காங்கிரஸ் எம்பி ஜோதிமணி திருச்சியில் நடைபெற்றுவரும் மீட்புப் பணிகளை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது ஹைட்ரோகார்பன் மற்றும் இஸ்ரோவுக்கு செலவழிக்கும் நாம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு கண்டுபிடிக்காமல் இருப்பது அசிங்கம் என்று கருத்து தெரிவித்துள்ளார். குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுவது இது முதல் முறை அல்ல. நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே இதுபோன்ற விபத்துகள் ஏராளம் நடந்துள்ளன. 2004-14 வரை 10 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் இருந்த காங்கிரஸ் அரசு என்ன கிழித்தது? இப்போதும் சொல்கிறேன் காங்கிரஸ் மட்டுமல்ல பாஜக கூட இதில் எதையும் பெரிதாக செய்துவிட முடியாது. ஏற்கனவே இந்தப் பிரச்சினைக்கு ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ஐஐடி நிறுவனமும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இன்று அந்த இயந்திரமும் கொண்டு வரப்பட்டு முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை 70 அடிக்கு மேல் ஆழத்தில் இருப்பதால் அந்த இயந்திரத்தால் வெளியே எடுக்க முடியாத சூழ்நிலை.
நான் முந்தையப் பதிவில் சொன்னது போல் என்னதான் இதற்கு ஒரு இயந்திரம் கண்டுபிடித்தாலும் அது எல்லா சமயத்திலும் நமக்கு கைகொடுக்கும் என்று சொல்ல முடியாது. இதில் வளர்ந்த நாடுகள் கூட விதிவிலக்கல்ல. இந்த உண்மையை மறைத்துவிட்டு மீட்பு பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று அரசியல் பேசுவது கேவலத்தின் உச்சம். அங்கே தேசிய மற்றும் மாநில பேரிடர் குழுவும், நெய்வேலி நிலக்கரி மையத்தைச் சேர்ந்த குழுவும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீங்கள் போகிற போக்கில் விமர்சித்துவிட்டு செல்ல அவர்கள் ஒன்றும் அரசியல்வாதிகள் அல்ல. ஆபத்துக் காலத்தில் மக்கள் பணி செய்யும் ஊழியர்கள். அவர்களுடைய முயற்சிக்கு பக்கபலமாக இருக்கத் தான் முடியவில்லை என்றாலும் இப்படி ஏடாகூடமாக பேசி வேலை செய்பவர்களையும் விரக்தியடைய வைக்காதீர்கள். இந்த கெட்டகேடுக்கு நீங்கள் எல்லாம் பொறுப்பான அரசியல்வாதி என்ற பட்டம் வேறு.
No comments:
Post a Comment