Monday, May 11, 2020

கடவுள் வாழும் மனம் அது.

உலகெல்லாம் அன்னையர் தினம் கொண்டாடுகின்றார்கள், வெள்ளையன் ஒரு நாளை சொல்லிவிட்டால் அதுதான் அன்னையர் தினமாம்
தாய்க்கு பாரதமும், தமிழனும் கொடுத்த உயர்வான இடத்தை விட யார் கொடுத்துவிட முடியும்?
நிலம், ஆறு என சகலத்திற்கும் பெண் பெயர் இட்டு மகிழ்ந்த சமூகம் இது, தாயினை அது பெரும் இடத்தில் வைத்திருந்தது.
இந்திய சமூக அமைப்பும், தாய்க்கு கொடுத்த இடம் அலாதியானது, ராமாயணமும், மகாபாரதமும் அதனைத்தான் சொல்கின்றன. ராமனும், பாண்டவர்களும் அப்படி தாயினை தொழுதிருக்கின்றார்கள்,
தாயிடம் செய்த சத்தியத்திற்காக உயிரையே விட்டிருக்கின்றான் கர்ணன்.
தந்தையால் எல்லாம் முடியும் என நினைந்து தாயினை கொன்று, அடுத்த நொடியே தாயினை உயிர்பிக்க மன்றாடினான் பரசுராமன்.
தாயின் ஆசியாலே கடைசிவரை பலத்தோடு நின்றான் துரியன்
இந்திய சமூகம் அப்படித்தான் இருந்திருக்கின்றது
அக்காலத்தில் கண்விழித்த உடன் ஒருவன் தாயின் கால்களில் விழுந்து வணங்குவது இந்திய குடும்பங்களின் பழக்கவழக்கங்களில் ஒன்று. தாய் என்பவளை அந்த ஸ்தானத்தில் வைத்திருந்தது நமது பாரம்பரியம்.
“அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்றதும், தாயிற் சிறந்தகோயிலுமில்லை என சொன்னதும் தமிழன்.
இன்றும் தமிழகத்தில் மனைவியினை தவிர எல்லா பெண்களையும் அம்மா அல்லது தாயே என அழைப்பதுதான் பண்பாடு.
எல்லா பாசத்தினையும் வெறுத்து துறவியான பட்டினத்தார் கூட, தாய்பாசத்தில் உருகி அழியா பாடல்களை கொடுத்திருப்பதை கவனித்திருக்க முடியும்
கிராமங்களில் வயது குறைந்த சிறுமிகளையும் “தாயீ” என அன்போடு அழைப்பதுதான் நமது சிறப்பு.
இப்படியாக நம்மிடம் அன்னை பற்றி ஏதும் இல்லாதது போலவும், வெள்ளையன் கொண்டாட சொன்ன பிறகுதான் நாம் மறக்காமல் அந்த நாளில் அன்னையினை நினைவு கூறவேண்டும் என்பதும் நகைப்புகுரியது.
இதற்கெல்லாம் பெரும் காரணம், கல்வியில் நமது பண்டைய நாகரீகங்களை தாங்கிய, பாரம்பரியங்களை தாங்கிய கல்வியினை கற்பிக்காதது.
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என ஒரு தமிழ்குழ்ந்தை படித்திருக்குமானால் அது அன்னையர் தினம் என‌ வியந்து நிற்காது, தமிழகம் இப்படி கொண்டாடாது.
ராமன் தன் அன்னையின் குரலுக்கு செவிசாய்த்ததையும், பஞ்ச பாண்டவர் தாயின் சொல்லுக்கு கட்டுபட்டு நின்றதையும் ஒருவன் உணர்வான் என்றால் அவனுக்கு இந்நாள் ஆச்சர்யமாய் இராது.
பண்டைய ஓலைசுவடிகள் மறைந்து நமக்கு அச்சிக்கு வந்தது மிக சொற்பமே, அவற்றையும் நாம் தொலைத்துகொண்டிருக்கின்றோம்.
அன்னையினை வணங்கினால் எல்லா ஆசீர்வாதமும் கிடைக்கும் என என்பதில் சந்தேகமே இல்லை
இன்றும் பாருங்கள், தமிழக அரசியல் மற்றும் சகல துறைகளில் உச்சம் பெற்றிருக்கும் பலரினை பாருங்கள், கடவுளை வணங்கி இருக்கமாட்டார்கள், ஆனால் தாயினை வணங்குபவர்களாக இருப்பார்கள்.
நடிகர்களில் முன்பு ராமசந்திரனும், சிவாஜி கணேசனும் அன்னையினை அப்படி வணங்குவார்கள், தங்களை நோக்கும் ரசிகர்களுக்கு அப்படி நல்ல விஷயங்களை சொன்னார்கள்
ராமசந்தர் கடைசி வரை தாய் என உருகி கொண்டிருந்தார், சிவாஜி கணேசன் வீட்டுக்கு "அன்னை இல்லம்" என பெயரிட்டார்
அவர்கள் எவ்வளவு அநியாயக்காரராயினும், பெரும் அயோக்கியர்களாயினும் தாயினை வணங்கியதால் பெற்ற ஒரே ஆசீர்வாதம் அவர்களை தாங்கி நிற்பது கண்கூடாய் தமிழகம் கண்ட அன்னையின் சிறப்பு அப்படி.
கருணாநிதி தன் வீட்டில் தன் இருக்கைக்கு அருகே அஞ்சுகம் அம்மாளுக்கு சிலையே வைத்திருந்தார்.
இளையராஜாவும், ஏ.ஆர் ரகுமான் இன்றும் தாயினை வணங்குவார்கள், விருது வாங்கும் போது தாயின் கையால் வாங்கினார் பாரதிராஜா.
கிரிக்கெட்டில் இருந்து உலக கோப்பையுடன் வெளியேறிய டெண்டுல்கரும் அவர் தாயும் சந்தித்த நிகழ்வு விளையாட்டு சரித்திரத்தின் உன்னதமான நொடி. அதுவரை கிரவுண்ட் பக்கம் வராத அந்த தாய் மகனின் கடைசி ஆட்டத்தை காண வந்ததுதான் தாய்மையின் உன்னத குணம்.
அன்னையினை வணங்குபவனுக்கு எல்லாமே நன்றாய் நடக்கும், அன்னையினை கைவிட்டவன் யாராயினும் எந்த தியாகியாயினும் அவனின் கடைசி காலங்கள் நிம்மதியாய் இரா..
காமராஜர் அவ்வகை, ஈழத்தின் பிரபாகரனும் அவ்வகை..
அன்னையினை வணங்கும் எல்லோருக்கும் எல்லா நாளும் அன்னையர் தினமே
எங்கோ தொலைதூரத்தில் இருந்து கொண்டு தாயின் குரலில் “நல்லா இருக்கியாய்யா” என்ற வார்த்தையினை கேட்டவுடன் , பொங்கி வரும் அழுகையினை மறைத்துகொண்டு பேசி முடித்துவிட்டு, போனை வைத்தபின் ஓவென அழும் மகன்களுக்கும், மகள்களுக்கும் எந்நாளும் அன்னையர் தினமே
இப்பக்கம் இவர்கள் அழுதால், அப்பக்கம் பிள்ளைகளிடம் கஷ்டத்தை சொல்லாமல் தாய் அழுதுகொண்டிருப்பாள்
தாயினை வணங்குபவனுக்கு எல்லாமே கை கூடும் என்றது இந்துமதம், இந்திய பாரம்பரியம். இதனால் தெய்வங்களில் முதன்மையாக தாயினை வைத்து தாயின் பெருமையினை கூறும் பல சம்பவங்களை அது சொன்னது
அன்னையினை ஒருவன் முழுதாக மதிப்பானாகில், அன்னையின் அன்பினை உணர்ந்து கட்டுபடுவானாகில் அவன் இன்னொரு பெண்ணின் கண்ணீருக்கு காரணமாய் இருக்கமாட்டான்
அன்னையின் வாக்குக்கு கட்டுபடுவானாகில் அவன் டாஸ்மாக்கின் நீள் வரிசையில் நிற்க மாட்டான்.
இந்திய பாரம்பரியத்தினை உணர்ந்த ஒருவன், இந்துமத போதனைகளை ஏற்ற ஒருவன் தாயினை மதிப்பான், அவனால் இச்சமூகத்தில் அமைதியும் வளப்பமும் வருமே தவிர வேறு குழப்பங்கள் வார
ஆம் நல்ல மகன் தாயினை மதிப்பான், அவளின் அன்பின் மிகுதிக்கு மதிப்பளிப்பான். ஒருவன் மீது வரும் சிறு களங்கமும் அவன் மேலானது அல்ல, அவன் தாயின் வளர்ப்பில் விழும் கல் என்பதால் தாயின் பெருமை காக்க துடிப்பான்
அவன் கொலை, கொள்ளை, மாது, மதுவில் சிக்கமாட்டான்
அன்னையினை வணங்கும் சமூகம் உருவானால் இங்கு நீதிமன்றமோ காவல் நிலையமோ தேவையிராது, தாயின் அன்பே எல்லாவற்றையும் பார்த்து கொள்ளும்
தாயினை வணங்கினால் ஒருவன் எந்நிலையில் இருந்தாலும் அவனுக்கு மகா உயர்வு உண்டு என்பதற்கு ஏகபட்ட உதாரணங்களை காட்ட முடியும்
அப்படி எந்ந உச்சத்தில் இருந்தாலும் தாயினை எப்படி வணங்க வேண்டும் என்பதற்கும் சில உதாரணங்களை காட்டமுடியும்
தன் மகனின் கவுரவம் காக்க ஒரு தாய் எப்படி வாழவேண்டும் என காமராஜரின் தாய்போல் வெகு சிலரைத்தான் காட்டமுடியும்
மகன் மாநில முதல்வர், பிரதமரை நிர்ணயிப்பவன் என்றாலும் ஓட்டு வீட்டில் கஞ்சியும் கூழுமாக வாழ்க்கை நடத்தினாள் அந்த தாய், தனக்கு வரும் அன்பளிப்பும் வசதியும் மகனின் தூய துறவற வாழ்வுக்கு களங்கம் என வரும் கருதினாள்
காமராஜர் தவ வாழ்வு வாழ்ந்தார் அது தியாகம், ஆனால் அவருக்கு புகழ் சேர்த்து தன்னால் ஒரு துரும்பு களங்கமும் வராமல் பார்த்து கொண்டாள் அல்லவா? சிவகாமி அம்மாள். அதுதான் தாய் அன்பு
தன் மகன் உயரம் பெற பெற ஒவ்வொரு தாயும் மனம் கட்டி, வயிறு கட்டி தன்னால் அவனுக்கு எந்த கெட்ட பெயரும் வந்துவிட கூடாது என தவம் இருக்கின்றாள் அல்லவா? அதுதான் தாய் அன்பு
அந்த அன்புக்கும் அந்த ஆத்ம வலிமைக்கும் ஈடு இணை ஏதுமில்லை, தாயினை வணங்குங்கள் எல்லா நன்மையும் ஆசீயும் உங்களை தேடி ஓடி வரும்
இந்திய புராணங்கள் தாயின் அன்பை சொன்னது, மகன் ஆற்றவேண்டிய கடமைகளை சொன்னது.
அப்படி நம் கண்முன் நல்ல மகனுக்கு அடையாளமாய் விளங்குகின்றார் மோடி, பெரும் இடத்தில் இருப்பவர்கள் தாய்க்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என்பதை அவரிடம் ஒவ்வொரு இந்தியனும் கற்க வேண்டும்
தன் மகனில் தவ வாழ்வுக்கு ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என நிற்கின்றார் அல்லவா அந்த ஹீரபன் அம்மாள் , அவர் அந்த தமிழக கிழவி சிவகாமி அம்மாளின் மறுவடிவம்
இந்த இரு கோவில்களும் ஆளுக்கொரு தெய்வங்களை கொடுத்தன‌
அவர்கள் மட்டுமல்ல இந்நாட்டிற்கு நல்ல குடிமக்களை வளர்த்து கொடுக்கும் ஒவ்வொரு தாயும் இந்த சிவகாமி அம்மாளே, இந்த ஹீரபான் அம்மாளே
அந்த ஒவ்வொரு தாய்க்கும் சிறப்பு வாழ்த்துக்கள், அன்னையரை இச்சமூகம் மதிக்க மதிக்கவே எல்லா குற்றங்களும் தவறுகளும் களையபட்டு நாடே சொர்க்கமாகும்
தாய்பாலில் மட்டுமல்ல, தாயின் பாசத்திலும் வார்த்தையிலும் கூட கலப்படம் இருக்க முடியாது. தாயுள்ளம் என்பது எல்லா குற்றங்களையும் களைய கூடிய போதனயன்றி வேறு சொல்லாது, நல்லதை மட்டுமே போதிக்கும்
காரணம் கடவுள் வாழும் மனம் அது.
"தாயிற் சிறந்த கோவிலுமில்லை" "அன்னையன்றி ஒரு தெய்வவுமில்லை", அவள் அருளின்றி எதுவும் சாத்தியமில்லை
ஒவ்வொரு மகனும் மோடியாகட்டும், ஒவ்வொரு தாயும் ஹீரபான் அம்மாளாகட்டும் அப்படி மாறினால் இத்தேசம் மாபெரும் உச்சத்தை அடையும், நாட்டின் அவசிய தேவை அதுதான்.
ஒவ்வொரு செயல் செய்யும் பொழுதும் விளைவினை கருதுவது போல் , தெய்வத்தை நினைப்பது போல், உங்கள் தாயின் முகத்தையும் ஒரு நொடி சிந்த்துத்து அதை தொடங்குங்கள்.
அது ஒருகாலமும் தவறாய் முடியாது மாறாக உங்களை மிக உயர்த்தும் செயலாக அது அமையும், காரணம் அது தெய்வம் முழு ஆசியோடு தொடங்கி வைக்கும் விஷயம்..
உலகெங்கும் இருக்கும் எல்லா தாய்மார்களாக்கும் "அன்னையர் தின" வாழ்த்துக்கள், நல்ல மகனுக்கு எல்லா நாளும் அன்னையர் தினமே..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...