இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஆங்காங்கே ஒலிக்கிறது என்று தெரிந்ததால் ஏற்பட்ட மனமாற்றம் மட்டுமே “96” படத்தை எவ்வளவு தலைவலி வந்தாலும் பொறுத்துக்கொண்டு பார்த்துவிட வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன். உடனே பார்த்தும்விட்டேன்.
உனக்கு தெரிந்த செமையான காதல் படம் என்ன? என்று கேட்டால், ஒவ்வொரு தலைமுறையினரும் ஒவ்வொரு பட்டியலை தயார் செய்து தருவார்கள். என்னை கேட்டால், காதலுக்கு மரியாதை, குணா, அழகி, இதயம், சேது, போன்ற படங்களை பாத்தித்த அளவின் அடிப்படையில் வரிசைப்படுத்திடுவேன். இதே போன்ற வரிசை பட்டியல் எல்லோருக்கும் இருப்பதில்லை. அது அவரவர் விருப்பம்.
எல்லோரும் போற்றி பாராட்டிய ஆட்டோகிராப், ப்ரேமம் போன்ற காதல் படங்கள் கூட எனக்கு எந்த வித பாதிப்பையும் தரவில்லை. ஏண்டா இப்படிப்பட்ட கீழ்த்தரமான காதல் கதைகளை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள் என்று பலரை சாடியிருக்கிறேன். ஆனால் இயக்குனர் சங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த “காதல்” படத்திற்கு என்றென்றும் எனது பாராட்டுக்களை தெரிவித்தவாறே இருந்திருக்கிறேன்.
ஏனோ தெரியவில்லை இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் “’96” அவ்வளவு பிடித்திருக்கிறது. சாதாரணமாக போய்கொண்டிருந்த கதையில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் “புத்தம் புது காலை” பாடலில் இடையிசை ஒலிக்கவிட்ட அந்த கனம் - படம் அடுத்த கட்டத்திற்கு போய்விட்டது. ஹைய்யோ... மெய் சிலிர்த்தது என்று சொல்வார்களே, அதை உணரவைத்துவிட்டனர்.
படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் இளையராஜாவின் பாடல்களே எதிர்பாராத திருப்புமுனை. யார் அந்த பெண் குரல் என்ற தேடலை உருவாக்கிவிட்டது. “தென்றல் வந்து தீண்டும்போது”- பாடலில் முதல் சரணத்தை (எவரும் சொல்லாமலே) ஜானு பாடும் போது அந்த காட்சியமைப்புக்கு அவ்வளவு பொருத்தமான வரிகளாக அமைந்தது மிகவும் ஆச்சர்யம். அந்த ஆற்றுப்பாலத்தில் ராமின் சட்டையில் ஜானு பேனா மையை தெளித்துவிட்டு “மறந்திடாதே” என்று சொல்லிவிட்டு போன பிறகு ஒலிக்கும் பின்னணி “முதல் முத்தம் மோகம்” என்ற புதிர் பட பாடலை இசையாக தந்திருப்பதாகவே தோன்றியது. ஜானு எப்போ “யமுனை ஆற்றிலே” பாடலை பாடுவாள் என்று ராமச்சந்திரன் காத்திருந்தானோ இல்லையோ...நான் பரிதவித்து காத்திருந்தேன் என்பதே உண்மை.
வழக்கமான காதல் படங்களில் வருவது போல – இந்த பட காதலனும், காதலியும் கட்டியணைத்து காதலை வெளிப்படுதிவிடுவார்களோ என்ற அச்சம் மேலோங்கியிருந்தது. அனால்..நல்ல வேலை அந்த தப்பையும் இயக்குனர் செய்யவில்லை. “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது” – என்று உச்சஸ்தாயில் கத்தி சொல்லும் அளவுக்கு சமீபத்தில் எந்த காதல் படமும் வெளிவரவில்லை. இனியும் வருமா? என்பது ஐயமே. ஆனால் “96” க்கு விதிவிலக்கு அளிக்கலாம்.
இளையராஜாவின் ஒவ்வொரு பாடலும் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளை கண் முன் நிழலாட்டம் காட்டிட செய்திடும். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை உணர்ந்தவர்களுக்கு வெளிச்சம்.
No comments:
Post a Comment