சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், இதுவரையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் விபரங்கள் அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வந்தது. அதாவது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுக முன்னிலையில் இருந்தது. இதனால், அக்கட்சியின் தொண்டர்கள் குஷியடைந்தனர்.
ஆனால், தேர்தல் அறிக்கை வெளியீடு மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அனல் பறக்கும் பிரச்சாரத்தின் மூலம் அதிமுகவுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. இது தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்தது. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று 234 தொகுதிகளிலும் வாக்குச்சாவடிக்கு 20 பேர் என்ற வீதத்தில் 2900 வாக்குச்சாவடிகளிலும் கருத்து கணிப்பு நடத்தியது. அதில், அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் 46.5 சதவீத வாக்குகளை அதிமுக பெறும் என்றும், திமுக கூட்டணி 38.5 சதவீத வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை மண்டலத்தில் அதிமுக 39 சதவீத வாக்குகளும், திமுக 45 சதவீத வாக்குகளை பெறும் என தெரிய வந்துள்ளது.
மத்திய மண்டலத்தை பொறுத்தவரையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் சமபலத்துடனயே திகழ்கின்றன. அதாவது, அதிமுகவிற்கு 43 சதவீத வாக்குகளும், திமுக கூட்டணி 44 சதவீத வாக்குகளையும் பெறுகிறது. அதிமுகவுக்கு பின்னடைவை கொடுக்கும் மண்டலமாக வடக்கு மண்டலம் இருக்கும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், 43 சதவீத வாக்குகளை பெற்று திமுகவை பின்னுக்கு தள்ளியுள்ளது. திமுகவுக்கு 42.8 சதவீத வாக்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக அதிமுக 44 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும், திமுக 42 சதவீத வாக்குகளுடன் எதிர்கட்சியாகவே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கிறதா..? என்பது குறித்து தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 53 % பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களிடையே சென்றடைவது தெரிய வந்துள்ளது.
தேர்தல் அறிக்கைக்கு பிறகு மேற்கொள்ளப்பட்டு வந்த பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், மீண்டும் அதிமுகவே ஆட்சியமைக்கும் என்ற முடிவே வெளியாகி வருவது திமுகவினருக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment