கோவை கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் மீது, அடுத்தடுத்து புகார்கள் வந்ததால்,
இருவரையும் இட மாற்றம் செய்வதுடன், தேர்தல் அல்லாத பணியில் நியமிக்கும்படி,
தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. புதிய கலெக்டர் மற்றும் கமிஷனரை நியமிக்கவும், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலுமணிக்கு ஆதரவானவர்கள்'
'தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியை, எப்படியேனும் தேர்தலில் தோற்கடித்தாக வேண்டும்; கொங்கு மண்டலத்தில் மீண்டும் அதிக இடங்களில் வென்றாக வேண்டும்' என்ற நோக்கத்தில், தி.மு.க., பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, காங்கேயத்தைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி, தொண்டாமுத்துாரில், வேலுமணிக்கு எதிராக களம் இறக்கப்பட்டுள்ளார். அடுத்த கட்டமாக, 'கோவை மாவட்டத்தில் உள்ள, பெரும்பாலான அதிகாரிகள், அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவானவர்கள்' என்ற புகாரை, தி.மு.க., கிளப்பியது.'கோவை மாவட்டத்தில் ஆளும் கட்சியினர் செய்யும் தேர்தல் விதிமீறல், அதிகார துஷ்பிரயோகங்களுக்கு, அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர்.
அதைத் தடுக்க, கலெக்டர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்ற வேண்டும்' என, தி.மு.க., சட்டப்பிரிவு செயலரும், எம்.பி.,யுமான ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் கமிஷனில் புகார் அளித்தார்.அதன் தொடர்ச்சியாக, கோவை கலெக்டர் ராஜாமணி, போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோர், அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களை, தேர்தல் அல்லாத பணிகளில் நியமிக்கும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
புதிய கலெக்டராகவும், மாவட்ட தேர்தல் அலுவலராகவும், தொழில் முனைவோர் மற்றும் முயற்சிகள் நிறுவன இயக்குனர் நாகராஜனை நியமிக்கவும்; கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசிர்வாதத்தை, கோவை போலீஸ் கமிஷனராக நியமிக்கவும், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாறுதல் உத்தரவால் தி.மு.க., தரப்பு உற்சாகத்தில் உள்ளது.
யார் இந்த ராஜாமணி?
கலெக்டர் ராஜாமணி, கோவையில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக, தீவிரமாக பணியாற்றியவர். தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான, முதல் கலெக்டர் இவர் தான்.
விவசாயிகள், தொழில் துறையினர், தன்னார்வ அமைப்பினர் என, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பாராட்டு பெற்றவர்.
கடந்த, 2019 பிப்., 19ல் கலெக்டராக பொறுப்பேற்றார். லோக்சபா தேர்தலின்போது, கோவை எம்.பி., தொகுதிக்கு, தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர். கடந்த, 2009ல் ஐ.ஏ.எஸ்., தகுதி பெற்றவர். இதற்கு முன், திருச்சி கலெக்டராகவும், துாத்துக்குடி மாநகராட்சி கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார்.
சுமித் சரண் யார்?
பணியிட மாறுதலுக்கு ஆளான கமிஷனர் சுமித் சரண், கோவையில், 2018 அக்., 5ல் பொறுப்பேற்றார். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், முன்னதாக சென்னையில், அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்தார். ஏழாண்டுகள் சி.பி.ஐ.,யில் பணியாற்றியுள்ளார். துாத்துக்குடி எஸ்.பி.,யாகவும் பணியாற்றியுள்ளார். இவரது தந்தை, உ.பி., மாநில டி.ஜி.பி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
No comments:
Post a Comment