1980-கள் ஒரு அற்புதமான காலகட்டம்....
இளையராஜா தமிழ் திரைப்பட வரலாற்றின் ராஜாவாக இருந்த காலகட்டம். அது ஒரு பொற்காலம். ஏன் நான் அப்படி சொல்கிறேன் என்றால் திரைப்படம் தாண்டி சமூகமே கொஞ்சம் ஒற்றுமையாக இருந்த நேரம். அதற்கு காரணம் இளையராஜாவின் இசை என்றால் மிகையாகாது.
முதலில் இசை என்பது வன்முறையை குறைத்து அமைதியை கொடுக்கும். அதனால் தான் சமீபத்தில் இளையராஜா சார் இசையை நமது பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அதன்மூலம் எளிதாக சமூக அமைதி எட்டி விடலாம் என்றும் கூறியிருந்தார். அதை ஏ ஆர் ரஹ்மானும் வழிமொழிந்தார்.
இருவருக்குமே இசையை தாண்டிய ஒரு மேதமை உள்ளது என்பதை உணர்த்தினார்கள். இளையராஜா இசை தாண்டி சமூகத்தில் ஒரு ஒற்றுமையை கொண்டு வந்து ஒரு மாமேதை. காந்தி அகிம்சை என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தது போல் இளையராஜா இசை என்னும் ஆயுதத்தை வைத்து சாதித்தார்.
இதற்கு நிரூபணம் எண்பதுகளில் பெரிதான ஜாதி மத சண்டைகள் கிடையாது. பிராமணர்கள் மற்ற வகுப்பினர்கள் கிறிஸ்துவர்கள் முஸ்லிம்கள் என்று எல்லோரும் ஒரு குடையின் கீழ் வந்தார்கள். இளையராஜா இசைக்கு மட்டும்தான் தமிழ்நாட்டின் அத்தனை சமூகத்தையும் இணைக்கும் சக்தி உள்ளது. எனக்கு தெரிந்து இளையராஜாவை தவிர இப்படி அத்தனை சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே நபர் தமிழ்நாட்டில் அப்துல் கலாம் தான்.
அப்படி கஷ்டப்பட்டு சினிமாவில் இசையின் மூலமாக ஜாதி மதம் என்ற பேதத்தை அகற்றினார். அவர் தனது ஜாதி அடையாளத்தை மத அடையாளத்தை எந்த இடத்திலும் இசையில் வெளிப்படுத்தியது இல்லை. தளபதி குணா போன்ற படங்களில் மிகுந்த வன்முறை இருந்தாலும் இசை தூக்கி நின்று அந்த வன்முறையை மறக்கடிக்கச் செய்து பிரிவினையைத் தடுத்து தமிழ் திரையுலகில் ஆடியன்ஸ் மத்தியில் இசையை மட்டுமே விட்டுச் சென்றது.
ஆனால் பிற்பாடு வந்த அரைகுறை திரைப்பட ஞானம் கொண்ட டைரக்டர்கள் நடிகர்கள் ஜாதி மத பிரிவினையை ஊக்குவிக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் ஜாதி பாகுபாட்டை பூதாகரப்படுத்தி காட்டுகிறார்கள். இளையராஜா 30 ஆண்டுகாலம் கஷ்டப்பட்டு கொண்டு வந்த ஒற்றுமையை கடந்த மூன்றே ஆண்டுகளில் வந்த சில போன்ற படங்கள் மூலம் ஆடியன்சை பிரித்து வைத்து ஆள ஆரம்பித்தார்கள்.
இளையராஜா ஒற்றுமை படுத்திய படித்த மேல்தட்டு ஆடியன்ஸ் தியேட்டருக்குப் போவதையே நிறுத்தினார்கள். பெண்கள் சீரியலுக்கு போய்விட்டார்கள். எனக்கு தெரிந்து கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் திரைப்படம் பார்ப்பதை குறைத்துக் கொண்டு விட்டார்கள்.
மிச்சமிருப்பது 15 வயதிலிருந்து 25 வயது வரை உள்ள ஒரு வினோதக் கூட்டம். இவை கல்வி பயின்றது வாட்ஸ்அப் மூலமாக. இவர்கள் இப்படி ஜாதி மதம் என்று தனி டிராக் பயணம் செய்ய காரணம் மீம்ஸ் மற்றும் புதிதாக உருவான சில கேடுகெட்ட ஜாதி மற்றும் இனம் சார்ந்த அரசியல்வியாதிகள்....
