கோவில் நிலங்களை அரசு கையகப்படுத்தி, ஏழை விவசாயிகளுக்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும். அதற்காக, இந்திய அறக்கட்டளைகள் சட்டமும், தமிழ்நாடு ஹிந்து அறநிலையத் துறை சட்டமும் திருத்தப்பட வேண்டும்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறது.
இந்த கோரிக்கை, நாடு முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி, தி.மு.க., கூட்டணியில் இருக்கிறது; ஆகவே, தி.மு.க.,வின் இன்னும் வெளிவராத குரலை, வி.சி.க., பிரதிபலித்துள்ளது, அல்லது, தி.மு.க.,வின் ஒப்புதலோடு, இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது என்பது முதல் காரணம்.மத மாற்றம் வாயிலாக, ஹிந்து மதத்தை பலவீனப்படுத்த நடந்த முயற்சிகள், தற்போது தடைபட்டுள்ளதால், ஹிந்து மதத்தின் ஆணி வேராக திகழும் கோவில்களை பலவீனப்படுத்தி, படிப்படியாக அழிக்க விரும்பும் அன்னிய சக்திகளின் ரகசிய திட்டத்தை, வி.சி.க.,வின் கோரிக்கை எதிரொலிப்பது,
இரண்டாவது காரணம்.
ஸ்டாலின் என்ன தான் விளக்கங்கள் சொல்லி சமாளிக்க முயன்றாலும், அவரது குடும்பத்தினரும், கட்சியும், எப்போதுமே ஹிந்து மதத்துக்கு எதிராகவே செயல்பட்டு வருவதை, தமிழக மக்கள் பார்த்து வருகின்றனர். கோவில் நிலங்களை பறிக்கும் முதல் கட்டமாக, 1971ல் கருணாநிதி கொண்டு வந்த, 'உழுபவனுக்கே நிலம்' திட்டத்தில் தொடங்கி, கந்த சஷ்டியையும், ஹிந்து மதத்தையும் கேவலப்படுத்திய கறுப்பர் கூட்டத்தினரை, 2021 தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பது வரை அதற்கான சான்றுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இப்போதே, கோவில்களுக்கு சொந்தமான, ௫.௨௫ லட்சம் ஏக்கர் நிலங்களில், ஐம்பதாயிரம் ஏக்கர் நிலம், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருக்கிறது. ஐகோர்ட் பல முறை கடுமையான உத்தரவுகள் பிறப்பித்தும், எந்த கோவிலுக்கு எங்கே, எவ்வளவு நிலம் சொந்தமாக இருக்கிறது; அதில், எவ்வளவு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது என்ற விபரத்தையோ, தி.மு.க., -- அ.தி.மு.க., அரசுகள், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவே இல்லை.கோவில் சொத்துக்களை வளைத்துப் போடும் விஷயத்தில், அ.தி.மு.க., ரொம்ப யோக்கியம் என, சொல்ல முடியாது. ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்களை, அவர்களுக்கே சொந்தமாக்கி விட்டு, கோவில்களுக்கு அரசு இழப்பீடு கொடுக்கும் என, 2019ல் அரசாணை வெளியிட்டது இதே, அ.தி.மு.க., அரசு தான். ஐகோர்ட் தலையிட்டு, அந்த ஆணைக்கு தடை விதித்தது.
என்றாலும், அ.தி.மு.க., கடவுள் மறுப்பில் வளர்ந்த கட்சி அல்ல என்பதால், ஹிந்து மதத்தையே அசைத்துப் பார்க்கும் நிலைக்குச் செல்ல துணியாது. தி.மு.க.,வை பற்றி அப்படிச் சொல்ல முடியாது. 'கும்பாபிஷேகம் நடத்தினோம், தேர் ஓடச் செய்தோம், மனைவி கோவிலுக்கு செல்கிறார்' மாதிரியான சமாதானங்கள், அக்கட்சியின் ஹிந்து விரோத செயல்பாட்டுக்கு போடப்படும், திரை என்றே கூறவேண்டும்.
எதிர்ப்பு பலமாக இருக்கும் என தெரிந்தால், அதை தானே நேரடியாக செய்யாமல், வேறு கட்சிகளின் வேண்டுகோளாக ஒலிக்கச் செய்து பின்னர் அதை நிறைவேற்றிக் கொடுப்பது என்பது, கருணாநிதி எண்ணற்ற முறை கையாண்ட ஒரு உத்தி. தன்னோடு தொடர்பில் இருந்த, அனைத்து கட்சிகளின் தலைவர்களையும், அவர் இவ்வாறு சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டதை, செய்தியாளர்கள் அருகில் இருந்து பார்த்துள்ளனர்.அவை விமர்சனத்துக்கு உள்ளாவதற்கு பதிலாக, 'கலைஞரின் சாணக்கியத்தனம்' என, அவருக்கு பெருமை தேடித்தர உதவியது. தந்தையின் வழியில் தனயனும், இன்று அதே பாதையில் பயணிக்கிறார் என்பதை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இருந்தபோதிலும், அறிக்கையை வெளியிட்ட திருமாவளவன் தொடங்கி, அநேக, தி.மு.க., நிர்வாகிகள் வரையில், பலரிடமும் தொடர்பு கொண்டு, நமது நிருபர்கள் இது குறித்து கருத்து கேட்டனர். அவற்றின் ஓரளவு சுருக்கப்பட்ட தொகுப்பை இங்கே தருகிறோம்.தனி நபர் சொத்து உரிமை என்பது, 'அப்சல்யூட் ரைட்' அதாவது அசைக்க முடியாத உரிமை கிடையாது என்கிறது நமது அரசியல் சாசனம். அதே சமயம், மத நிறுவனங்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றின் சொத்துரிமை என்பது முழுமையான உரிமை என்கிறது அரசியல் சாசனம். அந்த அடிப்படையில்தான், 1971 வாக்கில் கருணாநிதி அரசு நிறைவேற்றி அனுப்பிய ஹிந்து அறநிலையத் துறை சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டார் ஜனாதிபதி. அதே அடிப்படையில்தான், இ.பி.எஸ்., அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதித்தது சென்னை ஐகோர்ட். எனவே, வி.சி.க.,வின் கோரிக்கை சட்டமாவது நடைமுறை சாத்தியமா என்ற கேள்வியை, அனைவரிடமும் முன்வைத்தோம்.
திருமாவளவன் (வி.சி.க., தலைவர்)
எதெல்லாம் ஆக்கபூர்வமான விஷயங்களோ, அதையெல்லாம் தீவிரமாக யோசித்து, ஆய்ந்துதான் விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. ஹிந்து கோவில் நிலங்கள், பலருடைய ஆக்கிரமிப்பில் உள்ளன. என்ன நோக்கத்துக்காக கோவில்களுக்கு தானமாக கொடுக்கப்பட்டதோ, அது சிதைந்து போய் விட்டது.கோவில் நிலங்களை அரசுடைமையாக்கி விட்டு, அதன் மூலம், ஏழை தமிழ் விவசாயிகளுக்கு நிலங்களை கொடுங்கள் என்று தான் சொல்லிஇருக்கிறோம். அரசு எடுக்கும்போது, இழப்பீடுக்கு என்ன நடைமுறை உள்ளதோ, அதை அரசு கொடுக்கும்போது, கோவில்களுக்கும் நஷ்டம் ஏற்படப் போவதில்லை.
சொல்லப் போனால், கோவிலுக்கு பயன்படாமல் - வருமானம் எதுவும் இன்றி இருக்கும் நிலங்கள், நல்ல நோக்கத்துக்காக பயன்படுத்தப்படும்போது, யாரும் அதை எதிர்க்கப் போவதில்லை. அதோடு, இதற்காக இந்திய அறக்கட்டளைகள் சட்டம் மற்றும் ஹிந்து அறநிலைய சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என தெளிவாக, அறிக்கையில் வழிமுறைகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறோம். அதனால், இதெல்லாம் சாத்தியம்தான். தி.மு.க., ஆட்சி ஏற்பட்டதும், இதை செய்யுமாறு வலியுறுத்துவோம்.
கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், (தி.மு.க., செய்தி தொடர்பு இணை செயலர்)
பெரும்பாலான இடங்களில் போட்டியிடும் ஒரு பெரு இயக்கம், தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தால், அதை ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், அவர்களால் செய்து கொடுக்க முடியும். குறைவான எண்ணிக்கையில் போட்டியிடும் சிறு கட்சிகளெல்லாம், தேர்தல் அறிக்கை வெளியிட்டு என்ன ஆகப் போகிறது என்ற பார்வை, பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. அது சரியானது அல்ல. ஏனென்றால், பெரு இயக்கங்களின் எண்ணத்துக்கோ, கவனத்துக்கோ வராத மக்களுக்குத் தேவையான விஷயங்கள் கூட, சிறு இயக்கங்களின் தேர்தல் அறிக்கை மூலம் வெளிப்படலாம். அதை ஏற்றுக் கொண்டு, அதை செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்? ஜனநாயகத்தில் இந்த அணுகுமுறை தேவை தான்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க., கூட்டணியில் இருக்கிறது. நாளை, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அரசுக்கு இதை கோரிக்கையாக வைத்து, அரசும் பரிசீலித்து செய்து கொடுக்க முன் வந்தால், அப்போது இந்த விஷயம் சாத்தியம் தானே? எனவே, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் எந்த விஷயத்தையும் சாத்தியம் இல்லை என புறக்கணிக்க முடியாது.
பாலகிருஷ்ணன், (மாநில செயலர், மார்க்சிஸ்ட்)
கோவில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து கொண்டிருக்கும் ஏழை விவசாயிகளுக்கு, அந்த நிலத்தை பட்டா போட்டு கொடுக்க வேண்டும் என, நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இதன் மூலம் விவசாய கூலிகளாக இருக்கும் ஏழைகள், வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்வர் என்பது எங்கள் எண்ணம்.
ஒரு தனி நபரிடம், 200 ஏக்கர் பரப்பளவில் நிலம் சொந்தமாக இருந்தால், அதில் இருந்து, 15 ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு மீதியை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என, நில உச்சவரம்பு சட்டம் சொல்கிறது. கோவில்களுக்கு தனியார் தானமாக வழங்கிய நிலம் ஆயிரக்கணக்கான ஏக்கர்களாக இருக்கும்போது, நில உச்சவரம்பு சட்டத்தின் கீழும், அந்நிலங்களை அரசுைடமை ஆக்கலாம். அப்படி கிடைக்கும் நிலத்தை, ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கலாம்.
நிலத்தை எடுக்கும் போது, கோவில்கள் நஷ்டமடையுமே என சிலர் ஆதங்கப்படக் கூடும். நிலத்துக்குரிய சந்தை மதிப்பை, கோவில்களுக்கு அரசே செலுத்தி விடலாம். இதனால், கோவில்களும் நஷ்டம் அடையப் போவதில்லை. இப்படி எடுக்கப்படும், நிலம் ஹிந்து கோவில்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. எல்லா மதங்களையும் சேர்ந்த வழிபாட்டு தலங்களுக்கு சொந்தமான நிலங்களையும் அரசு கையகப்படுத்தி, திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தலாம். அப்படி செய்தால், மத பிரச்னைகளும் எழாது.
திருச்சி சிவா, (தி.மு.க., கொள்கை பரப்பு செயலர்)
கோவில்களை புனரமைக்க, ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்; அன்னதான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்; ஹிந்து கோவில்களுக்கு புனித யாத்திரை செல்லும் ஹிந்துக்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கின்றன. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் உறுப்பினராக இருந்து, இப்படி சாத்தியப்படக்கூடிய ஆன்மிக விஷயங்களில் ஆழ்ந்த கவனம் செலுத்தி, அதையெல்லாம் வாக்குறுதிகளாக சொல்லியிருக்கிறோம்.
கோவில் நிலங்களை அரசுடைமையாக்கி, அதை ஏழை விவசாயிகளுக்குக் கொடுக்கலாம் என்ற வாக்குறுதி சாத்தியப்படுமா என்பது குறித்து, அக்கட்சியினர் தான் சொல்ல வேண்டும். கூட்டணி கட்சியினராக இருந்தாலும், அவர்களின் தேர்தல் அறிக்கைக்கு, தி.மு.க., பொறுப்பேற்க முடியாது.ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து, இதை வி.சி.க., வலியுறுத்தி, அரசு அதை முழுமையாக ஆய்வு செய்து, மக்களுக்கான நல்ல திட்டம் என்றால், அதை, தி.மு.க., அரசு செய்யும். இந்த திட்டங்கள் குறித்தெல்லாம், இப்போதைக்கு ஆழமாக எதையும் சொல்ல முடியாது.
கண்ணதாசன், (தி.மு.க., சட்டத்துறை இணை செயலர்)
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தானமாக கொடுக்கப்பட்டன. அந்த நிலங்களை விவசாயம் செய்ய, பலருக்கும் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது. வருடம் தோறும் நிலத்தைப் பெற்று விவசாயம் செய்யும் விவசாயி, அந்நிலத்துக்கான குத்தகைத் தொகையை முறையாக கோவிலுக்கு செலுத்த வேண்டும் என்பது ஒப்பந்தம். அந்தத் தொகையைக் கொண்டு தான் கோவில் நிர்வாகம் நடத்தப்பட வேண்டும்.ஆனால், காலப் போக்கில் குத்தகை வருமானமும் இல்லை; நிலம் யாரிடம் இருக்கிறது என்ற, 'ரெக்கார்டு'ம் இல்லை. அதனால், லட்சக்கணக்கான ஏக்கர் கோவில் நிலம் இன்றைக்கு யாரிடம் இருக்கிறது; யார் பராமரிப்பில் இருக்கிறது என்ற குறைந்தபட்ச ஆவணம் கூட, அறநிலையத் துறையிடம் இல்லை.
இப்படிப்பட்ட சூழலில், கோவில்களை பராமரிக்கும் பணி, கோவில் பூஜைகள், நிர்வாகம் செய்யும் பணி உள்ளிட்ட எல்லாமே அரசால் செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அறநிலையத் துறை சார்பில், பெரிய கோவில் வருமானம், சிறிய கோவில்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது இந்த வகையில் தான். இருந்தும்,பல கோவில்களில், ஒற்றை விளக்குக் கூட எரியாத நிலை உள்ளது. ஆக, இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.ஆனால், அதற்காக ஹிந்து கோவில் நிலங்கள் அனைத்தையும் அரசுைடமையாக்குவேன் என சொல்வது, மத உணர்வுகளை கிளப்பிவிடும் விஷயமாக அமையலாம். அதனால், அந்தளவுக்குப் போகாமல், யாரிடமெல்லாம், எங்கெல்லாம் ஹிந்து கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் இருக்கிறது என்பதை கண்டறிந்து, அவைகளை முதலில் கோவிலுக்கே திரும்ப கொண்டு வர வேண்டும்.
பின், அதை முறையான ஒப்பந்தம் மூலம், விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்காக கொடுக்கலாம். அதன் வாயிலாக வரும் வருமானத்தை முறைப்படுத்தி, நிலத்தையும், வருமானத்தையும் தொடர் கண்காணிப்பில் வைக்க வேண்டும். அப்படி செய்யும்போது, கோவிலுக்கும் வருமானம் வரும்; ஏழை விவசாயியும் தன்னுடைய விவசாயத் தொழில் மூலம் வருமானத்தை பெருக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வான்.அதை விடுத்து, கோவில் நிலம் அரசுைடமை, அதை ஏழை விவசாயிக்கு கொடுப்பது என்பதெல்லாம் சாத்தியப்படாது என்பதோடு, வீண் சர்ச்சைக்குத்தான் வித்திடும். மத உணர்வு சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் மிக கவனமாக செயல்பட வேண்டும்.-காதர் மொய்தீன்
(பொது செயலர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
திருமாவளவன் சொல்லியிருப்பது, எதன் அடிப்படையில் என தெரியவில்லை. அப்படி, ஹிந்து கோவில் நிலங்களை எடுப்பதற்கு, ஹிந்து அறநிலையத்துறை சட்டங்கள் அனுமதிக்குமா என்பது குறித்தும் எனக்கு தெரியவில்லை. அதனால், அது குறித்து நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது.
வக்பு சொத்துக்களைப் பொறுத்த வரையில், சட்டங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன. பொதுக் காரியங்களுக்காகவும், பள்ளிவாசல், மசூதி போன்ற இறை காரியங்களுக்காகவும் தானமாக எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களை, என்ன எழுதி வைத்திருக்கின்றனரோ அதன்படி செய்து, பராமரித்து, நிர்வகிக்கும் பணியைத் தான் வக்பு வாரியம் செய்ய வேண்டும்.
