய் பரவல் குறித்தும், மக்கள் கவலைப்படவோ, பயப்படவோ தேவையில்லை. நாங்கள், அதை பாதுகாப்பான முறையில் கையாள்கிறோம்.இந்த விஷயத்தில், நம் சமூகத்திற்கான, முழு பாதுகாப்பை, உங்களுக்கு உறுதி அளிக்கிறோம். நம் உலகத்தில் இருந்து செல்பவர்களை, மதிப்புடனும், மரியாதையுடனும் அனுப்பி வைப்போம்.இவ்வாறு, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குண்டர் சட்டத்தில் கைது!


அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிக்கை:கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற, அரும்பாடுபட்டு தன்னுயிரை இழக்கிற, மருத்துவர்களின் இறுதி சடங்கில், அநாகரிகமாக நடந்து கொள்ளும் சமூக விரோத கும்பலை, உடனடியாக கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.கொரோனா பாதிப்பில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் இறக்க நேரிட்டால், காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, உயர் அதிகாரிகள் தலைமையில், உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி வரும் காலங்களில், இது போன்ற நிகழ்வுகள் நடக்காமலிருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.மருத்துவர்களை அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் கும்பலை, இரும்புக் கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

உங்களுக்கு நாங்கள் வேண்டும்!


டாக்டர் சைமன் இறுதி சடங்கில், தங்களுக்கு நடந்த அவமதிப்பை, கண்ணீருடன் சமூக வலைதளங்களில், டாக்டர்கள் பதிவிட்டுள்ளனர்.

டாக்டர் பிரதீப்குமார்: இந்த கடிதத்தை, கண்ணீருடனும், ரத்தத்திலும் எழுதுகிறேன். கண்ணுக்கு தெரியாத கொரோனாவை எதிர்த்து போராடும், ஒவ்வொரு டாக்டருக்காகவும், இந்த கடிதத்தை எழுதுகிறேன்.இந்த எதிரியை, எந்த குண்டுகளினாலும், புல்லட்டுகளினாலும், ஏவுகணைகளினாலும், கொல்லவே முடியாது. நண்பர்களே... நாங்கள் வீரர்கள் இல்லை; உங்களை போன்றவர்கள் தான். இதை, தற்போது நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஏனென்றால், நீங்கள் அனைவரும், எங்களை தாக்கியுள்ளீர்கள்; மிகவும் காயப்படுத்தி உள்ளீர்கள். அப்போது, ரத்தம் வருவதை பார்த்திருப்பீர்கள். நாங்களும் உங்களைப் போன்றவர்கள் தான். எங்கள் நரம்பியல் டாக்டர், கண்ணுக்கு தெரியாத எதிரியுடனான போரில், உயிர் தியாகம் செய்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய, மயானத்திற்கு கொண்டு சென்றபோது, 50க்கும் மேற்பட்ட மக்கள், எங்களை தாக்கினீர்கள்.ஆம்புலன்ஸ் டிரைவருக்கும், மாநகராட்சி சுகாதார ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது. உண்மையில், இதைப்பெற, நாங்கள் தகுதியானவரா; நம்மில் எவருக்கும், இது நடக்கலாம் என, நீங்கள் நினைக்கவில்லையா? அனைத்து டாக்டர்களும், மருத்துவமனையை மூடிவிட்டால் என்ன நடக்கும்! நீங்கள் எங்கு சிகிச்சைக்கு செல்வீர்கள்? உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், உங்கள் மகன், மகள், கணவன், மனைவி, பெற்றோர் கூட, அருகில் வர மாட்டார்கள்; தொட மாட்டார்கள். இது உண்மை. ஆனால், நாங்கள், உங்களை கவனித்து கொள்வோம்; சிகிச்சை அளிப்போம். இதுபோன்று, நீங்கள் எங்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும். மனிதநேயம் இறந்து விட்டது; அது, புத்துயிர் பெற வேண்டும். உங்களுக்கு நாங்கள் வேண்டும். தயவு செய்து, எங்களை தாக்க வேண்டாம்; உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்.

டாக்டர் பாக்கியராஜ்:டாக்டர் சைமன் ஹெர்குலஸ் இறந்து விட்டார்; கொரோனாவால் இறந்தார். அவர் உடலை பெற்று, அடக்கம் செய்ய முயற்சித்தோம்; மக்கள் விடவில்லை. முறையாக அனுமதி பெற்றிருந்தோம். அரசும் முயற்சிகள் மேற்கொண்டது.இதை, கண்ணீருடன் பதிவிடுகிறேன். சிறந்த டாக்டர் என, தன்னை நிரூபித்தவர். அவரை அடக்கம் செய்ய, மக்கள் அனுமதிக்கவில்லை. மக்களை பார்க்காமல் இருந்திருந்தால், அவருக்கு இந்த நிலை வந்திருக்காது. உடலை விட்டு விட்டு ஓடி வரும் நிலைக்கு தள்ளப்பட்டோம். அதன்பின், டாக்டர் பிரதீபன், மற்றொரு நண்பரும் சேர்ந்து, இறுதி சடங்கை செய்தனர்.மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், இந்த நோயினால் இறந்தால், மக்கள் கொடுக்கும் பரிசா இது; இந்த வீடியோவை வெளியிட வெட்கப்படுகிறேன்; தலைகுனிகிறேன்.அவரை அடக்கம் கூட செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம். எதற்கு இந்த மருத்துவ பணிக்கு வந்தோம் என, வெட்கப்படுகிறேன். இதை, கூறுவதற்காக வருந்துகிறேன்.வேதனையை புரிந்து கொள்ளாமல், எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளாமல் தாக்கினர். வேறு எந்த மனிதருக்கும், இந்த நிலை வரக்கூடாது. அரசு, இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் மனதில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அடக்கம் செய்ய முடியாமல் அலைந்தோம். இது, வேறு யாருக்கும் நடக்கக் கூடாது.

அமைச்சர் எச்சரிக்கை!


இச்சம்பவம் தொடர்பாக, உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி, 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:நம்மை பாதுகாக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், உள்ளாட்சி ஊழியர்கள், மின் ஊழியர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து செயலாற்றும் அதிகாரிகள், செய்தியாளர்கள் ஆகியோர், நமக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குகின்றனர். இவர்கள் தான், நம் மனித கடவுளர்கள்.இவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, நோய் தொற்றினால் இறக்க நேரிடும் போது, தகனம் செய்ய விடாமல், மனிதாபிமானமின்றி இடையூறு விளைவிப்பது, மாநகராட்சி ஊழியர்களை தாக்குவது என்று சிலர் நடந்து கொள்வது, வேதனை அளிக்கிறது.அத்தகையோர் மீது, நகராட்சி நிர்வாகங்கள், மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.இவ்வாறு, வேலுமணி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...