1.எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் திடீரென அகால மரணம் அடைவது ஏன் ?
2. யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்று கவனமாக இருப்பவர்கள் அதிகமாக காயப்படுத்தப்படுவது ஏன் ?
3. சுற்றமும் நட்பும் ஏராளமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்?
4. இளகிய மனதுடன் பிறருக்கு உதவியவர்கள் ஏமாற்றப்படுவது ஏன்?
5. எந்தவித வீண் செலவும் செய்யாதவர்கள் சிலர் பொருளாதாரத்தில் நலிவுற்று இருப்பது ஏன்?
6. அகம்பாவமும் ஆணவமும் அலட்சிய மனோபாவமும் கொண்ட சிலர் செலவந்தராக இருப்பது ஏன் ?
அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை நம் ப்ராரப்த கர்மா. இது சாமானியர் அனைவருக்கும் பொருந்தும். விசேஷமாக சரணாகதி செய்து மோக்ஷத்தை எதிர்பார்த்திருக்கும் முமுக்ஷூவுக்கு இதன் மூலம் பகவான் நம் கர்மாவை கழித்துக் கொடுக்கிறார் என்று அர்த்தம். இன்னொரு பிறவி எடுத்து கழிக்க வேண்டியதை பகவான் பரம கருணையோடு இப்பிறவியிலேயே கழித்து விட்டு தன்னை வந்து அடையும் படி செய்கிறான். இதன் காரணமாக சரணாகதி பண்ணியவனின் துன்பங்கள் பல்மடங்கு பெருகியது போல் தோன்றலாம். ஆனால் அதுவும் பகவானின் பெருங் கருணையே. இது புரிந்த சரணாகதனுக்கு இந்த துன்பங்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப் பதக்கம் பெற ஒரு விளையாட்டு வீரர் எத்தனை தியாகங்கள் செய்கிறார்? ஒரு நாலு வருடம் தான் அதற்கு மதிப்பு. அதன் பிறகு உலகம் அவரை மறந்தே போகும். இந்த அல்ப விஷயத்துக்கே இந்தப் பாடுபட மனம் இசைகிறது என்றால் நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற ஏன் சிறு துன்பங்களை மனம் ஏற்றுக் கொள்ளக் கூடாது? இந்த கண்ணோட்டத்தில் தான் கண்ணன் கீதையில், சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிப்பாய் என்றான்.
ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !
No comments:
Post a Comment