Tuesday, February 23, 2021

கோஷ்டி பூசலில் கசங்கும் சேலம் தி.மு.க.,.

 முதல்வர் இ.பி.எஸ்., அவரது சொந்த ஊரான இடைப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் மாவட்டம் என்பதால், சேலத்தில், 11 சட்டசபை தொகுதிகளிலும்

வெற்றி பெற்று, 'கெத்து' காட்ட வேண்டிய கட்டாயம், அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

அதே நேரம், முதல்வருக்கு எதிராக, தன் பலத்தை காட்ட, தி.மு.க.,வும் தயாராகி வருகிறது. ஆனால், தலைவிரித்து ஆடும் கோஷ்டி மோதல்களால், அக்கட்சியின் தலைமை திணறுகிறது. சேலம் மாவட்டத்தில், அ.தி.மு.க.,வினரை கட்டுப்படுத்தும் ஆற்றல், இ.பி.எஸ்.,சுக்கு இருக்கிறது. அதேபோல, இங்குள்ள, தி.மு.க.,வினரை கட்டுக்குள் வைக்கக்கூடிய திறமை, ஸ்டாலினுக்கு இல்லை. இது, ஓப்பன் சீக்ரெட். இதற்காக, ஸ்டாலினை குற்றம் சொல்வது தப்பு என, உ.பி.,க்கள் சண்டைக்கு வருகின்றனர். ஏனென்றால், கருணாநிதி இருந்தபோதும், சேலம் மாவட்டத்தை அவரால் தனது கன்ட்ரோலில் வைத்திருக்க முடியவில்லை என, அவர்கள் ஞாபகப்படுத்துகின்றனர்.
அதென்னவோ உண்மை தான். சேலம் மாவட்டம், வீரபாண்டி ஆறுமுகத்தின் கோட்டையாகத் தான் இருந்தது.


தனித்தனி அணி




கருணாநிதி உத்தரவு போட்டால்கூட, அதை செய்யலாமா என, ஆறுமுகத்திடம் அனுமதி பெற்று தான், நிர்வாகிகள் அடுத்த அடி எடுத்து வைத்தனர். அவர் இருந்தவரை அந்த நிலையை மாற்ற, அறிவாலயத்தால் இயலவில்லை.வீரபாண்டி ஆறுமுகம் மரணம் அடைந்த பின், கோஷ்டி பூசலை ஒழிக்கும் முயற்சியாக மாவட்டத்தையே மூன்றாக பிரித்து, தனித்தனி மாவட்ட செயலர்களை நியமித்தது தலைமை. ஆனால், அவர்களிடம் எதிர்பார்த்த ஒற்றுமை ஏற்படவில்லை. கோஷ்டிகள் மூன்று மடங்கு அதிகமானது தான் மிச்சம்.
மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன், அவைத்தலைவர் கலையமுதன், மாநகர செயலர் ஜெயகுமார் ஆகியோர், தனித்தனி அணியாக செயல்படுகின்றனர்.மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, அவைத் தலைவர் கோபால் இடையே, நல்ல உறவு இல்லை. வீரபாண்டி ராஜாவின் ஆதரவாளரான கோபால், எம்.பி., பார்த்திபனுடன் இணைந்து, அரசியல் செய்கிறார். இது போதாது என, நங்கவல்லி
ஒன்றிய செயலர் ரவிச்சந்திரன், தன் பங்குக்கு ஒரு கோஷ்டியுடன் வலம் வருகிறார்.

கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், பனைமரத்துப்பட்டி ஒன்றிய செயலர் பாரப்பட்டி சுரேஷ்குமாருடன் இணைந்து, தனியாக களம் அமைத்து கொண்டார். அதனால், அவருக்கும், தேர்தல் பணிக்குழு செயலர் வீரபாண்டி ராஜாவுக்கும் முட்டிக் கொண்டது.வீரபாண்டி ஆறுமுகத்தின், இன்னொரு மனைவி லீலாவதியின் மகன் டாக்டர் பிரபு, கிழக்கு மாவட்டத்தில் தனி ஆவர்த்தனம் செய்கிறார். கொங்கவல்லி தொகுதியில், 'சீட்' எனக்கு தான் என்று சொல்லி, அங்கே வீடு எடுத்து குடி வந்து விட்டார், முன்னாள் சேலம் மேயர் ரேகா பிரியதர்ஷினி. தினமும் தன் படை பரிவாரத்துடன் தொகுதி வலம் செல்கிறார்.


புதுமுகங்களுக்கு வாய்ப்பு



சேலம், ஒருங்கிணைந்த மாவட்டத்தில், எம்.பி., பார்த்திபன், தனி கோஷ்டி வைத்திருக்கிறார். அவர், தே.மு.தி.க.,வில் இருந்து வந்தவர் என்பதால், மத்திய, மேற்கு மாவட்டத்தில் உள்ள பழைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து, தன் எல்லையை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறார். தொகுதி நிலவரம் அறிய வந்த, 'ஐ-பேக்' குழு, கோஷ்டி பூசலின் பரிணாம வளர்ச்சியை பார்த்து பிரமித்து நின்றது. தேர்தல் வெற்றிக்கு இது பெரிய சவாலாக இருக்கும் என்பதை தலைமைக்கு எச்சரிக்கையாக தெரிவித்துள்ளது. உங்க அறிக்கை இல்லாமலே, இது எனக்கு தெரியும் என்றாராம், தளபதி மகன்.

நிலைமையை சமாளிக்க, பழைய முகங்களை அடியோடு ஒதுக்கி, புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என, ஸ்டாலினுக்கு யோசனை கூறப்பட்டுள்ளது. அவர் பிடி கொடுக்கவில்லை. இந்த தடவை, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மக்கள் முடிவு செய்து விட்டதாக, எழுதிக் கொடுத்ததை திரும்பத் திரும்ப வாசித்ததில், அவரே முழுசாக நம்ப ஆரம்பித்து விட்டார் போலிருக்கிறது. எல்லா தொகுதியிலும் நம்ம தான் ஜெயிக்க போறோம் என, திருவிளையாடல் சேமநாத பாகவதர் பாணியில் தெம்பாக சொல்கிறாராம். எந்த கோஷ்டியிலும் சேராத மிச்ச மீதி, உ.பி.,க்கள், இந்த கதைகளை எல்லாம் கேள்விப்பட்டு, கன்னத்தில் வைத்த கையை இறக்கவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...