பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
காவல்துறையில் 1989ல் பணியில் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜேஷ் தாஸ் மாவட்ட எஸ்.பி. மற்றும் தென் மண்டல ஐ.ஜி. என முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். சுகாதாரத்துறை செயலராக இருந்த பீலாவை காதலித்து மணந்தவர்.இவர் தென்மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றிய போது கூடங்குளம் பிரச்னை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த கலவரத்தை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கூடுதல் எஸ்.பி.யாக பணிபுரிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆறு மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இவரது மனைவி சுகாதாரத்துறை செயலராக பதவி வகித்த போது ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகளின் நட்பு வட்டத்தில் இணைந்தார்.
அதன்பலனாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தவர் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார். பின்னர் பதவி உயர்வு பெற்று காவல் துறையின் சிறப்பு டி.ஜி.பி.யாக பணி அமர்த்தப்பட்டார். டி.ஜி.பி. திரிபாதியே இவரது ஆலோசனையை பெற்ற பிறகு தான் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்கிற அளவுக்கு ராஜேஷ் தாஸின் செல்வாக்கு அதிகரித்தது.முதல்வர் பழனிசாமி இரு தினங்களுக்கு முன் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து ராஜேஷ்தாஸ் சென்றார்.
இவர் பணி முடித்து சென்னை திரும்புகையில் மாவட்ட எல்லை ஒன்றில் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரை காரில் ஏறச்சொல்லி பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் உள்துறை செயலர் பிரபாகர் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.இதையடுத்து பாலியல் புகாருக்கு உள்ளான ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
அவர் வகித்த பொறுப்புக்கு லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டு உள்ளார்.அதேபோல போலீஸ் பயிற்சி டி.ஜி.பி. கரண் சின்கா மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு டி.ஜி.பி.யாகவும் அங்கு பணிபுரிந்த ஷகில் அக்தர் போலீஸ் பயிற்சி கல்லுாரி சிறப்பு டி.ஜி.பி.யாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி. கயல்விழி திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.இதற்கிடையில் 'பெண் எஸ்.பி. கொடுத்துள்ள புகார் மீது உடனே நடவடிக்கை எடுத்து சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாசை 'சஸ்பெண்ட்' செய்து கிரிமினல் வழக்குப் பதிய வேண்டும்.'பெண் போலீசார் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்தால் தி.மு.க. மாபெரும் போராட்டத்தில் இறங்கும்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விசாரணை குழு அமைப்பு
ராஜேஷ்தாஸ் மீதான புகார் குறித்து விசாரிக்க திட்டப்பணிகள் துறை கூடுதல் முதன்மை செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் ஐ.ஜி. அருண் டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment