Friday, October 5, 2018

"பகுத்தறிவு பகலவன்" சோ ராமசாமி ஒருவரே..

நகைச்சுவை நடிகர், நடிகர்களில் முதன் முதலாக அரசியலை சினிமா காட்சிகளில் போட்டு வறுத்தெடுக்கும் பாணியினை எம்.ஆர் ராதா தொடங்கி வைத்தாலும், பின்னாளில் அதனை உச்சமாக்கினவர் சோ ராமசாமி அவர்தான் தொடங்கி வைத்தார்
Image may contain: 1 person

கட்டுகடங்காத பொய்களும், இன்னும் பலவிதமான ஏமாற்றுவேலைகளும் பெருகிய காலத்தில் அவர் குரல் உண்மையினை ஓங்கி ஒலித்தது
காங்கிரஸ் அவருக்கு பிடிக்காது எனினும், காமராஜருக்கு அவர் பக்கபலமாக நின்றதை மறுக்கமுடியாது. இவ்வளவிற்கும் காமராஜர் சோவின் நாடகங்களை தடை செய்த காலமும், அதை எதிர்த்து சோ வெற்றிபெற்று பின் காமராஜரையே அழைத்து வைத்து நாடகம் நடத்திய காட்சிகளும் உண்டு.
Image may contain: one or more people and people sitting
காமராஜரை முழுக்க புரிந்தவர் சோ, அதனால்தான் அவர் இறந்த அன்று, இந்திராவும் கலைஞரும் காமராஜர் உடல் அருகே நின்றபொழுது ஆத்திரத்தின் உச்சியில் எழுதினார் சோ
"யார் காமராஜரை கொன்றார்களோ அவர்களே அஞ்சலியும் செலுத்துகின்றார்கள்.... என அவர் எழுதிய வரிகள் சாகா வரம் பெற்றவை.
நல்ல அறிவாளியும், சிந்தனையாளரும், தொலைநோக்கு பார்வையும் எல்லாவற்றிற்கும் மேல் மிகுந்த தைரியமும் கொண்ட எழுத்தாளர் அவர்
திமுக புரட்சி காலம், மிசா காலம், புலிகள் கொலைக்கார காலம் என எல்லாவற்றிலும் அவரின் பேனா சீறிகொண்டே இருந்தது
எல்லாவற்றையும் விட மேலாக வணங்க வேண்டியது அவரின் நாட்டுபற்று
திராவிட போலிகள் பிரிவினை வாதம் அது இது என பேசும்பொழுது, பகுத்தறிவு பேசும்பொழுது அவர் மத நம்பிக்கை பேசினார்
அவர் கொடுத்த துணிச்சலின் பேரிலே கண்ணதாசன் போன்றவர்கள் பின் அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற காவியங்களை எழுத முடிந்தது, ஜெயகாந்தன் போன்றோர் தேசியம் பேச முடிந்தது.
அவரிடம் மத நெறி உண்டே தவிர மதவெறி என்பது கிஞ்சித்தும் கிடையாது, இந்துமதத்தை சாடியே வளர்த்த போலிகளை அவர் கண்டித்து, கிண்டலடித்து உண்மையினை எழுதினார்
இன்றுவரை அவர் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்கு பதில் எந்த பகுத்தறிவாளனிடமும் இல்லை
பிராமணன் எங்கே ஆண்டான், ஒரு பிராமண அரசனை காட்டுங்கள் என அவர் கேட்டதற்கும், ராமன் சத்திரியன் கண்ணன் வேறு சாதி ஆனாலும் இந்துமதம் அவர்களை கடவுளாக காட்டவில்லையா என கேட்டதற்கும் யாரிடமும் பதில் இல்லை
புலிகளை தமிழகம் கொண்டாடிய போது 1986லே எச்சரித்தது அவர்தான், பெரும் தைரியமாக அவர்களை எதிர்த்து எழுதினார்
Image may contain: 1 person, sitting, standing and indoor
அவர் வீட்டுக்கு மிக அருகில்தான் பத்மநாபா கொலை நடந்தது, அப்பொழுதும் அவர் புலிகளை கண்டித்து எழுதினார்
பின்னாளில் அவர் கணித்து எழுதியதுதான் நடந்தது, புலிகள் அழிந்தும் போயினர்
பத்மநாபா அஞ்சலியின் பொழுது இன்னமும் பொறுங்கள் பல அஞ்சலிகளை செய்யவேண்டி இருக்கின்றது என அவர் எச்சரித்த பின்புதான் ராஜிவ் கொலை எல்லாம் நடந்தது.
இவ்வளவிற்கும் கொழும்பு சென்று சிங்கள அரசிடம் புலிகளுக்காக வாதாடியவர் சோ. சிங்கள அடக்குமுறை இன்னும் பல புலிகளை உருவாக்கும் என தீர்க்கமாக சொன்னவர் அவர்
ராஜாஜிக்கு பின் மிக சிறந்த தமிழக அறிவாளி சோ என்பதில் மாற்று கருத்தே இல்லை..
கலைஞரை அரசியல் சாணக்கியன் என்பார்கள், சாணக்கியன் இன்ன்னொருவனை திறம்பட உருவாக்குவானே தவிர தான் சென்று சிம்மாசனத்தில் அமரமாட்டான்
அப்படி சாணக்கியன் சோவினால் உருவாக்கபட்டவர் தான் மறைந்த ஜெயலலிதா, இந்திரா ஜெயலலிதாவினை கொண்டாட முதல் காரணமாக இருந்தது சோ எழுதிகொடுத்த எழுத்துக்கள்
ஜெயலலிதா பிரகாசிக்க அவரும் காரணம், பின்பு தமாகா அமையவும் அவரே காரணம், பின்பு விஜயகாந்தினை எதிர்கட்சி தலைவர் என அமர வைத்ததிலும் சோ பங்கு உண்டு
Image may contain: 2 people
தமாகா உருவானதிலும் அவருக்கு நிச்சயம் பங்கு உண்டு
வயது இருந்திருந்தால் நிச்சயம் இன்னொரு அரசன் அல்லது அரசியினை அவர் உருவாக்கி கொடுத்திருப்பார், ரஜினிகாந்தே இப்பொழுது சோ இருந்திருந்தால் ஆயிரம் யானை பலம் எனக்கிருக்கும் என சொன்ன செய்தி சாதாரண விஷயம் அல்ல.
எத்தனை அரசியல் பத்திரிகைகள் வந்தாலும் துக்ளக் இடமே தனி, இன்னொரு பத்திரிகையாளன் இவ்வளவு துணிச்சலாக வரமாட்டான், வந்தாலும் சோ சொல்லும் விதத்தின் நக்கலும் அழகும் ஆழமும் இன்னொருவருக்கு வராது.
கலைஞரை அவர் காய்ச்சி எடுத்தது போல இன்னொருவன் எழுத முடியாது, ஆனால் இருவரும் அவ்வப்போது சந்திப்பார்கள்.
சோவின் ஏராளமான நகைச்சுவை தெறிப்புகள் வந்து போகின்றன,
தமிழுணர்வை இப்போது வெளிப்படுத்த ஒரே வழி புலிகளை ஆதரிப்பது என அவர் சொன்னபொழுது சிரிக்காதோர் யாருமில்லை
இன்னும் ஏராளமான பேட்டிகள், கவிஞர் கனிமொழி பற்றி என கேட்ட்பொழுது "நானும் மனோரமாவுடன் சேர்ந்து ஆடிய நடனங்களுக்கு நானே பாடெழுதியிருக்கேன் ஸ்ஸ்க்கு ஸ்ஸ்கு இஸ்கானா என , என்னையும் கவிஞர் என அழையுங்கள்" என அவர் சொன்னபொழுது புன்னகைக்காதோர் யார்?
"சீனா பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொடுப்பது கவலையே இல்லை, காரணம் சீன தயாரிப்பு பற்றி எல்லோருக்கும் தெரியும், ஆனால் அமெரிக்கா கொடுத்தால் நாம் கவனமாக இருக்க வேண்டும்.." என சொன்ன இடமாகட்டும்
கம்யூனிஸ்டுகள் மாஸ்கோவில் மழை பெய்தால் சென்னையில் குடை பிடித்த காலத்தில், "கருப்பு பணம் போல சிகப்பு பணமும் இருக்கும் போல.." என சொன்னதாகட்டும் , தனித்து நின்றார் சோ.
Image may contain: 4 people, people smiling
ஏராளமான எழுத்துக்கள், அர்த்தமுள்ள வாதங்கள், குறும்பான பதில்கள்
இறுதி பேட்டிகளில் அவரிடம் கேட்டார்கள், காங்கிரசினை கண்டிப்பவர் நீங்கள், தற்போதைய காங்கிரசின் பின்னடைவினை எப்படி காண்கின்றீர்கள்?
சோ சொன்னார்
"காங்கிரஸ் பின்னடைவது நாட்டிற்கு நல்லதல்ல, தேசிய ஆளும் கட்சிக்கு ஒரு தேசிய கட்சி எதிர்கட்சியாக இருப்பதே இந்தியாவிற்கு நல்லது"
இதுதான் சோ
தமிழகத்தில் இது ஒரு வகையான உதிர் காலம், பெரும் மரங்கள் எல்லாம் சாய்ந்து பெரும் வெற்றிடம் உருவாகிகொண்டிருக்கின்றது
அம்மரங்களில் இளைபாறிகொண்டிருந்த பறவைகள் எல்லாம் கதறிகொண்டு எதிர்காலம் தெரியாமல் கலங்கி திரிகின்றன‌
நம் மனங்களின் கலக்கம் போல‌
கலைஞர், சோ ராமசாமி இல்லாத அரசியல் பக்கங்களை படிக்கவே மனம் ஒப்பவில்லை, இதில் பழனிச்சாமியின் எழுச்சியுரை என்றொரு பக்கம் வருகின்றது அத்தோடு அந்த திசைக்கே ஒரு கும்பிடு போட்டு ஓடிவிடலாம் போலிருக்கின்றது
நிறைவாழ்வு வாழ்ந்துவிட்டு , நிறைவாக எழுதிவிட்டு நாட்டுபற்றும் அதற்குரிய எழுத்தும் எப்படி இருக்கவேண்டும் என்பதனை சொல்லி சென்றதற்காக சோவிற்கு நன்றிகள்
போலி பகுத்தறிவாளர்களை நார் நாராக கிழித்து காட்டியதற்காய் நன்றிகள்
புலிகளின் போக்கு எதில் முடியும் என அன்றே சொன்னதற்காக நன்றிகள், நீங்கள் சொன்னதை படித்ததால் இந்த முள்ளிவாய்க்கால் எல்லாம் நடக்கும்பொழுது பெரும் கலக்கம் எல்லாம் வரவே இல்லை. இப்படித்தான் நடக்கும் என அன்றே எச்சரித்தது நீங்கள்.
அடிக்கடி சித்திர குப்தன் வேடத்தில் சினிமாவில் எமனை கலாய்த்தீர்கள், நன்றாக கலாய்த்தீர்கள்
எமலோகம் இப்பொழுது விழுந்து விழுந்து சிரித்துகொண்டிருக்கும்
நாமெல்லாம் அவரை நினைத்து நினைத்து சிரித்து கொண்டிருக்கின்றோம், அழுகை வருகின்றது அதை துடைத்துவிட்டு சிரித்து சிரித்து அழுதுகொண்டிருக்கின்றோம்
"முகமது பின் துக்ளக்" நாடகம் இன்று உண்மை
அரசாங்கமாகவே நடக்கின்றது, அதை நினைத்து சிரிக்கின்றோம் பின் அழுகின்றோம்
"காதலா காதாலா" படத்தில் உடல்நிறைய நகை அணிந்துகொண்டு பார்வதி வேடத்தில் ரம்பா வந்து நான் பார்வதி என்கின்றார்
"பார்வதிமாதிரி இல்லையே, உடன்பிறவா சகோதரிமாதிரில்ல இருக்கு.." என சொன்ன அந்த காட்சி மறக்க முடியுமா?
தங்க பதக்கத்து வைகை வளவனை மறக்க முடியுமா?
தன் பணக்கார திமிர்பிடித்த தகப்பன் வேலைகாரர்களை படுத்தும் பாட்டை கண்டு, காரில் செல்லும்பொழுது டிரைவரை பிடித்து "டேய் எங்கப்பா முன்னால சரிக்கு சமம் அமர்ந்து வண்டியோட்ட எவ்வளவு தைரியம் ராஸ்கல், எழுந்து நின்று காரோட்டு" என மிரட்டிய காட்சி
எதைத்தான் மறக்க முடியும்?
துக்ளக்கின் எழுத்துக்கள் யாருக்கு மறக்கும்? இந்திய அரசியல் வரலாற்றை வெகு எளிதாக பதிந்து வைத்திருக்கும் பொக்கிஷம் அது. ஆணித்தரமான உண்மைகளை அப்படி பதிந்திருப்பார்
கலைஞர் இல்லா முரசொலியும், சோ இல்லா துக்ளக்கும் தெய்வமில்லா தேர், உப்பில்லா சோறு
அப்படி ஒரு அசாத்திய அரசியல், காமெடி ஞானி இனி வரமாட்டான். அவர் காலத்தில் வாழ்ந்ததற்காக சந்தோஷபடலாம் அவ்வளவுதான்
அந்த சினிமா காட்சி கண்ணுக்குள்ளே நிற்கின்றது
சோ ராமசாமியினை பொலீஸ் கைது செய்து இழுத்து செல்கிறது, சோ கெஞ்சுகின்றார்
"சார் சார் என்ன பாளையங்கோட்டை ஜெயில்ல போடுங்க சார், பிளீஸ் போடுங்க சார்"
"ஏன்யா?" என காவலர் கேட்கின்றார்
சோ சொல்கிறார் "அப்படியே 4 கரப்பான் பூச்சி, விஷமில்லா 2 பாம்பும் போடுங்க சார் எவ்வளவு லஞ்சமும் தாரேன்"
குழம்பி போய் காவலர் கேட்கின்றார் "ஏன்யா அங்க, அதுவும் கரப்பான் பூச்சி எல்லாம்?"
சோ முட்டைகண்ணை உருட்டி சொல்கின்றார்
"சார் நானும் பாளையங்கோட்டை சிறையினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே அப்படி பாட்டு எல்லாம் பாட ஆசையா இருக்கு சார்"
இன்று சோ ராமசாமி பிறந்தநாள்.
இதயம் கனத்த அஞ்சலிகளுடன் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டே அந்த அற்புதமான‌ தேசியவாதிக்கு ஆழ்ந்த அஞ்சலி.
தமிழகம் கண்ட மிகசிறந்த நாட்டுபற்றுமிக்க பத்திரிகையாளரும், தன் கருத்துக்களை கொஞ்சமும் அச்சமின்றி இறுதிவரை சொன்ன, போலிகளை தோலுரித்துகாட்டிய‌ பத்திரிகையாளரும் இன்றுவரை அவர் ஒருவர்தான்
பகுத்தறிவினை காட்டி அரசியலை பலர் ஆட்டிபடைத்தபொழுது உண்மையான பகுத்தறிவு பேசி மக்களை சிந்திக்க சொன்ன பெரும் "பகுத்தறிவு பகலவன்" சோ ராமசாமி ஒருவரே..
அப்படி ஒரு தைரியமும் அறிவும் இனி எந்த பத்திரிகையாளனுக்கும் நடிகனுக்கும் வரப்போவதே இல்லை.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
💐💐💐💐💐💐 ஆசிரியர். 💐
💐💐💐💐💐💐 பிறந்தநாள்!
💐
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...