அரசு நிலத்தை பாதுகாக்க தவறியது குறித்து விசாரணை நடத்தி, கடமை தவறி இருந்தால், அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை தெற்கு தாலுகா, வெள்ளலுார் கிராமத்தில், ௩௬ சென்ட் நிலத்துக்கு, பட்டா வழங்க, நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடக் கோரி, ஜெயகுமார் என்பவர், மனு தாக்கல் செய்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
வருவாய் ஆவணங்களில் உள்ள தவறுகளை சரி செய்ய, விண்ணப்பம் அளித்திருந்தேன். வருவாய் கோட்ட அதிகாரியின் சட்டவிரோத கோரிக்கையை ஏற்காததால், எங்கள் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டார். மாவட்ட வருவாய் அதிகாரியின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி, நில நிர்வாக ஆணையரிடம் முறையிடப்பட்டது.அந்த மனுவை, நில நிர்வாக ஆணையர் நிராகரித்து விட்டார். என் பெயருக்கு, பட்டா வழங்கும்படி, நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர், ஆக்கிரமிப்பாளர் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதனால், இந்தப் பிரச்னையை, வருவாய் அதிகாரிகளுக்கு திருப்பி அனுப்ப தேவையில்லை. மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு, ஆக்கிரமிப்புகள் பற்றிய விபரங்கள் அனைத்தும், நன்கு தெரியும். அரசு நிலம், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் வழியாக தான், கள அதிகாரிகள் கடந்து செல்கின்றனர். கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் அதிகாரி களுக்கும், ஆக்கிரமிப்புகள் பற்றி நன்கு தெரியும். அப்படி இருந்தும், சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற, கேள்வி எழுகிறது.
ஊழல் காரணமாக, ஆக்கிரமிப்புகளை வருவாய் அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். அரசியல் நிர்ப்பந்தங்கள், செல்வாக்குக்கு பணிந்தும் அனுமதிக்கின்றனர்.
ஒரு நிலம், புறம்போக்கு நிலமா, நீர் நிலைகளில் உள்ளதா... என்பதை, சாதாரண மக்கள் அறிந்திருக்க முடியாது. மாவட்ட நிர்வாகம், தாலுகா அலுவலகங்களில் உள்ள ஆவணங்களில் தான், இந்த விபரங்கள் இருக்கும். அதனால், அந்த அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களின் உதவி இல்லாமல், ஆக்கிரமிப்பு செய்ய முடியாது.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பொது மக்களுக்கும், நிர்வாகத்துக்கும் பாதகமாக முடிந்து விடும். எனவே, நில நிர்வாக ஆணையர் பிறப்பித்த உத்தரவு, உறுதி செய்யப்படுகிறது. நான்கு வாரங்களில், மனுதாரரை, அரசு நிலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். கோவை போலீஸ் ஆணையர், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அரசு நிலத்தை பாதுகாக்க தவறிய, வருவாய் அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தி, கடமை தவறி இருந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிஉத்தரவிட்டார்.
No comments:
Post a Comment