Tuesday, February 1, 2022

பண மழை பொழிய தயாராக தி.மு.க., - அ.தி.மு.க.,: மக்களின் நிஜ சேவகர்கள் வெற்றிபெற முடியுமா?

  ''மக்களோட மக்களா இருந்து, அவங்களுக்கு தேவையான உதவிகளை செஞ்சு கொடுத்தேன். வயசானவங்களுக்கு பென்ஷன், வீடில்லாத ஏழைகளுக்கு பட்டான்னு, செஞ்ச வேலைகளை பட்டியல் போட்டுக்கிட்டே போவேன். கொரோனா ஊரடங்கின் போதும் அப்படிதான்; வீடு, வீடாய் போய், நிவாரணப் பொருட்களை கொடுத்தேன்... எதிர்பார்த்த மாதிரி தேர்தல் வந்துடுச்சு. 'நாமினேஷன்' பண்ணணும். மக்கள்கிட்ட ஓட்டு கேட்கணும்...'

'இப்படியாக ஒரு இளைஞர் சொல்ல, அவரது நண்பரோ, 'அஞ்சு வருஷம் மக்களோடு மக்களா இருந்து இருக்கீங்க. அப்புறம் ஏன் பயப்படறீங்க. உங்களுக்கு தான் மக்கள் ஓட்டு,' என 'தைரியம்' கொடுக்கிறார்.
'அதாங்க இல்ல. என்னதான் நல்லது பண்ணாலும், 'ஓட்டுக்கு நோட்டு'ங்கற மனநிலைக்கு மக்கள் வந்துட்டாங்க. 500, ஆயிரம், இரண்டாயிரம்னு வாங்கி பழகிட்டாங்க. அந்தளவுக்கு என்னால செலவு பண்ண முடியாதே,' என்கிறார் பரிதாபமாக.
இந்த உரையாடல் இயல்பானது தான்; ஆனால், ஆழமானது. ஓட்டுக்கு பணம் கொடுக்க, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர். அதற்கான பட்ஜெட்டை ஏற்கனவே, திட்டமிட்டும் வைத்துவிட்டனர். கவுன்சிலர் பதவி என்பது கவுரவமாக மாறிவிட்டதால், எப்படியாகிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற மனநிலையில், வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.
ஆனால், சில கட்சியின் வேட்பாளர்கள், செலவு செய்வதற்கு பயந்து, தேர்தல் களத்தில் இருந்து, விலகியே விட்டனர்.'ஒவ்வொரு வார்டிலும், கட்சிக்காக போட்டியிட நிறைய பேரு இருக்காங்க. ஆனா, அ.தி.மு.க.,- தி.மு.க., மாதிரி செலவு செய்ய அவங்க தயாரா இல்ல. அதனால, எல்லா வார்டுலேயும் போட்டி போடாம, குறிப்பிட்ட சில வார்டுகள்ல மட்டும் தான் போட்டி போடறோம்,' என்கிறார் தே.மு.தி.க., முக்கிய நிர்வாகி ஒருவர்.
காங்., கட்சியின் நிர்வாகி ஒருவரோ, 'என் வார்டுல, நான் தான் போட்டியிட போறேன்ங்க. ஆனா, என்னை எதிர்த்து போட்டியிடறவங்க, ஓட்டுக்கு, 1,000 - 2,000 ரூபா கொடுக்க தயாராகிட்டாங்க. என்னால, அவ்வளவு தொகை செலவு செய்ய முடியாது; அதை திரும்பி சம்பாதிக்கிற சாமார்த்தியமும் இல்ல. இதனால், 'எங்க ஓட்டு விற்பனைக்கு அல்ல'ன்னு, வார்டு மக்கள்கிட்ட உறுதிமொழி வாங்கலாம்ன்னு இருக்கேன்,' என்றார்.
இப்படியாக, ஓட்டு வங்கியை தீர்மானிக்கிற ஆற்றலை 'நோட்டு' தான் பெற்றிருக்கிறது. ஆனால், அது, அந்த வார்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்குமா, என்றால்...பதில் சொல்ல சற்று சிந்திக்க தான் வேண்டும்.
பேரூராட்சி, நகராட்சிகளை பொறுத்தவரை அதிகபட்சம், 300 வீடுகள், 1000 வாக்காளர்கள்... இவ்வளவு தான், ஒரு வார்டு. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள், அறிமுகமே இல்லாத புதியவர்களாக இருக்க முடியாது. அத்தனை வீடுகளை சேர்ந்தவர்களுக்கும் அவர் தெரிந்தவர்களாக தான் இருப்பர்.அதனால், அவர்களின் பண்பை புடம் போடுவது, அவ்வளவு கடினமான காரியமாக இருக்காது.
இந்த மிக குறுகிய எல்லைக்குள், மக்களின் மனம் அறிந்து, நிலை புரிந்து பணியாற்றும் நல்ல வேட்பாளரை தேர்வு செய்வது மிக எளிது.
அதற்கு, வாக்காளர்களின் கண்ணை, பணம் மறைக்க கூடாது; அவர்களின், குணம் தான், நிறைக்க வேண்டும்.
May be a cartoon of standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...