புதிய கூட்டணி அமைத்தது பற்றி ரவி பச்சமுத்து பேட்டி
''நாங்கள் எப்போதும், தி.மு.க.,வுடன் நிரந்தரமாக இருப்போம் என்று கூறியதில்லை. தற்போது, மக்களுக்கான கூட்டணியை அமைத்துள்ளோம்; எங்கள் கட்சியை சுய பரிசோதனை செய்யவும், உயிரூட்டம் தரவும், புதிய சிந்தனையுடன், புதிய பாதையை தேர்ந்தெடுத்துள்ளோம். அ.ம.மு.க.,வுடன் பேசி வருகிறோம். எந்த கட்சியும் எங்களை துாண்டிவிடவில்லை,'' என,இந்திய ஜனநாயக கட்சி தலைவர், ரவி பச்சமுத்து தெரிவித்தார்.
தி.மு.க., - எம்.பி.,யாக பாரிவேந்தர் செயல்பட்டு வரும் நிலையில், அவர் நிறுவனராக உள்ள, இந்திய ஜனநாயக கட்சி, தி.மு.க., கூட்டணியில் இருந்து, திடீரென விலகியுள்ளது. சமத்துவமக்கள் கட்சி தலைவர் சரத்குமாருடன் கைகோர்த்து, மூன்றாவது அணிக்கு அச்சாரமிட்டுள்ளது. இது தொடர்பாக, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, சிறப்பு பேட்டி:
2019 லோக்சபா தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், தி.மு.க., கூட்டணி சார்பில், பெரம்பலுார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திடீரென, அந்த கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?
தி.மு.க., கூட்டணியில் நிரந்தரமாக இருப்போம் என, அன்று நாங்கள் கூறவில்லை. இன்றும், தி.மு.க., மீது எங்களுக்கு நல்ல மரியாதை உண்டு. 'தி.மு.க.,வின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது' என, அவர்கள் சொல்லும் போது, கூட்டணியில் இருந்து, நாங்கள் வெளியே வந்திருக்கிறோம் என்றால், எங்களுக்கு, நிச்சயம் பதவி ஆசை இல்லை. தி.மு.க., மீது எங்களுக்கு எந்த ஒரு வருத்தமும் கிடையாது. புதிய சிந்தனையுடன், புதிய பாதையை தேர்ந்தெடுத்து, புதிய வழியில் செல்கிறோம்.
தி.மு.க., கூட்டணியில், உங்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கேட்டீர்கள்?
நாங்கள், 10 தொகுதிகள் கேட்டோம்; அவர்கள் மூன்று முதல் ஐந்து தொகுதிகள் தரலாம். அந்த தொகுதிகளை பெற்று, எங்கள் கட்சியை வளர்ப்பது சிரமம். இளைஞர் அணியினர், 50 தொகுதிகள் கேளுங்கள் என, வலியுறுத்தினர். அவர்கள் அனைவருக்கும், தி.மு.க.,வில் பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்பில்லை. அதேசமயம், அரசியலில் ஆர்வமாக வருகிற இளைஞர்களுக்கும், வாய்ப்பு தர வேண்டும். எங்கள் கட்சிக்கு சுய பரிசோதனையும் செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட, உங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா?
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொன்ன போது, எங்களுக்கு விருப்பம் இல்லைஎன்றோம். தற்போது நாங்கள், தனிச்சின்னத்தில் போட்டியிட, தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்துள்ளோம். விரைவில், என்ன சின்னம் என்பதை தெரியப்படுத்துவோம்.
பாரிவேந்தரின் நிலைப்பாடு என்ன?
என் தந்தை, தி.மு.க., - எம்.பி.,யாகவே இருப்பார். பெரம்பலுார் தொகுதிக்கு, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செம்மையாக செயல்படுத்தி வருகிறார். தொகுதி மக்கள் குறைகளை தீர்க்கும் பணிகளையும், அவர் சிறப்பாக செய்து வருகிறார். இதனால், எங்களுக்குள் எந்த முரண்பாடும் கிடையாது. நாங்களும், மக்களுக்கு சேவை செய்து தான் வருகிறோம்; புதிய அரசியலை நோக்கி பயணிக்கிறோம்.
நடிகர் சரத்குமாருடன் கூட்டணி எப்படி உருவானது?
நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல, எங்கள் இருவருக்கும் ஒருமித்த கருத்து இருந்ததால், கூட்டணி அமைத்தோம்.
நடிகர் கமல் தலைமையில், நீங்களும், சரத்குமாரும் இணைந்து, மூன்றாவது அணி உருவாக்கும் திட்டம் உள்ளதா?
