கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மே, 3 வரை, அரசு அறிவித்த ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையில், கோடை வெயிலும் கொளுத்த துவங்கியுள்ளதால், 'வெளியில் சுற்ற வேண்டாம்' என, வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை, மற்றொரு ஊரடங்காக அமைந்துள்ளது.
'காலை, 11:00 முதல் மாலை, 3:00 மணி வரை, வெளியில் தலை காட்டாதீர்கள்' என, 10 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இரண்டு மாதங்களாக, ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மார்ச், 24 முதல், மே, 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க, பொது மக்கள் யாரும் வெளியில் வராமல், வீட்டில் இருக்குமாறு, அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, இயற்கையும் உதவிக்கு வந்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு, ஏப்ரலிலேயே, கோடை வெயில் கொளுத்த துவங்கியது.தற்போது, அதன் உக்கிரம், நாள்தோறும் அதிகமாகி வருகிறது. அதன் காரணமாக, 'பொது மக்கள், பகலில் வெளியே வர வேண்டாம்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
போராட்டம்
தற்போது, ஊரடங்கில் விதிவிலக்காக, தினமும் மதியம், 1:00 மணி வரை, வெளியில் வர, அரசுஅனுமதி அளித்துள்ளது.அதனால், அத்தியாவசிய பொருட்களை வாங்க, பொது மக்கள், கூட்டம் கூட்டமாக வெளியில் வருகின்றனர். அதை தடுக்க, அரசும், போலீசும் போராடி வருகின்றன. அந்த போராட்டத்துக்கு உதவும் வகையில், வானிலை மையத்தின் எச்சரிக்கை அமைந்துள்ளது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிவிப்பு:கோடை வெயில் அதிகரிக்க துவங்கியுள்ளது.
மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விருது நகர், வேலுார் மாவட்டங்களிலும், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியிலும், அதிகபட்சமாக, 40 டிகிரி செல்ஷியஸ் வரை நேற்று வெயில்பதிவானது.இன்றும், நாளையும், மற்ற மாவட்டங்களை விட, இந்த, 10 மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, காலை, 11:00 முதல், பிற்பகல், 3:00 மணி வரை, பொது மக்கள் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். விவசாயிகள் உட்பட, அனைத்து தரப்பினரும், வெளியே வராமல், வீட்டில் இருக்க வேண்டும்.சென்னையில், காலை நேரங்களில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், மாலை நேரங்களில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்சமாக, 36 மற்றும் குறைந்தபட்சமாக, 27 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்.இவ்வாறு, வானிலை மையம் எச்சரித்துள்ளது.
திருச்சியில் அதிகம்!
மூன்று நாட்களாக, மாநிலம் முழுதும், வெயில் கொளுத்துகிறது. நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அதிகபட்சமாக திருச்சியில், 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் கொளுத்தியது.திருத்தணி, சேலம், மதுரை, 39; வேலுார், தர்மபுரி, 38; சென்னை விமான நிலையம், கோவை, 37; புதுச்சேரி, சென்னை நுங்கம்பாக்கம், 35 மற்றும் கொடைக்கானல், 21 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.
No comments:
Post a Comment