Monday, May 11, 2020

ராணுவத்துக்காக ஒரு நாடு - பாகிஸ்தான்.

சமீபத்தில் 1800 பயங்கரவாதிகளை கண்காணிப்புப் பட்டியலிலிருந்து, பாகிஸ்தான் நீக்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக லக்ஷர் - இ - தொய்பாவின் தளபதி பெயரும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இவ்வாறு துணிச்சலாகச் செயல்படுவதன் பின்னணி என்ன என்று (Thuglak) வாசகர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பாகிஸ்தான் அரசை பின்னால் இருந்து இயக்குவது ராணுவம். ராணுவம் என்ன கூறுகிறதோ, அதை அரசாங்கம் செய்தே ஆகவேண்டும். இதை எல்லாம் செய்வது பாகிஸ்தான் அரசு போல வெளியே தெரிந்தாலும், உள்ளிருந்து அதை செய்விப்பது பாகிஸ்தான் ராணுவம்தான். முக்கியமான முடிவுகள் அனைத்தும் பாகிஸ்தானில் ராணுவத்தின் ஒப்புதல், அல்லது ராணுவத்தின் தூண்டுதல் மூலமாகத்தான் எடுக்கப்படுகின்றன. பலவகைகளில் பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், ராணுவத்தின் எடுபிடி தான். ஏன் ராணுவத்துக்கு பாகிஸ்தானில் இவ்வளவு முக்கியம்? பாகிஸ்தான் ராணுவமும் நம் ராணுவம் போலத்தானே? அதற்கு என்ன ஒரு விசேஷ அந்தஸ்து?
ஆயிஷா சித்திக்கா அம்பலமாக்கிய பாகிஸ்தான் ராணுவ தொழில்கள்
இந்தக் கேள்விகளுக்கு விடை கொடுத்து பாகிஸ்தானிய பெண்மணி ஆயிஷா சித்திக்கா 2007-ல் "Military Inc.: Inside Pakistan's Military Economy'' என்கிற தலைப்பில் எழுதிய புத்தகம் பாகிஸ்தானை உலுக்கியது. அவரை தேசத் துரோகி என்று பட்டம் சூட்டி, அந்த புத்தகம் வெளிவருவதைத் தடுத்து, ‘தேசவிரோத வழக்கு போடுவேன்’ என்று மிரட்டி, ஆயிஷாவை நாட்டை விட்டே வெளியே ஓட வைத்தார் பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரஃப். பொதுப்பணத்தை பாகிஸ்தான் ராணுவம் கொள்ளையடித்து, தொழில் மற்றும் வியாபாரத்தில் முதலீடு செய்திருக்கிறது என்பதை ஆதாரத்துடன் அளித்ததுதான் ஆயிஷா செய்த குற்றம். ராணுவம் [Military] தொழிலில் [Business] ஈடுபடுவதை இணைத்து, MilBus என்று பெயர் சுட்டி விளக்கியிருந்தார் அவர்.
மேலும் முக்கியமான விவரங்களுடன், அந்த புத்தகத்தின் மறுபதிப்பு 2017-ல் வெளிவந்தது. அதில் MilBus எப்படி பாகிஸ்தான் பொருளாதாரத்தில் நிரந்தர இடம் பெற்று விட்டது என்று விளக்கியிருக்கிறார் ஆயிஷா. இதில் முக்கியம் என்னவென்றால், பாகிஸ்தானிய மக்களிடம் MilBus-க்கு இருக்கும் வரவேற்புதான். காரணம் நாட்டை யார் ஆட்சி செய்தாலும், பாகிஸ்தானிய ராணுவம்தான், நாம் நம்பக் கூடிய காவலன் என்று அது மக்களை பிரச்சாரத்தின் மூலம் நம்ப வைத்ததுதான் என்கிறார் ஆயிஷா. 2007-க்குப் பிறகு பாகிஸ்தானிய ராணுவம் தன் பிடியை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது என்றும் கூறுகிறார் அவர். 2017-பதிவில் என்னென்ன விவரங்கள் இருக்கின்றன என்பதன் சுருக்கத்தை இங்கு அளிக்கிறோம்.
MilBus - இந்திய எதிர்ப்புக்கு பாகிஸ்தான் கொடுக்கும் லஞ்சம்
பாகிஸ்தான் ராணுவத்துக்குக் கொடுக்கப்படும் மூலதனத் தொகைகளை, முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் உடன்பிறப்புக்களுக்கு பயன்படுத்துவதைத்தான் ஆயிஷா MilBus என்று கூறுகிறார். ராணுவத்துக்கென்று துவங்கியMilBus-ஸால் காலப்போக்கில் ஆங்காங்கே மற்றவர்களும் பலனடைந்தனர். MilBus நிதி எங்கும் பதிவாவதில்லை; அரசாங்கத்தின் பட்ஜெட்டில் காண்பிக்கப்படுவதில்லை; யார் கண்ணிலும் படுவதில்லை; அதற்கு எந்த தணிக்கையும் கிடையாது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் அல்லது அவர்களுக்கு விசுவாசமாக இருப்பவர்கள்தான் அதை நிர்வகிக்கிறார்கள். அது ராணுவத்தினர் மற்றும் அவர்களின் கையாட்களுக்கு மட்டுமே தீனியாக இருக்கிறது.
நாட்டை பாதுகாக்கும் ராணுவத்துக்கு அரசு அளிக்கும் கைமாறுதான் MilBus என்று, ராணுவத்தின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் பத்திரிகையாளர் காலித் அஹ்மத் தன்னிடம் கூறியதாக ஆயிஷா எழுதுகிறார். பாகிஸ்தான் எதை தேசியம் என்று நம்புகிறதோ, அதற்கு நாம் கொடுக்கும் விலைதான் MilBus (அதை மாற்றிக் கூறினால், தன் ராணுவத்துக்கே பாகிஸ்தான் கொடுக்கும் லஞ்சம்). பாகிஸ்தானின் வளங்களை ராணுவம் கைப்பற்றுவதை நியாயமாக்குகிறது என்றும் அந்தப் பத்திரிகையாளர் கூறுகிறார் என்கிறார் ஆயிஷா. இந்தியாவை எதிர்ப்பதுதான் பாகிஸ்தானின் தேசியம்; எனவே இந்திய எதிர்ப்பு என்பது ஒரு கொள்கை மட்டுமல்ல, பாகிஸ்தான் ராணுவம் உயிர் வாழ மூலகாரணம்" என்கிறார்கள் ராணுவ அதிகாரிகள்.
செல்வாக்கால் லஞ்சம், லஞ்சத்தால் செல்வாக்கு
ராணுவம் அரசியலில் ஈடுபட்டதால் MilBus நிதி உருவானது; MilBus நிதி ஆட்சியை ராணுவம் கைப்பற்றவும், அரசின் மீது ஆதிக்கம் செலுத்தவும் காரணமாக இருக்கிறது. MilBus நிதி, அரசின் பல துறைகளில் ராணுவத்தின் செல்வாக்குக்கும் காரணமாக இருக்கிறது. அதனால் பாசறையில் இருக்க வேண்டிய ராணுவம், அரசாங்க அலுவலகங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே, ஜனநாயகம் தழைப்பதை தடுக்கிறது ராணுவம். இந்திய எதிர்ப்பைத் தவிர, நாட்டுக்குள் நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் தேவையும், திறமையும் அதற்கு இருப்பதால் அதற்கு தென் அமெரிக்கா, இந்தோனேஷியா, துருக்கி போன்ற நாடுகளில் ராணுவத்துக்கு அரசியலில் இருக்கும் முக்கியத்துவம், பாகிஸ்தான் ராணுவத்துக்கு இருக்கிறது என்கிறார் ஆயிஷா. அது தவிர, அமெரிக்காவின் காலனி போன்று இருக்கும் பாகிஸ்தானின் ராணுவத்துக்கு வெளிநாட்டு ஆதரவும் உண்டு. அமெரிக்க அதிகாரிகளுக்கு அவர்களுடைய நோக்கம் முக்கியமே தவிர, பாகிஸ்தான் பொருளாதாரத்தில் என்ன அக்கறை என்று கேட்கிறார் ஆயிஷா. ரகசியமான, மறைக்கப்பட்ட, பட்ஜெட்டில் பதிவாகாத MilBus மூலமாக நாட்டின் வளம் பொதுமக்களிடமிருந்து குறிப்பாக, ராணுவத்துடன் தொடர்பு உள்ள தனியார் துறைக்கு மாற்றப்படுகிறது. MilBus நிதியை ரகசியமாக வைப்பது நாட்டின் பாதுகாப்புக்கு அவசியம் என்பதே, அதன் துஷ்பிரயோகத்துக்கு முக்கிய காரணம்.
