Tuesday, February 2, 2021

இரும்புக்_கரம்_கொண்டு_அடக்குங்கள்.

 “செங்கோட்டையில் அட்டூழியம்”, என்ற தலைப்பில் நேற்றைய தேசவிரோத சக்திகளின் பேரணியை படம் பிடித்து காட்டிக்கொண்டிருக்கின்றன இன்றைய நாளிதழ்கள்.

எதிர்கட்சி தலைவர்களின் முகத்தில் ஒரு ஒளியைப் பார்க்க முடிகிறது. பிரதமர் மோடி அரசுக்கு எதிராக பிரளையத்தை ஏற்படுத்திவிட்ட திருப்தி அவர்களுக்கு. இத்தகைய கொண்டாட்டங்கள் நிரந்தரமானதா? இதைப் பற்றி தெரிந்து கொள்ள, நமக்குத் தெரிந்த மகாபாரத நிகழ்வை நினைவில் கொண்டுவருவோம்.
குருக்ஷேத்திர போருக்கு முன், மூத்தவரான பீஷ்மர் போருக்கான விதிகளை வகுத்தார். இரு தரப்பும் இதை ஏற்றுக் கொண்டன. அந்த விதிகள;
கைகளில் ஆயுதம் ஏந்தாத ஒரு வீரனுடன், அவன் மீண்டும் ஆயுதத்தை ஏந்தும் வரை அவனுடன் போரிடக்கூடாது.
போரில் காயம் பட்டு போர்க்களத்திலிருந்து வெளியேறும் வீரனை தாக்கக்கூடாது.
காயமடைந்த வீரனை காப்பாற்றும் முயற்சியில் இருக்கும் வீரனை எதிர்த்து போரிடக்கூடாது.
போரிடாத வீரனை தக்கக்கூடாது
கதிரவன் உதயத்திலிருந்து, மறையும் வரை மட்டுமே போரிட வேண்டும். கதிரவனின் அஸ்தமனத்திற்குப் பின் போரிடக்கூடாது.
போரில் சரணடைந்தவர்களை கொல்லக்கூடாது.
காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களோடு மட்டுமே போரிட வேண்டும். குதிரைப் படை, யானைப்படை, தேர்ப்படை வீரர்கள் தங்களது நிலையில் இருக்கும் வீரர்களோடு மட்டுமே போரிட வேண்டும்.
மகாரதர்கள், மகாரதர்களோடும், அதிரதர்கள், அதிரதர்களோடும் மட்டுமே போரிட வேண்டும்.
இரவு வேளையில் இரு அணிப் படையினரும் ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.
இரு தரப்புகளும் இந்த விதிகளை மிகச் சரியாக, பன்னிரெண்டாம் நாள் போர் வரை கடை பிடித்தார்கள். பதிமூன்றாம் நாள், அர்ஜுனன் மகன் அபிமன்யுவை, ஏழு மாவீரர்கள், துரோணார், கர்ணன், அஸ்வத்தாமன், சல்லியன், பூரிசிரவசு, துரியோதனன், துச்சாதனன் ஆகியோர் சேர்ந்து கொன்றார்கள். பீஷ்மர் வகுத்த, அனைவரும் ஒப்புக்கொண்ட, போர் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டன. இந்த நிகழ்வு ஒரு தவறின் தொடக்கப் புள்ளியாக மாறியது. அதற்குப் பிறகு பாண்டவர்களும் விதிமுறைகளை மீறத் தொடங்கினார்கள். ஒவ்வொரு மீறல்களுக்கும் அபிமன்யு மரணம் மேற்கோள் காட்டப்பட்டது. போர் வரம்பின்றி சங்குல யுத்தமாக மாறியது. எந்த வரம்புமின்றி நடக்கும் யுத்தத்தை ‘சங்குல யுத்தம்' என்று சொல்வார்கள்.
