சுற்றுச்சூழல் துறையில் லஞ்ச சாம்ராஜ்யம் நடத்தி, போலீசாரிடம் சிக்கியதால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள பாண்டியன், வருமானத்திற்கு அதிகமாக, 1,000 மடங்கு சொத்து குவித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை, சைதாப்பேட்டையில் செயல்படும், சுற்றுச்சூழல் துறை இயக்ககத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்தவர் பாண்டியன், 58. சில மாதங்களுக்கு முன், இவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, 88 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின், சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள, பாண்டியன் வீடு; புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அவரது வீடுகளில், விடிய விடிய சோதனை நடந்தது.
இதில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான, 3 கிலோ தங்கம், வைரம்; 7 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாண்டியன் உறவினர் வீடுகளிலும் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.இவற்றில், 50 சதவீத ஆவணங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் பெற்றுள்ளனர்.
மீதமுள்ள சொத்து ஆவணங்கள் கோரி, பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அத்துடன், பாண்டியன் மேலும் சொத்து வாங்கி குவித்து இருக்கும் இடங்களை, அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.பறிமுதல் செய்த நகை, ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், வருமானத்திற்கு அதிகமாக, பாண்டியன், 1,000 மடங்கு சொத்து குவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:சுற்றுச்சூழல் துறையில் லஞ்ச சாம்ராஜ்யம் நடத்தி வந்த பாண்டியனுக்கு, சில அதிகாரிகள் நெருக்கமாக இருந்துள்ளனர். இவர்கள் பற்றி விசாரித்து வருகிறோம். மேலும், பாண்டியன் சட்ட விரோதமாக சொத்து வாங்கி குவித்தது பற்றி, வருமான வரித் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment