நண்பர்களே
திருச்சியில் உள்ள
பெரிய கடைவீதியில் தொடர்ந்தார்போல
தினம் ஒரு இளைஞனின் போட்டோவோடு கூடிய
மரண அறிவிப்பு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இதயம் சரிந்தது இமயம் தகர்ந்தது என்றெல்லாம் போட்டு தினமும் நாள்தவறாமல் பார்க்க முடிகிறது...
எல்லோருமே சொல்லிவைத்தற்போல நாற்பது வயதுக்கும் குறைந்த இளைஞர்கள்
அந்தப்பகுதியில் வசிக்கும் பொற்கொல்லர் சமூகத்தை சார்ந்தவர்கள் இதில் அநேகர்...
அதிலும இப்போது லோக்கல்பாடி எலெக்ஷ்ன்
வேறு..சொல்லவே வேண்டியதில்லை....
குடித்து குட்டிச்சுவர் ஆகிறார்கள்.
அவர்களின் குடும்பம் என்ன ஆகும்? என்று நினைக்கும் போதே வயிற்றை கலக்குகிறது...
எல்லாவற்றிற்கும் எல்லா இளைஞர்களின் சாவுக்கும் ஒரே ஒற்றைக் காரணம்தான் #டாஸ்மாக்
ஒரு காலத்தில் மது வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு என்று மது பற்றியும்
புகை பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் அதாவது ஸ்மோக்கிங் ஈஸ் இன்ஜீரியஸ் டு ஹெல்த்
என்று மட்டும்தான் திரையரங்குகளில் விளம்பரங்கள் வரும்
இப்போது கலெக்டெர்களும் காவல்துறையுமே மதுக்கடைகளின் வரவு செலவு குறித்து வெறிகொண்டு திரிவதால்
அந்த விளம்பத்தையே தலைகீழாக மாற்றிவிட்டார்கள்....
சிகரெட் உயிரைக்குடிக்கும்
மது உடலுக்கு கேடு தரும்
என மாற்றிவிட்டார்கள்
எதைப்பற்றியும் கவலைப்படாத தமிழ்ச்சமூகம் இது பற்றி நினைக்கவும் இல்லை...
தமிழகத்தில்
டாஸ்மாக் மது லட்சக் கணக்கானவர்களின் உயிரை குடித்து விட்டது.
நாள் தோறும் குடித்தவண்ணமுள்ளது
ஒரு விஷயம் உங்களுக்குத்
தெரியுமா?
சமீபத்திய
யுனிசெப் ஆய்வில் இந்தியாவிலேயே
மிக அதிக விதைவைகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் சொல்லப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுவில் மிதமிஞ்சிய லாபவெறி நோக்கில் 45% ஆல்கஹால் கலக்கப்படுகிறது.
இது குடிப்பவர்களின் உடல் நிலையை படிப்படியாக சீரழிப்பதுடன் விரைவில் உயிரை பறித்துவிடுகிறது.
அரசாங்கத்திற்கு முக்கிய வருமானம் என்ற காரணம் சொல்லி,
இந்த மதுப் பயன்பாடு நியாயப் படுத்தப்பட்டாலும்,
உண்மையில் இந்த மதுபானத் தாயாரிப்பில் ஈடுபட்டுள்ள இன்னாள்,முன்னாள் ஆட்சியாளர்கள்
மற்றும் பல கட்சி அரசியல்வாதிகளின் லாபவேட்டைக் களமாக டாஸ்மாக் மது கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
பனை,தென்னை மரத்தில் ஏறிக் கள் இறக்கி சொந்த பயன்பாட்டுக்கோ, நண்பர்கள் உறவினர்க்கோ கொடுப்பது குற்றமாகாது.
மாறாக விற்பனைக்கு மட்டுமே தடை என்பது தான் தமிழகத்தில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்தது.
ஆனால்,எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில் தான் பனை ஏறுவதே குற்றமாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் குறிப்பிட்ட சில சாராய உற்பத்தியாளர்களின் லாப நோக்கத்திற்கு தடையற்ற வணிகம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
தமிழகத்தில் சுதந்திரம் பெற்ற போது சுமார் 40 கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்தன.
எம் ஜி ஆர் தடை அறிவித்த போது கூட சுமார் 30 கோடி பனை மரங்கள் இருந்தன.
ஆனால், தற்போது வெறும் மூன்றரைக் கோடிப் பனை மரங்களே உள்ளன.
அவையும் கூட போதுமானப் பயன்பாடு இல்லாத நிலையில் வெட்டி செங்கல் சூளைகளுக்கு விற்கப்படுகின்றன.
பனை என்பது தமிழகத்தின் தேசிய மரமாகும்.
பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும் என்பது நம்முடைய ஆழ்ந்த நம்பிக்கையாக இருந்தது.
பனையிலிருந்து பதனீர்.பனங்கிழங்கு, நுங்கு,பனைவெள்ளம்,பனங்கற்கண்டு..மற்றும் நூற்றுக்கணக்கான கைவினைபொருட்கள் கிடைக்கின்றன.
தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்த பனையை
தீண்டத் தகாததாக மாற்றிய சூழ்ச்சி காரணமாக இன்று
நாம் இயற்கை சார்ந்த வாழ்க்கையிலிருந்தே அன்னியப்படுத்தப்பட்டுள்ளோம்.
கேரளாவில் கள்ளுக்கு அனுமதி தரப்பட்டு ஏழாயிரத்திற்கு மேற்பட்ட கள்ளுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால்,
அங்கு பனை,தென்னை விவசாயம் தழைத்து ஓங்கியதோடல்லாமல்,
25000 பனைஏறும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இத் தொழிலாள்ர்கள் நாள்தோறும் ரூ1000 முதல் ரூ2000 வரை வருமானம் ஈட்டுகின்றனர்.
குடிப்பவர்களின் உடல் நிலையும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
பீகாரிலும் இது தான் நிலை.ஏனெனில், கள்ளில் ஆல்கஹாலின் பங்கு வெறும் 4.5% தான்!
அத்துடன் பனங்கள்ளில் நல்ல தரமான குளுகோஸ்,சுக்ரோஸ்,புரதம் எலும்பிற்கு பலம் தரும் கால்சியம் மற்றும் விட்டமின்கள் உள்ளன.
அதனால் தான் சித்த மருத்துவர்கள் பனங்கள்ளின் மருத்துவ குணங்களை பட்டியலிட்டு வைத்துள்ளனர்.
இது உடலுக்கு குளிர்ச்சி மற்றும் பலம் தரவல்லது.
தமிழக அரசு அரை முன்பு ஒருமுறை மனதோடு தென்னையிலிருந்து நீரா இறக்க அனுமதியளித்தது.
ஆனால் ஏகப்பட்ட கெடுபிடிகள்,கண்டிஷன்கள் போட்டு
அனுமதி கேட்டு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான விவசாயிகளில் வெறும் 19 பேருக்கு மட்டுமே அனுமதி தந்தனர்.
அதிலும் மூன்று நிறுவனங்கள் மட்டுமே இன்று விற்பனைக்கு அனுமதி பெற்று நாளொன்றுக்கு மொத்தமே 1500 லிட்டர் நீரா மட்டுமே உற்பத்தி செய்யும் அவல நிலை உள்ளது.
இது தான் பதனீர் விஷயத்திலும் நடக்கிறது.
நீராவும், பதநீரும் பன்னாட்டு குளிர்பான விற்பனைக்கு பாதகமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் தான் ஆட்சியாளர்கள் அக்கரை காட்டுகிறார்கள்.
2009 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் விவசாயிகளின் தொடர் வேண்டுகோள் காரணமாக
கள் பயன்பாடு கொண்டு வருவது குறித்து நீதிபதி கே பி சிவசுப்பிரமணியம் கமிட்டி ஒன்று அமைத்து அறிக்கை பெறப்பட்டது.
ஆனால்,டாஸ்மாக் ’லாபி’ காரணமாக இன்று வரை அந்த அறிக்கை வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டுவருகிறது.
அந்த அறிக்கையின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தினால் டாஸ்மாக் என்ற பொற்குவியல் தங்கள் கைகளிலிருந்து நழுவிவிடுமோ?
என்ற அச்சமே ஆட்சியாளர்களை தடுத்துள்ளது.
நான் நீண்ட நெடுங்காலமாக காந்தியத்தில் ஈடுபாடுள்ளவன்.
காந்திய இயக்கங்களோடு தொடர்பில் உள்ளவன்.
குடிப்பதை குற்றமாக கருதும் மனப்போக்கில் தான் நானும் நீண்டகாலமாக இருந்தேன்.
ஆயினும் நான் சமூக யதார்த்தம் சார்ந்தும்,தற்போது டாஸ்மாக் மதுவால் ஏற்பட்டுவரும் பேரழிவை உடனே தடுப்பதற்கான மாற்று ஏற்பாடாகவும்
தான் இயற்கை பானமான கள்ளை முன்மொழிகிறேன்
எப்படி பசு மற்றும் எருமை மாடுகள் வளர்க்கும் விவசாயி அதிலிருந்து பால் கறந்து விற்கிறாரோ,
அது போல பனை தென்னை விவசாயிகள் மரத்திலிருந்து கள் இறக்கி விற்கலாம் என அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
அதற்கு ஆந்திராவைப் போல மரங்களுக்கு வரி விதிக்கலாம்!
அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
குடிப்பது என்பது மனிதகுலம் தோன்றியதிலிருந்து இன்று வரை எல்லா சமூகங்களிடமும்,
எல்லா இனக்குழுக்களிடமும்,
எல்லா சாதி மக்களிடமும்,உலகின் எல்லா இடங்களிலும் தடுக்கப்பட முடியாமல் தொடர்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பயனில்லாமல் அதை தடுக்கும் முயற்சிகளை மேற் கொள்வதை விடவும் அதை கணிசமாக கட்டுப்பாட்டிற்குள் வைப்பது,
முறைப்படுத்தி ஒழுங்குபடுத்துவது,
18 வயதுள்ள குழந்தைகளின் கைகளில் மது கிடைக்காமல் பார்த்துக் கொள்வது
என்பதில் ஆத்மார்த்தமாக ஒரு அரசாங்கம் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது தான் சரியாக இருக்கும்!
ஆகவே,கள்ளுக்கு அனுமதி என்பது நடைமுறை யதார்த்தங்கள்,
விவசாய வளர்ச்சி,கிராமப் பொருளாதார நலன்கள், வேலைவாய்ப்புகள்,
மற்றும் மக்களின் உடல் நலன் தொடர்பான அணுகுமுறை
என்பதை கிஞ்சித்தும் தயக்கமின்றி உணர்ந்து விரைவில் நடைமுறைபடுத்த வேண்டும்
இது தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு,பனை தொழிலாளர்கள், பனை சார்ந்த கைவினைக் கலைஞர்கள், கோடிக்கணக்கான விவசாயிகளின் வேண்டுகோளாகும்!
நல்லவர்கள் கட்டாயம் செவி சாய்ப்பார்கள்.
நல்லவர்கள் என்ற வார்த்தைக்கு அடிக் கோடிட்டுக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment