தைப்பூசம் தமிழர்களின் பாரம்பரியத் திருவிழா. தமிழகம் முழுவதும் வேளாண் குடிகள் நிறைந்த பூமி. தை மாதம் அறுவடைக்காலம். மக்கள் தங்கள் வயல்களில் விளைந்த விளைபொருள்களை முருகனுக்குச் சமர்ப்பிக்கும் பொருட்டுக் காவடி எடுத்துக்கொண்டுவந்து முருகனை வழிபட்ட தினம் தைப்பூசம்.
கல்வி வரம் தரும் தைப்பூசம்
நட்சத்திரங்களில் குருபகவானுக்குரியது பூசம். பிரகஸ்பதி தேவ குரு. சிவனோ தட்சிணாமூர்த்தி வடிவம் கொண்டவராகிய ஜகத்குரு. தேவரும் மூவரும் போற்றும் இணையற்ற குரு. சனகாதி முனிவர்களுக்கும் அம்பிகைக்கும் நந்திதேவருக்கும் ஞானம் அருளிய குரு. ஆனால் முருகக் கடவுளோ தகப்பன்சாமியாகி அந்த சிவனுக்கே குருவானவர். எனவே, இந்த பூச நட்சத்திர தினத்தில் குருவுக்கு குருவான அந்த முருகனைப் போற்ற வேண்டியது நம் கடமை. தகப்பன் சுவாமியான சுப்பிரமண்யனை தைப்பூசத்தன்று வழிபட்டால் சகல ஞானமும் கைகூடும் என்பது நம்பிக்கை.
தமிழர்களும் திருவிழாக்களும்
திருவிழாக்கள் நம் பாரம்பர்யத்தில் மிகவும் முக்கியமானவை. தமிழர் திருவிழாக்கள் அனைத்தும் பௌர்ணமியை யொட்டி வருபவை. பௌர்ணமி இரவில் விழித்திருந்து அந்த இறைவனை வழிபடுவது நம் மரபு. நித்திரையில் விழாது இருப்பதாலேயே அந்த நாள் விழா என்று அழைக்கப்பட்டது என்கின்றனர் பெரியோர். வைகாசி விசாகம், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் முருகனுக்குரியவை. இவை சிவபெருமானுக்கும் உரியவை. குறிப்பாகத் தைப்பூசம் சிவ வழிபாட்டுக்கும் உகந்த நாள்.
திருமுருகப் பெருமான்
புண்ணியம் சேர்க்கும் தைப்பூசப் புனித நீராடல்
உலகில் முதன்முதலில் தோன்றிய படைப்பு நீர். உயிர்களின் தேவை. எனவேதான் முதன் முதலில் நீரை இறைவன் உருவாக்கினான். பின்பு உயிர்கள் தோன்றின. உலக இயக்கத்துக்கு ஆதாரமாக விளங்கும் நீரைப் புனித நதிகளாகக் கருதி வழிபட ஆரம்பித்தனர். அந்த நீர் நிலைகளில் இறைவனை தெப்போத்ஸவம் காணச் செய்து அதை வழிபடுவதும் மரபு. புண்ணிய தினங்களில் நீர் நிலைகளில் நீராடுவது மிகுந்த உற்சாகத்தையும் புண்ணியத்தையும் தரும் என்பது நம்பிக்கை. அதனால்தான் தைப்பூச தினத்தன்று புனித நீராடி வழிபடும் வழக்கமும் உருவானது.
`பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே' என்று பாடுகிறார் திருநாவுக்கரசர். இது திருநாவுக்கரசர் காலத்திலேயே பூசம் பெருந்திருவிழாவாக இருந்து வந்துள்ளதை நமக்கு விளக்குகிறது. நீராடியபின் நாம் செய்யவேண்டியது அந்த இறைவனை வழிபடுவதுதான். சாதாரண நாள்களிலும் இறைவனை ஆலயங்களுக்குச் சென்று வழிபடுகிறோம். தைப்பூசத்தையோ விழாவாகக் கொண்டாடி வழிபாடு செய்கிறோம்.
தைப்பூச வழிபாடு கோலாகலமாய் மக்கள் திரண்டு வழிபடும் ஒரு காட்சியை ஞான சம்பந்தர் காட்டுகிறார்.
"மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரம மர்ந்தான்
நெய்ப்பூசு மொன்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்''
'மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தைச் சுற்றிவாழ்கின்ற அழகான பெண்கள் அந்த கபாலீஸ்வரரை வணங்க வருகின்றனர். அதுவும் மை பூசி தங்களை அழகு செய்துகொண்டு வருகின்றனர். ஊரே விழாக்கோலம் பூணுகிறது. பெண்கள் நெய் ஊற்றிப் பொங்கல் செய்து கபாலிக்குப் படைத்து அதை அனைவருக்கும் பிரசாதமாக வழங்குகிறார்கள். காண்பதற்கு இத்தனை அழகிய அனுபவமாக விளங்கும் இந்தத் தைப்பூசத் திருவிழாவைக் காணாமல் போகிறாயா' என்று பாம்பு தீண்டி இறந்துபோன பூம்பாவாயை உயிர் எழுப்பப் பாடிய பதிகத்தில் தைப்பூசத்தைக் கொண்டாடும் சிறப்புகள் அந்தக் காலத்தில் இருந்ததை வெளிப்படுத்துகிறது. ஞானசம்பந்தர் பூம்பாவையை உயிரோடு எழுப்பிய அற்புதமும் தைப்பூச நன்னாளில்தான் நடந்தது.
திருமுருகனுக்குக் காவடி எடுப்பது ஏன்?
காவடி முருகனுக்குச் செலுத்தும் நேர்த்திக்கடன்களில் பெரிதும் போற்றப்படுவது. காவடிகள் பலவிதம். பால், பன்னீர், புஷ்பம், தானியம் என்று பல்வேறு காவடிகளைச் சுமந்துகொண்டு வருவர். காவடி என்பது இரண்டு புறமும் பாத்திரங்கள் கொண்ட ஒரு அமைப்பு. அதில் ஒரு பாத்திரத்தில் நமக்குத் தேவையானவற்றையும் மற்றொரு பாத்திரத்தில் முருகனுக்குச் செலுத்த வேண்டியவற்றவையும் சுமந்து செல்வர். பழநிக்குக் காவடி எடுத்துச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். காரணம் காவடி எடுக்கும் பழக்கத்துக்கும் பழநிக்கும் தொடர்பு உண்டு.
முருகன்
இடும்பன் என்னும் அசுரன் அகத்தியரிடம் விரும்பிச் சேவகரானான். அகத்தியரும் பூர்ச்சவன என்னும் இடத்தில் இருந்த சிவபெருமான் தனக்கு வழங்கிய சிவகிரி, சக்திகிரி என்னும் இரு மலைகளைச் சுமந்துவருமாறு பணித்தார். அதற்காக அங்கு இடும்பன் சென்றபோது க்ஷீபன் என்னும் பிரம்ம தண்டம் கொண்டு வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகா பதுமன், கார்க்கோடகன் என்னும் அஷ்ட (எட்டு) நாகங்களையும் கயிறுகளாக்கி இருபுறமும் இருமலைகளை வைத்துத் தூக்கிவந்தான்.
திருஆவினன் குடியில் ஓய்வுகொள்வதற்காக கிரிகளை இறக்கிவைக்க மீண்டும் அவை அந்த இடத்திலிருந்து நகர மறுத்தன. முருகன் இடும்பனோடு திருவிளையாடல் செய்ய விரும்பி சிறுவனாக வந்து அவனோடு யுத்தம் செய்தார். அதில் இடும்பன் வீழ்ந்தான். அவன் மனைவி இடும்பி முருகனிடம் அழுது புலம்ப முருகன் அவர்களுக்கு இரங்கி இடும்பனை மீண்டுவரச் செய்தார். கூடவே தனக்குப் பாதுகாவலனாக இருக்கும் பெரும் பதவியையும் இடும்பனுக்கு வழங்கினார். அப்படி இடும்பன் சுமந்தவந்த சிவகிரியே பழநி. இடும்பனைப்போல யார் காவடி எடுத்துவருகிறார்களோ அவர்களுக்கு நான் வேண்டும் வரம் தருவேன் என்று வாக்குக் கொடுத்தார் முருகன்.
காவடியின் தத்துவப் பொருள் ஒன்றும் சொல்லப்படுகிறது. சிவகிரி என்பது ஞான வாழ்க்கை, சக்திகிரி என்பது மனம் சார்ந்த உலக வாழ்க்கை. ஜீவாத்மாக்கள் இரண்டையும் சம அளவில் கொண்டு சுமக்க வேண்டும். தனிப்பட்ட அகவாழ்வுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இறை வழிபாட்டுக்கும் வழங்க வேண்டும் என்று கூறுவர்.
வேண்டுதல்கள்
பொதுவாக தைப்பூசத்தையொட்டி முருகன் குடியிருக்கும் கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வது வழக்கம்.காவடிகளும் வேல்குத்துதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் செலுத்துவர். வேண்டுதல்கள் செய்யாதவர்களும் இந்த நாளில் ஆலயம் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்யக் கல்வி, செல்வம், ஞானம் முதலிய சகல வரங்களையும் பெறுவார்கள்.
மேலும் தைப்பூசம் தினம் நம் இந்து தர்மத்தில் புனிதமான நாள் ஏனெனில் இந்நன்நாளில்தான் அப்பன் சிவனும் அம்மை சக்தியும் ஒன்றாக இனைந்து பூமியில் ஆதிமுதல் உயிர்களை தோற்றுவித்தார்கள் படைத்தார்கள் தைப்பூசம் தினம் இவ்உலகத்தின் நம்உயிர்கள் அனைத்திற்க்கும் பிறந்ததினம்.
நம் முருக பக்தர்கள் அனைவருக்கும் தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்
வேல்முருகாவேல்முருகா வேல் வேல்வேல் வெற்றிவேல்
வேல்வேல் வீரவேல்...
No comments:
Post a Comment