எல்லா சமுதாயமும் திரைப்படத்தைப் பொறுத்தவரை சினிமா பார்ப்பதை பொருத்தவரை துண்டு துண்டாக பிரிந்திருக்கிறது. பெண்கள் இனிமேல் சத்தியமாக தியேட்டருக்கு வர மாட்டார்கள். படித்த ஆடியன்ஸ் இனிமேல் தமிழ் சினிமா பாட்டு கேட்க மாட்டார்கள். படித்த இளைஞர்கள் ஆங்கில சினிமா மிக எளிதில் கிடைக்க ஆரம்பித்ததால் அவர்களும் தமிழ் சினிமாவை விட்டு தூரம் சென்றுவிட்டார்கள்.
என் மகனை ஒத்த ஜெனரேஷன் முழுக்க முழுக்க ஹாரி பாட்டர் திரை படம் பார்த்து வளர்ந்தார்கள்.
நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஹாரி பாட்டர் முதல் பாகம் வரும் பொழுது என் மகன் ஆரம்ப பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தான். ஹரி பட்டர் கடைசி பாகம் வரும்போது அவன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். நாங்கள் தியேட்டருக்கு போன பொழுது ஒரு பெரிய இளைஞர் கூட்டம் ஹாரி பாட்டரை தீவிரமாக ரசிப்பதை பார்த்தோம். அப்பொழுதுதான் புரிந்தது நமக்கு இளையராஜா போல் இந்த சந்ததிக்கு ஜேகே ரவுலிங் என்று.
இப்போது இளையராஜாவும் இல்லை ஹாரிபாட்டரும் இல்லை. படித்த உருப்படியான இளைஞர் கூட்டம் தியேட்டர் பக்கம் போவதில்லை. பெண்களும் போவதில்லை வயதான ஆண்களும் போவதில்லை.
மிச்சமிருக்கும் ஒரு சிறு கூட்டம் ஜாதியின் மாயையில் சிக்கி தவறாக வரலாறுகளைப் படித்து மீம்ஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தவறாக வழிநடத்தப்பட்டும், சில ஜாதிரீதியிலான திரைப்படங்கற் மூலமாகவும் திசை மாறி திரிகின்றனர். இதுபோன்று ஒரு உருப்படாத இளைஞர் கூட்டம் பெருகிவருவது தான் ஜாதிரீதி படங்களின் வெற்றிக்கு காரணம்.
சுவாரசியமான ட்ரீவ்யா செய்தி : இளையராஜா இசை ஒரு பாரதவிலாஸ் மாதிரி இருக்கும். வாலி என்ற தமிழ் பிராமணர் பாட்டு எழுதுவார் எஸ்பிபி என்று தெலுங்கு அல்லது ஏசுதாஸ் என்ற மலையாளி ஆண் குரலில் பாடுவார் சித்ரா அல்லது ஷ்ரேயா கோஷல் என்று மலையாள அல்லது ஹிந்தி பாடகி பெண் குரலில் பாடுவார்.
ஏஆர் ரஹ்மான் என்ற முஸ்லிம் சமுதாயம் சேர்ந்த ஜீனியஸ் உருவாக இளையராஜா அடித்தளம் அமைத்தார். அவரிடம் வாத்தியம் வாசிக்கும் முக்கால்வாசி பேர் கிருத்துவ மதத்தை சேர்ந்தவர்கள்.
திருவையாறு கர்நாடக சங்கீதம் வியன்னா சிம்போனி சங்கீதம் இரண்டையும் எஸ்டி பர்மன் ஆர்டி பர்மன் போன்றவர்களிடமிருந்து இன்ஸ்பிரேஷன் எடுத்து ஒரு மிகப் பிரம்மாண்ட சங்கீத பாலம் அமைத்தார்.
ராமர் கட்டிய பாலம் பல வருடங்கள் தாக்குப் பிடிப்பது போல் இளையராஜா கட்டிய இசை பாலம் பல்லாண்டு காலம் வாழும்.
சமூக ஒற்றுமையை ஏற்படுத்திய இளையராஜா ரகுமானின் வெற்றி சூரியனின் ஒளி சந்திரனின் ஒளி போன்றது. சமூக பிரிவினையை ஏற்படுத்தும் ஜாதீயரீதியிலான திரைப்படங்களின் வெற்றி மின்மினி பூச்சியின் ஒளியைப் போன்றது...
No comments:
Post a Comment