சம்பள உயர்வு கேட்டு, முரண்டு பிடிக்கும் டாக்டர்களுக்கு, அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. வேலை நிறுத்தத்தை கைவிட்டு, இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்படும் என, சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. மேலும், அரசு டாக்டர்களின் பதவி உயர்வுக்கான, பணி மூப்பு காலம் ரத்து உள்ளிட்ட, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு, காலமுறை பதவி உயர்வு உள்ளிட்ட, நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர், புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவை புறக்கணித்து, ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பள உயர்வு, காலமுறை பதவி உயர்வு உள்ளிட்ட, நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர், புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவை புறக்கணித்து, ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரதம்
சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், ஐந்து டாக்டர்கள், தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துஇருந்தனர். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுக்கு பின், போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால், அனைத்து டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர், தொடர்ந்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் இல்லாமல், நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை, மீண்டும் பணிக்கு திரும்பும்படி, சுகாதாரத் துறை தரப்பில், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நோயாளிகள்
ஆனால், 'கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டத்தை தொடரு வோம்' என, டாக்டர்கள் முரண்டு பிடித்து வருகின்றனர். அதனால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பணிக்கு வராத டாக்டர்களுக்கு, அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, 'போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நோயாளிகள் நலன் கருதி, இன்றைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில், அந்த டாக்டர்களின் பணியிடங்கள், காலி என அறிவிக்கப்படும். டாக்டர்களுக்கு, பதவி உயர்வுக்கான பணி மூப்பு காலம் ரத்து செய்யப்படும்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதுநிலை டாக்டர்களுக்கு, நன்னடத்தை சான்றிதழ் வழங்கப் படாது' என, சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:தமிழகத்தில், எந்தவொரு அரசு அலுவலர்களுக்கும் வழங்கப்படாத சலுகைகள், அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, மத்திய அரசில் பணிபுரியும் டாக்டர்கள், தனியார் மருத்துவமனைகளில் பணி புரியவும், சொந்தமாக மருத்துவமனைகள் வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால், இந்த சலுகைகள், தமிழக அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.அரசு டாக்டர்களுக்கு, பணியில் சேர்ந்த முதலாம் ஆண்டு, 80 ஆயிரத்து, 247 ரூபாய் முதல், 1 லட்சத்து, 53 ஆயிரத்து, 27 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கூட, மத்திய அரசுக்கு இணையாக, இவ்வளவு சம்பளம் வழங்கப்படுவதில்லை.எனவே, தங்களது பொறுப்பை உணர்ந்து, அரசு டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், மருத்துவ கல்லுாரி முதல்வர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 'தங்கள் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்பும்படி அழைப்பு விடுங்கள். பணிக்கு திரும்பாத டாக்டர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுங்கள்' என, தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
டாக்டர்கள் போராட்டம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் , நேற்று ஆலோசனை நடத்தினார். பின் அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் ஏ பிளாக் கட்டடத்தின் நுழைவு வாயிலில் டாக்டர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் உள்ளே வெளியே செல்ல முடியாமல் , நோயாளிகள் தவித்து வருகின்றனர். இன்றைக்குள் பணிக்கு திரும்பவில்லை எனில் அவர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களின் பணி மூப்பு ரத்து செய்யப்படும் புதிதாக டாக்டர்கள் பணி அமர்த்தப்படுவர். எனவே டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment