ஊரடங்கு தொடருமா? எனத் திரும்பத் திரும்பக் கவலையாகக் கேட்பவர்கள் மனநிலை எனக்குச் சுத்தமாகப் புரியவே இல்லை. என்ன மாதிரியான சிறுபிள்ளைத்தனம் அது!
ஒரு பேச்சுக்கு அரசே ஊரடங்கை நீக்குவதாக வைத்துக் கொண்டாலும் நாம் என்ன ஊரில் சுற்றித் திரியும் சொகுசிலா இருக்கிறோம்? உயிர் முக்கியம் இல்லையா? நாட்டில் என்ன நடக்கிறது எனத் தெரியாதா? கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை என்ன வேகத்தில் அதிகரித்து வருகிறது எனத் தெரியாதா? அரசு இச்சூழலில் ஊரடங்கை நீக்கினால் இத்தனை நாட்களும் சிரமப்பட்டுச் செய்த ஊரடங்கிற்கே அர்த்தமில்லாமல் போகும். அப்படியே அரசு அப்படிச் செய்தாலும் கொரோனாவும் உடனே தொற்றுவதை நிறுத்தி விடுமா என்ன?
நீங்கள் வீட்டில் அடங்கி இருக்கக் காரணம் அரசின் உத்தரவா அல்லது கொரோனாவா? அரசின் உத்தரவு தான் என்றால் நீங்கள் மண்டையில் மூளை இல்லாத ஆள் என்று தான் சொல்வேன். ஹெல்மெட் / சீட்பெல்ட் அணிவதை பாதுகாப்புக்காக அல்லாமல் போலீஸுக்கு பயந்து, செக்கிங் நடக்கும் இடங்களில் மட்டும் செய்யும் மண்டூகங்கள் வாழும் தேசம் தானே இது! கொரோனாவின் தீவிரம் மட்டும் இவர்களுக்கெல்லாம் புரிந்து விடவா போகிறது!
ஆம். தொழில் நசிவடைகிறது. வேலை இல்லாததால் பணம் கையிருப்பு கரைகிறது. மன அழுத்தம் கூடுகிறது. பலருக்கும் சிரமமான வாழ்க்கை தான். ஆனால் அதெல்லாவற்றையும் விட உயிர் முக்கியம். அப்படி அவசரமாய் வெளியே வந்து கொஞ்சம் பணம் சம்பாதித்து அதை வீட்டிலிருப்போர் இறுதி யாத்திரைக்குப் பயன்படுத்துவது தான் உங்கள் விருப்பமா?
யோசியுங்கள்.
No comments:
Post a Comment