MilBus மூலம் ராணுவத்தின் முதலீடுகள், புள்ளி விவரங்கள் வெளியில் கிடைக்கவில்லை என்றாலும், �MilBus ஆதிக்கம் செலுத்தும் ராணுவ அறக்கட்டளைகளை ஆயிஷா ஆய்வு செய்ததில் பல உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. தனியார் செக்யூரிட்டி கம்பெனிகள், வங்கிகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், ரேடியோ, டெலிவிஷன் சேனல்கள், உர கம்பெனிகள், சிமென்ட், தானிய வியாபாரம் செய்யும் கம்பெனிகள், ரொட்டி செய்யும் பேக்கரிகள், விவசாய நிலம், பள்ளிக்கூடங்கள் போன்ற தொழில் அமைப்புகள் ஆகியவற்றில் ராணுவ அறக்கட்டளைகள் முதலீடு செய்து நடத்துகின்றன. அவை வைத்திருக்கும் 96 பெரிய கம்பெனிகளின் பங்குகளில், 9 கம்பெனிகளின் பங்குகள் மட்டுமே பங்கு சந்தையில் பதிவாகியிருக்கின்றன. மற்ற கம்பெனிகள் எல்லாம் பிரைவேட் கம்பெனிகள். இதனால் ஊழல், லஞ்சம் தாண்டவமாடுகிறது. 2005-ல் ஒரு சிமென்ட் கம்பெனியை அடிமாட்டு விலைக்கு ராணுவ அறக்கட்டளை விற்றதாக புகார் வந்தபோது, அதை விசாரணை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை, நாட்டின் பாதுகாப்பிற்காக அதை செய்யக்கூடாது என்று தடுத்தது ராணுவம்.
நாட்டுக்கென்று ராணுவமல்ல, ராணுவத்துக்கென்று நாடு
பாகிஸ்தான் அரசாங்கத்தை ராணுவம் கைக்குள் கொண்டுவர ஆரம்ப காரணம், 1947-ல் நம்முடன் சேர்ந்து சுதந்திரம் பெற்றது பாகிஸ்தான். 1948 -ல் பாகிஸ்தானின் தந்தை ஜின்னா காலமானார். அதற்குப் பிறகு தடி எடுத்தவன் தண்டல்காரன் என்கிற நிலை ஏற்பட்டது. 1951-ல் அதன் பிரதமர் லியாகத் அலி கான் படுகொலை செய்யப்பட்டார். மொகலாய ஆட்சியில் நடந்தது போல சூழ்ச்சி, முதுகில் குத்துதல், கொலை, அராஜகம் ஆகியவை பாகிஸ்தானை உலுக்கியது. எனவே 1954-ல் அரசியல் சாஸனம் உருவாகும் சமயத்தில், ராணுவம் அதிரடி புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றியது. 1957 வரை தன்னுடைய அரசியல் சாஸனத்தைக் கூட வரையறை செய்ய முடியாமல் திண்டாடியது. ராணுவ ஆட்சியில்தான் பாகிஸ்தானிய அரசியல் சாஸனம் வரையப்பட்டு அறிவிக்கப்பட்டது என்றால், எந்த அளவுக்கு ராணுவம் அதை தனக்குச் சாதகமாக மாற்றியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கலாம்.
1957-ல் உருவான அரசியல் சாஸனத்தை 1958-ல் மொகலாய பாணியில் ரத்து செய்து, ஆட்சியைக் கைப்பற்றியது பாகிஸ்தான் ராணுவம். அரசியல் குழப்பத்தால், ராணுவம் இல்லையென்றால் பாகிஸ்தான் இல்லை என்கிற நிலையை ஏற்படுத்தியது. 1958-ல் வந்த ராணுவ ஆட்சி 1962 வரை தொடர்ந்தது. பிறகு மீண்டும் 1969-ல் ராணுவம் அதிரடி புரட்சி செய்து, ஆட்சியைப் பிடித்தது. அது 1971 வரை தொடர்ந்தது. பிறகு 1977-ல் மறுபடியும் புரட்சி செய்து, ராணுவம் ஆட்சியில் அமர்ந்து, ராணுவ ஆட்சி 1985 வரை தொடர்ந்தது. பிறகு 1999-ல் மறுபடியும் ராணுவம் புரட்சி செய்து ஆட்சியை பிடித்தது. பாகிஸ்தான் 17 ஆண்டுகள் நேரடியாக ராணுவ எதேச்சதிகார ஆட்சியிலும், 15 ஆண்டுகள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராணுவ தலைவர் ஆட்சியிலும் இருந்தது. அது தவிர 10 ஆண்டுகள் (1988-99), ராணுவத்தின் எடுபிடி தலைவர்களின் ஆட்சியிலும் இருந்தது என்று நினைவு கூறுகிறார் ஆயிஷா. எனவே 1947-லிருந்து யார் ஆட்சியில் இருந்தாலும், ராணுவம்தான் பாகிஸ்தானை ஆண்டது என்றும் கூறுகிறார் ஆயிஷா. அதனால் 1954-லிருந்து �MilBus -ன் செல்வாக்கு தொடர்ந்து, வளர்ந்து வந்து இன்று பாகிஸ்தானின் வளங்களே அதன் கையில் இருக்கிறது. அதிலிருந்து எல்லா நாடுகளுக்கும் ராணுவம் இருக்கும், ஆனால் ராணுவத்துக்கு என்று இருக்கும் ஒரு நாடு பாகிஸ்தான்" என்று உலக அறிஞர்கள் பலர் கூறுவது எவ்வளவு உண்மை என்று தெரியும்.
விளைவுகள் - பாகிஸ்தானுக்கு பயங்கரமாக இருக்கும்
மேலும் விவரங்களை ஆயிஷா அளிக்கிறார். அவர் கூறியதன் அடிப்படையில் நம் கருத்து என்ன என்று கூறுவோம். பாகிஸ்தான் ராணுவம் ரகசியமாக பாகிஸ்தானிய மக்களை கொள்ளை அடிப்பதால், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் வித்தியாசமில்லை. அதனால்தான் பாகிஸ்தான் ராணுவம் செல்வத்தில் திளைத்து, சுகங்களை அனுபவித்து, வீரியத்தை இழந்து, இதுவரை நம்முடன் நடந்த போர்களில் படுதோல்வி அடைந்தது. வெறுப்பால் உருவான பாகிஸ்தான், ஒரு முதிர்ந்த நாடாக உருவாகாததால் தோன்றிய ஸ்திரமில்லாத அரசியலாலும், பாகிஸ்தானிய மக்களும், அரசியல் தலைவர்களும் ஏன் நீதிமன்றங்களும் கூட ராணுவத்தின் காலில் விழும் அடிமைகளாகி விட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...