Sunday, April 5, 2020

இன்று பங்குனி உத்திர விரத வழிபாடு.

இன்று பங்குனி உத்திர விரத வழிபாடு
குலதெய்வம் வழிபாடு



















‘குலம் தெரியாமல் போனாலும், குல தெய்வம் தெரியாமல் இருக்கக்கூடாது’, ‘குருவை மறந்தாலும் குல தெய்வத்தை மறக்கக்கூடாது’, ‘மனிதனை வாழவைக்கும் போதும், கொல்லும்போதும் குலதெய்வம் கூட வரும்’ என்பது போன்றவை, கிராமங்களில் பேசப்படும் பழமொழியாகும்.

குலதெய்வம் என்பது வெறும் வாய்வழியில் வரும் கதைகள் அல்ல? நமது பரம்பரையில் வந்த முன்னோர்கள். அந்த முன்னோர்களை தெய்வமாக நமது பரம்பரையினர் வழிபட்டு வந்தனர். ஒரு கிராமத்தில் ஒரு சாதியை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு குலதெய்வம் இருக்கும். அந்த தெய்வத்தைத்தான் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் வழிபட்டு வருவார்கள்.

இந்த குலதெய்வம் பெரிய கோவிலாக இருக்காது. தினமும் பூஜை நடக்காது. மலை, காடுகள், குளத்துக்கரை, ஆற்றின் கரை, கண்மாய் போன்ற இடங்களில்தான் குலதெய்வ கோவில்கள் இருக்கும். அதற்கு சரியான போக்குவரத்து இருக்காது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை அன்று இரவில் சென்று விளக்கு போட்டு குலதெய்வ வழிபாடு செய்வதும் உண்டு. பெரும்பாலும் பங்குனி உத்திரம் அன்று கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.

குலதெய்வம் கோவில் என்பது ‘சாஸ்தா கோவில்’, ‘அய்யன் கோவில்’, ‘அய்யனார் கோவில்’ என்றும் அழைக்கப்படும்.

அரிக்கும், அரணுக்கும் பிறந்தவர் சாஸ்தா. இந்த சாஸ்தாவை மக்கள் பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். இந்த சாஸ்தா, அய்யனார் கோவிலில் பூரண, புஷ்கலையுடன் மூலவராக காட்சி அளிப்பார். அவருக்கு கருப்பசாமி, சுடலைமாடன், சங்கிலி பூதத்தார், அக்னி மாடசாமி, உதிரமாடசாமி, பலவேசக்காரன் என பல்வேறு பெயர்களில் காவல் தெய்வங்கள் இருக்கும். பிரம்ம சக்தி, பேச்சியம்மன், இசக்கியம்மன், மாடத்தி அம்மன் என்று பெண் தெய்வங்களும் பல பெயர்களில் இருக்கும்.

முதலில் சாஸ்தாவுக்கு சைவ படையல் போட்டுவிட்டு, காவல் தெய்வங்களுக்கு அசைவ படையல் போட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். தங்களுடைய வீட்டில் எந்த விசேஷம் வந்தாலும் மக்கள் முதலில் சென்று வழிபாடு நடத்துவது தங்களுடைய குலதெய்வ கோவிலுக்குத் தான். திருமணம், கிரகபிரவேசம், பூப்புனித நீராட்டு விழா ஆகியவற்றிற்கு முதல் பத்திரிகை அங்குதான் வைப்பார்கள். குழந்தை பிறந்த உடன் மொட்டை போட்டு காது குத்துவதும் அங்குதான்.

சாஸ்தா அவதரித்த பங்குனி உத்திரம் நட்சத்திரம் அன்று குலதெய்வ கோவிலுக்கு மக்கள் சென்று வழிபாடு நடத்துவார்கள். சாஸ்தா கோவிலுக்கு செல்வதற்கு முந்தைய நாளில் வீட்டை சுத்தம் செய்து, பூஜைக்கு தேவையான பொருட்களை வீட்டில் வைத்தே, தயாராக எடுத்துக்கொண்டு குடும்பத்தோடு வாகனங்களில் செல்வார்கள். திருமணம் ஆன பெண் தனது கணவர் வீட்டு சாஸ்தா கோவிலுக்குத்தான் செல்ல வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் அழைத்து சென்று வழிபட வேண்டும். இல்லை என்றால் அந்த வழிபாட்டை சுவாமி ஏற்பது கிடையாது என்பதால், அண்ணன் - தம்பி சண்டை போட்டு இருந்தாலும் அன்று மட்டும் ஒன்றாக சேர்ந்து கோவிலுக்கு செல்வார்கள்.

கோவிலில் சாஸ்தா வழிபாடு முடிந்த பிறகு, காவல் தெய்வங்களுக்கு ஆடு, கோழி பலியிட்டு அசைவ படையல் போட்டு வழிபாடு நடத்தி, அனைவருக்கும் சமமான உணவு பரிமாறி சாப்பிட வேண்டும். இது தான் குலதெய்வ வழிபாட்டின் பிரதானமாகும்.

குலதெய்வத்திற்கும், மற்ற தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், மற்ற தெய்வங்களை யார் வேண்டுமானாலும் வழிபடுவார்கள். குலதெய்வத்தை, அந்த வம்சாவழியினர்தான் வழிபடுவார்கள். குலதெய்வத்தின் முன்பு தங்களுடைய குறைகளை சொல்லி கண்ணீர் விட்டால், மறு நிமிடமே அதற்கு தீர்வு கிடைக்கும் என்பது மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

குலதெய்வத்தை பங்குனி உத்திர நட்சத்திரன்று கண்டிப்பாக வழிபடவேண்டும் என்பது, தென் மாவட்ட மக்களுக்கு எழுதப்படாத நியதியாகும். பங்குனி உத்திர நட்சத்திரமான பவுர்ணமி அன்று எதற்கு இந்த வழிபாடு நடத்தப்படுகிறது என்றால் பவுர்ணமிபோல் நமது வாழ்க்கையும் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

எனவே குலதெய்வ வழிபாட்டை மறந்தவர்கள் உடனே அதைத் தொடங்குங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும். குலதெய்வ வழிபாட்டை யார் ஒருவர் ஒழுங்கான முறையில் செய்து வருகிறார்களோ, அவர்களை எந்த கிரகத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. வருகிற வினைகள் எல்லாம் நல்ல வினையாகவே மாறும். குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி உள்ளது.

குலதெய்வம் தெரியாதவர்கள் காலபைரவரை வழிபடலாம். சாஸ்தா கோவில் தெரியாதவர்களுக்கு அச்சன் கோவில் தர்மசாஸ்தா, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் காரையாற்றில் உள்ள சொரிமுத்து அய்யனார், திருச்செந்தூர் முருகன் ஆகிய 3 தெய்வங்களை வழிபட்டாலே அவர்களுடைய சாஸ்தாவை வழிபட்ட பலன் கிடைக்கும்.

தென் மாவட்டத்தில் சாஸ்தா கோவில் இல்லாத ஊரே இல்லை. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்கள் பங்குனி உத்திர நட்சத்திர நாளன்று தங்களுடைய குலதெய்வத்தை வழிபாடு செய்ய வந்து விடுவார்கள். வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி பங்குனி உத்திரத்தன்று தங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...