அபிமன்யு விதிகளை மீறி கொல்லப்பட்ட அன்றைய இரவு கெளரவர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. பெரிய சாதனையை செய்து முடித்துவிட்டதாக கெளரவர் தரப்பு நினைத்தது. ஆனால், அந்த மரணம் ஒரு தவறை விதைத்து விட்டது என்பதை காலம் அவர்களுக்கு வெகு விரைவில் உணர்த்திவிட்டது. கெளரவர் தரப்பு வீரர்களாகிய பூரிசிரவஸ், துரோணர், கர்ணன், அஸ்வத்தாமன் போன்றவர்கள் விதிகளுக்கு புறம்பாக பாண்டவர்களால் வீழ்த்தப்பட்டனர். அபிமன்யு மரணம் என்ற விஷத்தை கெளரவர் தரப்பு விதைத்தது. அதே விஷத்தை அவர்களே அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டது.
மீண்டும் விவசாயிகள் பேரணிக்கு வருவோம். அணிவகுப்பு தொடர்பாக விவசாய தலைவர்களுடன் டில்லி, அரியானா, உபி போலீஸ் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சிங்கு, திக்ரி, காசிப்பூர், ஷாஜகான்பூரி, பால்வல் எல்லைகளில் இருந்து 5 அணிவகுப்புகள் புறப்பட்டு குறிப்பிட்ட சாலைகளில் 180 கிமீ தூரத்திற்கு டில்லியை வலம்வர போலீஸ் அனுமதி அளித்தனர். மேலும், பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அணிவகுப்பு நடத்த வேண்டும். 5000 பேர் மட்டுமே அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும். எங்கும் நிற்காமல் ஒரே திசையில் வாகனங்கள் செல்ல வேண்டும்', போன்ற 37 நிபந்தைகளை விதித்தனர் போலீசார். அனைத்து நிபந்தனைகளுக்கும் விவசாய தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஒப்புக்கொண்டதற்கு மாறாக, சிங்கு, திக்ரி, காசிப்பூ எல்லைகளிலிருந்து காலை 10 மணிக்கு டிராக்டர் அணி வகுப்பு தொடங்கும் என்று விவசாய சங்கங்களின் கூட்டமைபு ‘சமியுக்த கிசான் மோர்ச்சா' அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே, சிங்கு எல்லையில் அணிவகுப்பு தொடங்கிவிட்டது. போலீஸ் அனுமதிக்காத அவுட்டர் ரிங் ரோட்டுக்குள் அத்துமீறி தடுப்புகள மீறி அணிவகுப்பு முன்னேறியது. இதைத் தொடந்து எல்லா இடங்களிலும் அத்துமீறல்கள் தொடர்ந்தது. டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் இறந்து போனார். ஒரு புகழ்பெற்ற ஊடகவியலாளர் அந்த மரணம் துப்பாக்கி குண்டுகளால் நிகழ்ந்ததாக தனது டி.வியில் பேட்டியளித்தார். இது எந்தவகை ஊடக தர்மம் என்று தெரியவில்லை.
நடந்தது ஏதோ ஏதேச்சையாக நடக்கவில்லை. இது விவசாயிகள் போராட்டம் என்று நினைக்கும் படியாக நடந்த நிகழ்வுகள் இல்லை. குதர்கமாக பேட்டியளித்த அந்த ஊடகவியலாளரின் பேச்சை சாதாரணமாக கடந்து சென்றுவிடவும் முடியாது.
விவசாயிகள் நடத்திய டிராக்டர் அணிவகுப்பு மூர்க்கத்தனமாக மாறி தலைநகரை வன்முறைக்களமாக மாற்றிவிட்டது. அனுமதித்த பகுதிகளைத் தாண்டி, தடுப்புகளை உடைத்து பல இடங்களில் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் செங்கோட்டையை முற்றுகையிட்டு, பிரதமர் கொடியேற்றும் கொத்தளத்தில் ஏறி, பறந்து கொண்டிருந்த தேசியக் கொடியை இறக்கி, ஒரு சீக்கிய அமைப்பின் கொடியை ஏற்றி தேசத்தையே இழிவுபடுத்திவிட்டது. அடுத்ததாக பார்லிமெண்ட் கட்டிடத்தை நோக்கி முன்னேறியவர்களை போலீசார் விரட்டியடித்தனர். பல இடங்களில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
“டிராக்டர் அணிவகுப்பில் சமூக விரோத கும்பல் ஊடுருவிவிட்டது” என்று குற்றம் சாட்டிவிட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல ஒதுங்கி நிற்கிறது விவசாயிகளின் கூட்டமைப்பு.
