Thursday, September 20, 2018

முன்வினைப் பயன் என சும்மாவா சொன்னார்கள்.

💐💐💐💐💐
நடப்பது நடந்தே தீரும்🌹
என்ன வசதி வாய்ப்பு இருந்தாலும் அன்று நாம் சாப்பிடகூடாது என்ற விதி இருந்தால் அனைத்தும் இருந்தும் எதுவும் சாப்பிட முடியாத விதி இருந்தால் விதியே வெற்றி பெறும்...
நமது ஒவ்வொரு செயலும் கணக்கொன்றை உருவாக்கும் அல்லது பழைய கணக்கொன்றை தீர்க்கும்.
வாரியார் அவர்களின் கதை தொகுப்பில் இருந்து.....
பிறவிகளின் வழியே விதி .....
ஒரு குளக்கரையில் ஓரு அந்தணர் மான் தோல்மீது அமர்ந்து காயத்திரி மந்திரம் ஜெபம் செய்துகொண்டிருந்தார்.
ஒரு புலையன் பசுவை வெட்டும்பொருட்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தான்.
அறிவுள்ள அப்பசு, நம்மைக் கொல்லும்பொருட்டே இவன் கத்தியைத் தீட்டுகின்றான் என்று அறிந்து கட்டுத் தறியை அறுத்துக்கொண்டு அக்குளக்கரை வழியே ஓடியது.
அந்தப் புலையன் பசுவைத் தேடிக்கொண்டு வந்தான்.அந்த ஜெபம் புரியும் பிராமணனைப் பார்த்து, “ஐயரே, பசு இந்த வழியாகச் சென்றதா?” என்று கேட்டான்.
ஜெபம் செய்துகொண்டிருந்த அந்தணர் இருகரங்களையும் நீட்டி பசு ஓடின வழியைக் காட்டினார். அவர் காட்டிய வழியே சென்று புலையன் பசுவைக் கொலை செய்துவிட்டான்.
அடுத்த பிறவி...🌹
வட நாட்டில் தாழ்ந்த குலத்தில் சாருகர் என்பவர் பிறந்தார்.
சாருகர் என்ற குலத்தில் பிறந்தவர் உயர்ந்த குணங்களை உடையவராக விளங்கினார். அதனால் ஸஜ்ஜன சாருகர் என்று பெயர் பெற்றார்.
அவர் இளமையிலிருந்தே உத்தம குணங்களுக்கு உறைவிடமாகத் திகழ்ந்தார்.
அடக்கம், பொறுமை, சாந்தம், ஈஸ்வர பக்தி ஒழுக்கம், பண்பு முதலிய நற்குணங்களை அணிகலமாக அணிந்த அவர் ஆசார சீலராக இருந்தார்.
அவர் பண்டரிநாதனை உபாசனை புரிந்துவந்தார். பண்டரி நாதா! பண்டரிநாதா! எனு கூறி அலறுவார்.”விட்டல், விட்டல்” என்று பஜனை செய்வார்.
இரவு பகலாக எட்டெழுத்தை ஓதி உள்ளம் உருகுவார்., கண்ணீர் பெருகுவார்.
பண்டரீபுரம் பூலோக வைகுந்தம். ஸஜ்ஜன சாருகருக்கு பண்டரீபுரம் சென்று விட்டல நாதனைச் சேவிக்க வேண்டும் என்ற தாகம் மேலிட்டது.
அந்தக் காலத்தில் ரயில் பஸ் முதலிய வாகன வசதிகள் கிடையா. சாருகர் பஜனை செய்துகொண்டு நடந்து போகிறார். பகல் முழுதும் நடப்பார். பொழுதுபோன ஊரில் பிட்சை எடுத்து உண்டு சத்திரங்களில் தங்கி பஜனை செய்வார்.
ஒருநாள் ஒரு நகரத்தில் தங்கினார்.இரவில் வேறு இடமின்மையால் ஒரு தனவந்தரின் வீட்டுத் திண்ணயில் அமர்ந்து ஜெபம் செய்துகொண்டிருந்தார்.
இரவு ஒரு மணி. நகரம் இருள் சூழ்ந்திருந்தது. ஒலியடங்கி இருந்தது. அங்கங்கே நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன.
அந்த வீட்டுப் பெண் சிறுநீர் கழிக்க கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். சாருகரைக் கண்டாள். அவர் மீது மையல் கொண்டாள். அவரருகே சென்று, “தாங்கள் பூலோக மன்மதரைப் போல காட்சி தருகிறீரே! தாங்கள் யார்? என்று கேட்டாள்.
அம்மா! வணக்கம், நான் ஒரு யாத்ரீகன்.என் பேர் சாருகன். நான் பண்டரிபுரம் போகின்றேன்.
அந்த பெண்மணி இவரிடம்..என் உள்ளததைக் கொள்ளைகொண்ட உத்தமரே! தாங்கள் என் இதய ராஜா. நான் உங்கள் இதய ராணி. இந்த விநாடி முதல் தாங்கள் என் இன்னுயிர்க் கணவர்.”என அவரை ஆசையுடன் நெருங்குகிறாள்..
அம்மா! இந்த உலகம் கடுகளவு. பாவத்தால் வரும் துன்பம் மலையளவு.
நான் மனத்தினாலும் மாதரைத் தீண்டாதவன்.
பிரம்மச்சாரி.
தாங்கள் உங்களுடைய கணவருடன் வாழ்வதுதான் கண்ணியம்; கற்பு நெறியில் நிற்பதுதான் புண்ணியம்...என கூறுகிறார்..
அவள் வெறி பிடித்தவளைப் போல ஓடி கொடுவாளை எடுத்து அயர்ந்து தூங்குகின்ற கணவனுடைய தலையை வெட்டித் துணித்தாள்.
“என் உயிரினும் இனிய உத்தமரே! என் கணவரைக் கொன்றுவிட்டேன். இனி நீர்தான் என் கணவர்”—என்று கூறி அவரைக் கட்டித் தழுவ வந்தாள்.
இந்தக் கொடுஞ்செயலைக் கண்டு சாருகர் நடுநடுங்கினார்.
ஐயோ! கணவரைக் கொன்ற இவள் ஒரு பெண்ணா? பூதமா?பேயா? என்று எண்ணித் திண்ணையை விட்டுக் குதித்து ஓடினார்.
அந்தப் பெண் அவரைத் தொடர்ந்தாள்.சாருகரைப் பற்ற முடியவில்லை. நான்கு தெரு கூடுமிடத்தில் நின்று அப்பெண் ஓவென்று கதறி ஓலமிட்டாள். அங்கு உறங்கியிருந்தவர்கள் கூடினார்கள்.
பெரியோர்களே! இந்தப் பாவி எங்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். நான் சிறு நீர் கழிப்பதற்காக கதவைத் திறந்து வெளியே வந்தேன். என் கணவரை வெட்டிவிட்டு என்னைக் கற்பழிக்க என்னைத் துரத்தி வந்தான் என்று கூறி கதறியழுதாள்.
ஊர்க்காரங்க. .சாருகரைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தினர். காவல் துறையினர், அவரைச் சிறையில் அடைத்தார்கள்.
பொழுது விடிந்தபின். அவ்வூர் சிற்றரசன் வழக்கை விசாரித்தான். “எல்லாம் பாண்டுரங்கன் அறிவான். நான் ஒரு குற்றமும் செய்யவில்லை: என நடந்ததை உள்ளபடி சொன்னார்.
குற்றம்புரிந்தவன் ஒப்புக்கொள்வானா? என்று எல்லோரும் சொன்னார்கள்.
சாருகருடைய கரங்களைத் துண்டிக்குமாறு அரசன் ஆணையிட்டான். சாருகருடைய இரு கரங்களும் துண்டிக்கப்பட்டன. குற்றம் செய்யாத குணப் பெருங்குன்றான அவர் துடிதுடித்தார்.
பின்னர் எங்கும் தங்காமல் பண்டரீபுரம் வந்து சேர்ந்தார்.
அன்றிரவில் கோயில் அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், தக்கார்களின் கனவில் பண்டரீநாதர் தோன்றி,
“நமது பரம பக்தனான ஸஜ்ஜன சாருகன் வருகிறான். கோயில் மேளம், குடை, சுருட்டி, பூரண கும்பம் வைத்து உபசரித்து அழைத்து வாருங்கள்” என்று பணித்தருளினார்.
எல்லோரும் வந்து சாருகருக்கு கோவில் பரிவட்டம் கட்டி கனவில் பாண்டுரங்கன் கூறியதைச் சொல்லி பேரன்பு காட்டினர்.
சாருகர் இதனைக் கேட்டு அழுதார். பாண்டுரங்கன் திருவுருவம் முன் நின்றார்.
கைகளில்லாமையால் தொழ முடிய வில்லையே என்று கதறினார்.”தேவ தேவா! உன்னை என்னடியார் என்று அருள் புரிந்தனையே. அன்று அரசன் என் கரங்களை வெட்டுமாறு ஆனையிட்டானே.
அப்போது இவன் குற்றமற்றவன் என்று அசரீரியாகவாது ஒரு குரல் கொடுத்திருக்கலாமே. அன்று என்னைக் கை நழுவவிட்டீரே.
இது நியாயமா? இதுதான் உன் கருணையா? இது தருமமா? நான் இப்பிறவியில் எவருக்கும் எந்தத்தீங்கும் செய்யவில்லையே. உன்னைக் கையெடுத்துக் கும்பிடக்கூட முடியவில்லையே என்று சொல்லி அழுதார்.
பாண்டுரங்கண் கூறினார்: “அன்பனே அழாதே. அவரவர் வினைகளை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும். அன்று ஒரு நாள் குளக்கரையில் ஓரந்தணன் காயத்ரி மந்திரம் ஜெபித்துக் கொண்டிருந்தான்.
பசுவை வெட்ட வந்த புலையன் பசு ஒடிப்போன வழியைக் கேட்டவுடன் இரு கரங்களையும் நீட்டி அது போன பக்கத்தைக் காட்டினாய்,புலையன் அவ்வழியே சென்று பூலோக காமதேனுவாகிய பசுவைக் கொன்று விட்டான்.
நீதான் அந்த காயத்ரி ஜபம் செய்த அந்தணன். பசுவின் கொலைக்குக் காரணமான உனது இரு கரங்களும் வெட்டப்பட்டன.
கொலையுண்ட பசுதான் அப்பெண் (தனவந்தனின் மனைவி); பசுவைக் கொலை செய்த புலையன்தான், அவளுடைய கணவன். ஆகையால் இவை அனைத்தும் முற்பிறப்பில் செய்த தீவினையால் வந்தவை என்று கூறினார்.
வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்..
அவன் எப்போதும் எதிலும் நம்மை வருத்த செய்ய மாட்டான்.
விதிக்குக் கட்டுப்பட்டுத்தான் மனிதன் வாழ வேண்டும்.
உன் செயலில் நீ கவனம் செலுத்து..
மற்றவை நடக்க வேண்டியவை நடந்தே தீரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...