வக்பு வாரியமே நினைத்தாலும், யாருக்கும் சொத்துக்களை விற்க முடியாது. யாருக்கும் இலவசமாகக் கொடுக்க முடியாது. அதனால், எந்த காரியத்துக்காகவும், வக்பு வாரிய சொத்துக்களை அரசு நிரந்தரமாக எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி எடுக்கவே முடியாது என்ற போது, அதை எடுத்து ஏழைகளுக்கு இலவசமாக கொடுப்பது என்பதெல்லாம், இயலவே இயலாத காரியம்.
வக்பு வாரிய சொத்துக்களை பொது பயன்பாட்டுக்காக, வாடகைக்குத் தான் ஒப்பந்தத்தில், அரசு எடுக்க முடியும். அதை எடுக்க வேண்டும் என்றாலும், வக்பு வாரியத்துக்கு அரசுத் தரப்பில் இருந்து கடிதம் கொடுத்து, கமிட்டியில் வைத்து, அதை தீர்மானமாக நிறைவேற்றித்தான் கொடுப்பர். அதனால், வக்பு வாரிய சொத்துக்களை யாரும் இலவசமாக எடுக்கவோ, பெறவோ முடியாது. அதனால், திருமாவளவன் சொல்லும் திட்டம், வக்பு வாரிய சொத்துக்கள் விஷயத்தில் நடக்கவே நடக்காது.
வைகை செல்வன், (அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர்)
கோவிலின் பராமரிப்புக்காகவும், புனரமைப்புக்காகவும், நிர்வாக செலவினங்களுக்காகவும் தானமாக பெறப்பட்ட கோவில் நிலங்களை, அரசுைடமையாக்குவது என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. ஹிந்து கோவில் நிலங்களை அரசுத் தரப்பில் எடுப்பது என்பது, ஹிந்து பக்தர்களின் உணர்வுகளை நிச்சயம் பாதிக்கும்.
அரசு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, கொள்கை ரீதியில் முடிவெடுத்து, நிலங்களை கையகப்படுத்துவதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. தானமாக பெறப்பட்ட நிலங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்துத்தான், பல கோவில்களின் நிர்வாகம் நடக்கிறது. துணை கோவில்களின் நிர்வாகமும், பெரிய கோவில்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்தே செய்யப்படுகிறது. அப்படி இருக்கும்போது, கோவில் நிலங்களை எடுத்து ஏழைகளுக்கு விவசாயத்துக்காக கொடுக்கலாம் என்பது, தவறான செய்கையாகவே பார்க்கக் கூடும். அதனால், இந்த திட்டத்தை அவ்வளவு எளிதாக செயல்படுத்த முடியாது.
சந்திரசேகரன், (தமிழக காங்., செய்தி தொடர்பாளர்)
கோவில்களை அமைக்கும்போதே, அதனுடைய எதிர்கால பராமரிப்பு, நிர்வாகம் குறித்தெல்லாம் மக்கள் சிந்தித்துத்தான், கோவிலுக்கென நிலங்களை தானமாகக் கொடுத்தனர். இந்த நிலம், கோவிலுக்கு மட்டும் தான் சொந்தம். ஆனால், தானமாகப் பெறப்பட்ட அந்த நிலமெல்லாம், இன்று தனி நபர் ஆளுகைக்குள் சென்று விட்டது.
பல இடங்கள், சமூக விரோதிகளின் கரங்களுக்கு சென்று விட்டன. எந்த நோக்கத்துக்காக, கோவில்களுக்கு நிலம் வந்து சேர்ந்ததோ, அந்த நோக்கம் முழுமையாக சிதைந்த பின், அரசின் உன்னதமான திட்டம் ஒன்றுக்காக, நிலத்தை கையகப்படுத்துவது என்பது நியாயமான ஒரு முயற்சியாகத்தான் இருக்கும்.
ஏழை விவசாயி வாழ்க்கைத் தரம் மேம்பட, இந்த நிலங்கள் எல்லாம் பயன்படும் என்றால், எந்த தடையும் இன்றி, கோவில் நிலங்களை அரசு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கான ஈட்டு தொகையை அரசு, முழுமையாக சம்பந்தப்பட்ட கோவிலுக்கு கொடுத்து விட வேண்டும். அப்படி செய்யும்போது, கோவில் நிர்வாகமும் நொடிக்காது; அரசு திட்டமும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். ஆக, செய்யும் வழிமுறையில் தான் எல்லாமே இருக்கிறது.
No comments:
Post a Comment