போராட்டத்தை வழிநடத்தும் தலைவர்களே! உங்களிடம் சில கேள்விகள்:
அணிவகுப்பை முன்னின்று நடத்திய நீங்கள் மட்டுமே இந்த வன்முறைக்கு பொறுப்பேற்க வேண்டும். வன்முறையை கண்டிப்பதற்கு உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. வன்முறையையும், அணிவகுப்பை சரியான முறையில் நடத்த முடியாத உங்களை இந்த உலகமே கண்டிக்கிறது. எங்கள் கண்டனத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்களால் வழி நடத்த முடியாத கூட்டத்தை எப்படி வழிநடத்த முடியும் என்று நம்பினீர்கள்? அரசை ஏமாற்ற அப்படி செய்தீர்களா?
பேச்சு வார்த்தை முறிந்து போகவில்லையே? அதற்குள் எதற்கு இந்த அணி வகுப்பு? அதுவும் குடியரசு தினத்தில்? இது எதைக் காட்டுகிறது தெரியுமா! உலக அரங்கில் இந்தியாவை தலை குனியவைக்கும் உங்கள் தேச விரோத சிந்தனையை மட்டுமே காட்டுகிறது.
“கூட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்துவிட்டார்கள்”, என்று இப்போது சொல்கிறீர்கள். அது உண்மையென்றால், இந்த வன்முறையில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பது உண்மையென்றால், காவல்துறை தற்போது சி.சி.டி.வி காட்சிகளை ஆதாரமாக வைத்து வன்முறையாளர்களை தேடும் போது அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பீர்களா? உங்களுள் ஒருவராக ஒளிந்திருக்கும் வன்முறையாளர்களை காவல்துறையிடம் ஒப்படைப்பீர்களா?
கையில் குச்சிகளுடனும், கத்தியுடனும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்று எப்படி நம்பினீர்கள்? கையில் எந்த ஆயுதங்களும் இல்லாதவர்கள் மட்டுமே அணிவகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கலாமே? கத்தியும், குச்சியும் ஆயுதங்கள் அல்ல என்று யோகேந்திர யாதவ் போன்ற தலைவர்கள் எப்படி நினைத்தார்கள்?
யோகேந்திர யாதவ் போன்ற தலைவர்கள், வன்முறை நடக்கும் போதே அந்த இடத்தில் ஒரு காரில் அமர்ந்து கொண்டு பேட்டியளிக்கிறார். இந்த பாதுகாப்பும், வாகன வாய்ப்பும் டெல்லி மக்களுக்கோ, சாதாரண போராட்டக்காரர்களுக்கோ கிடைக்குமா?
காவல்துறையினர் இந்திய பிரஜைகள் இல்லையா? அவர்களின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு?
இப்படி பல கேள்விகளை கேட்டுக்கொண்டே போகலாம். உங்களால் எந்த கேள்விக்கும் சரியான பதில் சொல்ல முடியாது. உங்கள் தொண்டர்களால், நீங்கள் திட்டமிட்ட ஒரு அணிவகுப்பில் கலவரம் நடந்தால், அது நீங்கள் தலைமைப் பதவிக்கு லாயக்கில்லாதவர் என்பதைக் காட்டுகிறது. வெட்கப்படுங்கள்.
உங்கள் பேச்சை கேட்காத தொண்டர்களை எப்படி உங்களால் வழி நடத்த முடியும்? ஒருவேளை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஒரு சுமூக முடிவு ஏற்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம்; அதன் பிறகும் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? தொண்டர்கள் மீது எந்த கட்டுப்பாடும் இல்லாத உங்களால் எதுவும் செய்ய முடியாது. பிறகு உங்களுக்கு எதற்கு தலைமைப் பதவி?
எல்லையில் நம் வீரர்கள், “பனியிலும், வெயிலிலும், குடும்பத்தைவிட்டு, சொந்தங்களை விட்டு நாங்கள் தேசத்தை காத்து வருகிறோம். உங்களால் பாதுகாப்பான இடத்தில் உள்ள கொடியைக்கூட காப்பாற்ற முடியவில்லையா?' என்று கேட்டால், என்ன பதில் சொல்வது? இந்தியர்கள் ஒவ்வொருவரும் இந்த கேள்விக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். ஒரு சகஇந்தியனாக கேட்கிறேன், இதற்கு யோகேந்திர யாதவ் போன்ற வன்முறையை வழி நடந்திய தலைவர்கள் பதிலளிக்கட்டும். அதனால்தான் யோகிந்திர யாதவ் போன்ற தலைவர்களின் பெயர்களுக்கு முன் கொடுக்கும் மரியாதை வார்த்தையான “திரு” என்பது சேர்க்கப்படவில்லை. அந்த வார்த்தையை உங்கள் பெயருடன் சேர்ப்பதற்கான தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள்.
தவறை வழி நடத்திய தலைவர்களே! அபிமன்யு வதத்திற்கு நிகரான ஒரு தவற்றை செய்துவிட்டீர்கள். இனி அடுத்தவர் தவறை சுட்டிக்காட்டும் உரிமையை நீங்கள் இழந்துவிட்டீர்கள். இனி போராட்டத்தையும், தவறையும் காலம் தன் வழியில் இழுத்துச் செல்லும். நியாயமான வழியில் உங்களை கையாளாமல் போனாலும், அதை சரி என்று ஏற்றுக்கொள்ளும் சிந்தனையை சாதாரண மக்களிடம் ஏற்படுத்திவிட்டீர்கள்.
எதிர்மறை அரசியல் செய்யும் அரசியல்வாதிகளே, “வன்முறையை கண்டிக்கிறோம்” என்று சொல்லி விட்டு நீங்கள் நகர்ந்து சென்று விட முடியாது. உங்களால் கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தை இத்தனை நாட்கள் ஆதரித்திருப்பதால், இந்த வன்முறையில் உங்களுக்கும் பங்கு உண்டு. சட்டப்படியும், ஜனநாயக ரீதியாகவும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், மக்கள் இந்த வன்முறைகளையும், அவர்களுக்கான உங்கள் ஆதரவையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வன்முறையாளர்கள் எந்த சட்டத்தையும் கடைபிடிக்கத் தேவையில்லை. அதே நேரத்தில் அரசு சட்டம் என்ற வட்டத்திற்குள் இருந்துகொண்டு நகர்வுகளை முடிவு செய்ய வேண்டும் என்று நினைக்கும் அரசியல் தலைவர்களுக்கு ஜனநாயகம் கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.
ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. ஜனநாயகத்தின் சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், வசதிபடைத்தவர்களுக்கும், வன்முறையாளர்களிடம் மட்டுமே இருக்கிறது. நீதி, நேர்மை, நியாயம் பற்றி அக்கறையுள்ளவர்கள் இன்னமும் சுதந்திரத்தை நோக்கி காத்திருக்கும் நிலைதான் தொடர்கிறது.
வன்முறைக்கு எதிராக அரசு எடுக்கும் எப்படிப்பட்ட முடிவுக்கும் சாதாரண மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை நேற்றைய நிகழ்வு படம் பிடித்து காட்டியுள்ளது. அரசே! இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள். சாதாரண மக்களின் சுதந்திரத்தையும், உரிமையையும் உறுதிப்படுத்துங்கள். அபிமன்யுவின் மரணத்தில் நிகழ்ந்த விதிமீறல், நேற்றைய சம்பவத்திலும் ஏற்பட்டிருக்கிறது. இது தவறுகளுக்கான முன்னுதாரணமாக மாறிவிட்டது. இனி எதையும் நியாயப்படுத்தலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...