கமலுடன் பேசியிருக்கிறோம். அவரது கட்சியில் பழ.கருப்பையா, பொன்ராஜ் போன்றவர்கள் இணைந்துள்ளனர். ஐந்து கட்சிகளின் தலைவர்களுடன் நாங்கள் பேசி வருகிறோம். இன்னும் ஓரிரு நாட்களில், நாங்கள் ஒருங்கிணைந்து, குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி,எங்கள் அணிக்கு பெயர் சூட்டி, முறையாக அறிவிப்போம். நாங்கள் மூன்றாவது அணி அல்ல; முதல் அணியாக மாறுவோம்.
அப்படியானால், உங்கள் அணிக்கு தலைவர் யார்?
ஐந்து பேரும் ஒருங்கிணைப்பாளர்களாக இருப்போம்.
ரஜினி மக்கள் மன்றத்தின் ஆதரவை கேட்பீர்களா?
கண்டிப்பாக கேட்போம். ரஜினியின் நண்பர் அர்ஜுனமூர்த்தியும், எங்களுடன் இணைந்துசெயல்படுவார்.
அ.ம.மு.க.,வும், உங்கள் அணியில் இணையுமா; உங்கள் அணிக்கு ஆதரவாக சசிகலாபிரசாரம் செய்வாரா?
தினகரனிடம் பேசியிருக்கிறோம். சசிகலா எங்களுக்காக, பிரசாரம் செய்வாரா என, எனக்கு தெரியாது.
உங்கள் அணியின் கொள்கை, செயல் திட்டங்கள் பற்றி?
அது குறித்து கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம்; விரைவில் அறிவிப்போம்.
முதல்வர் வேட்பாளராக, யாரை முன்னிலைப்படுத்துவீர்கள்?
தேர்தல் முடிவுக்கு பின், முதல்வரை தேர்வு செய்வோம்.
எத்தனை சதவீத ஓட்டுக்கள், உங்கள் அணிக்கு கிடைக்கும்?
நாங்கள், 30 சதவீத ஓட்டுக்களை எதிர்பார்க்கிேறாம். தேர்வு எழுதும் மாணவர், 50 மார்க்கை எதிர்பார்த்து எழுதுவார்; 30 மார்க் கிடைத்தாலும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
ஆளுங்கட்சியின் எதிர்ப்பு ஓட்டுக்கள், தி.மு.க.,விற்கு செல்லாமல் தடுக்கத்தான், உங்கள் அணி போட்டியிடுகிறதா?
அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் எந்த கட்சியையும், தவறாக விமர்சிக்க மாட்டோம்.திராவிட கட்சிகள், மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. ஒரு நிறுவனத்தில், புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள், உயர் பதவியை பெற, ஆர்வமாகவும், கடினமாகவும்உழைப்பர். அதேபோல, மக்களுக்கு தொண்டாற்ற வரும் புதியவர்கள், மக்களிடம் நல்ல பெயர் எடுக்க, நேர்மையானவர்களாக இருக்க விரும்புவர். அந்த அடிப்படையில் போட்டியிடுகிறோம்.
2016 சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியால், தி.மு.க., ஆட்சிக்கு வராமல் தடுக்கப்பட்டது போல, இந்த தேர்தலிலும் மூன்றாவது அணி என்பது, தி.மு.க.,வின் வெற்றியைதடுக்கும் முயற்சியா?
யாருடைய வெற்றியும், தோல்வியும், மக்கள் கையில் தான் உள்ளது.
உங்கள் அணி யாருக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு துாண்டுகோலாக, தேசிய கட்சி உள்ளதா?
மக்களுக்கு சாதகமாக இருக்கும்; எந்த கட்சியும் எங்களை துாண்டிவிடவில்லை.
கடைசி நேரத்தில் நீங்கள் அமைத்த கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணியா?
மக்களுக்கான கூட்டணி அமைத்துள்ளோம். கட்டடம் கட்டுவதற்கு மேஸ்திரி, கொத்தனார்,சித்தாள், எலக்ட்ரீஷிசன், பிளம்பர் போன்றவர்கள் தேவை. அதைப்போல, அனைத்து ஜாதிமக்களையும் சமமாக பாவித்து, அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க, புதிய சமுதாயம் படைக்க, நாங்கள், 'ஈகோ' பார்க்காமல் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
புது 'வார் ரூம்' அமைத்து, சமூக வலைதளங்கள் வாயிலாக எங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வோம். நாங்கள் தனித்தனியாக அல்ல; கூட்டாக பிரசாரம் செய்வோம்.தேர்தல் தேதி, திடீரென அறிவிக்கப்பட்டது. குறுகிய அவகாசமே உள்ளது. அதனால் தான்,நாங்கள் அவசரமாக இணைந்துள்ளோம். கொரோனா கால கட்டத்தில், தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிப்பது சிறிய கட்சிகளுக்கு சிரமம். நாங்கள் ஒன்றிைணந்தால் தான், எங்கள் கட்சிகள் உயிரோட்டமாக இருக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment