இந்த வைணவத் திருப்பதிகளை “நவதிருப்பதிகள்“ என்பர். ஒவ்வொரு திருப்பதியை வழிபட ஒரு கிரகதோஷம் நீங்கும் என்று சொல்வார்கள், தாமிரபரணிக்கு ஒரு விசேஷம் உண்டு. தன் இரு கரைகளிலும் ஏராளமான சிவ, விஷ்ணு தலங்களைக்கொண்டிருக்கும் திருநதி இது.
கங்கையைப் போல், காவிரியைப்போல் சமயப் பெருமை படைத்த நதியே தாமிரபரணியாகும். இதனை தட்சிண கங்கை என்று சொல்வதும் உண்டு.
தாமிரபரணி கரையோரத்தில் ஒன்பது சிவன்கோயில்கள் உண்டு. அதை “நவ கயிலாயம்“ என்பார்கள். நவகயிலாயத்துக்கு இணையாக ஒன்பது திருப்பதிகள் உண்டு. இந்த வைணவத் திருப்பதிகளை “நவதிருப்பதிகள்“ என்பர். ஒவ்வொரு திருப்பதியை வழிபட ஒரு கிரகதோஷம் நீங்கும் என்று சொல்வார்கள்.
*நவதிருப்பதிகளில் முதலாவது ஸ்ரீவைகுண்டம்* இங்குள்ள மூலவர் ஸ்ரீவைகுண்டநாதன், உற்சவர் கள்ளப்பெருமாள், தாயார் முறையே வைகுந்த வல்லி, பூதேவி என்று சொல்லப்படுவார். ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இது சூரியதோஷ நிவர்த்தி தலம்.
*இரண்டாவது வரகுணமங்கை* வீற்றிருந்த கோலத்தில் விஜயாசனப் பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். வரகுணவல்லி என்பது தாயாரின் பெயர். வரகுணமங்கை தாயார் உபயநாச்சியார். இந்தத் தலம் பரிகார தலமாகும்.
*மூன்றாவது திருப்புளியங்குடி* புஜங்க சயனத்தில் மூலவர் காய்சேன வேந்தன் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். மலா்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார் இவர் தேவியர். இது புதனுக்குரிய பரிகார தலமாகும்.
*நான்கு, ஐந்தாவது தலங்கள் திருத்தொலைவில்லி மங்கலம்* இதனை “இரட்டைத் திருப்பதி“ என்பார்கள். இரண்டு பெருமாள் கோயில்கள் உண்டு. சீனுவாசன் (தேவபிரான்). அரவிந்தரோசனன் (செந்தாமரைக் கண்ணன்) ஆகிய இருவரும் முறையே நின்ற வீற்றிருந்த கோலங்களில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றனர். இது ராகு-கேது பரிகாரத் தலமாகும்.
*ஆறாவது திருக்குளத்தை எனப்படும் பெருங்குளமாகும்* இங்குள்ள சீனிவாசன் மற்றும் அரவிந்தரோசனன் நின்ற கோலத்திழல் சேவை சாதிக்கிறார்கள். அலமேலுமங்கையார், குழந்தை வல்லி என்பன தாயார் திருநாமங்கள். இது சனி பரிகார தலம்.
*ஏழாவது திருக்கோளூர்* இங்கு வைத்தமானிதி பெருமாள் கோயிலில் வைத்திநிதி பெருமாள், நிஷேபவித்தன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தாயார் குமுதவல்லி, கோளூர்வல்லி எனப்படுவர். இது செவ்வாய்க்குரியபரிகார தலமாகும்.
*எட்டாவது தென்திருப்பேரை எனப்படும் இத்தலம் திருப்பொறை எனப்படுகிறது* மகரநெடுங்குடைகாதன் மற்றும் நிகரில் முகில்வண்ணன் வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தாயார் முறையே குழக்காதவல்லி, திருப்பேறை நாச்சியார் எனப்படுவர். இது சுக்கிரன் பரிகார தலமாகும்.
*ஒன்பதாவது திருத்தலம் திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார்திருநகரியாகும்* இது நம்மாழ்வார் அவதாரத் தலம். ஆதிநாதன், ஆதிப்பிரான், பொலிந்துநின்றபிரான் என்றெல்லாம் போற்றப்படும் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என்பன தேவியின் திருநாமங்கள். இது குரு பரிகாரத் தலமாகும்.
இந்த ஒன்பது ஆலயங்களிலிருந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது “நவகருட சேவை“ என்பது விசேஷமாகச் சொல்லப்படும்.
திருநாங்கூர் கருட சேவையைப் போல மிக விசேஷமானது நவகருட சேவையாகும். நவகருட சேவையை தரிசிக்க கிரகதோஷங்கள் அனைத்தும் விலகுதல் உறுதி என்பது அடியவர்கள் அனுபவித்தில் உணர்ந்த நம்பிக்கைகளில் ஒன்றாகும்...
No comments:
Post a Comment