Wednesday, November 23, 2022

*23.11.2022 புதன் கார்த்திகை அம்மாவாசை - திருவிசைநல்லூர்*

 *'அய்யாவாள் வீட்டின் திதியில் உண்டதால், இரவு நைவேத்தியம் வேண்டாம்’* என்று அந்தத் துண்டுச் சீட்டில் எழுதியிருந்தது. படிப்பதற்கு அதிசயமாக இருக்கிறதா…. ஆம்

*எப்பேர்ப்பட்ட மகான்கள் பிறந்து, வளர்ந்து அதிசயங்கள் நடத்திய மாநிலம் தான் நம் தமிழகம்.*
இன்றளவும் சில சிவ திவ்ய நாமங்கள், சிவ தோடயமங்கலம், சிவ நாம ஸங்கீர்த்தனம் பஜனை ஸம்ப்ரதாயத்தில் உயிர்ப்புடன் இன்றும் விளங்குவதற்கு ஶ்ரீதர ஐயாவாளே காரணம்!!
*ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வருகின்ற அமாவாசையன்று திருவிசநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் இல்லக் கிணற்றில் இன்றும் கங்கை பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம்.*
கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் ஸ்ரீதர ஐயாவாள். இவர் தன் பதவி சொத்துக்களைத் துறந்து விட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள திருவிசநல்லூரில் குடியமர்ந்து விட்டார். தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூன சேத்ரமான திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார். அர்த்தஜாம பூஜையும் காண்பார். சிவன் மேல் அபார பக்தி கொண்டவர். இவரது தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும்.
*அத்தகைய ஒரு நாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த சமையல் தயார் செய்ய ஏற்பாடு செய்து விட்டு காவிரியில் நீராட சென்றார். நீராடி இல்லம் திரும்பும் போது எதிரே வந்த வயதான ஏழை ஐயாவாளிடம் சுவாமி ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன் என கேட்கவும், அவர் மீது இரக்கம் கொண்ட ஐயாவாள் அவரை இல்லத்திற்கு அழைத்து வந்த போது சிரார்த்த சமையல் மட்டுமே தயாராக இருந்தது. பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல் உணவைக் கொடுத்து பசியாற்றினார்.*
சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ண வேண்டும். மீதம் உள்ளதை பசுவுக்குத்தான் தருவார்கள். அந்த நியதியை மீறினார் ஐயாவாள். அவரது செயலைக் கண்ட அந்தணர்கள், *‘இது சாஸ்திர விரோதம். இதற்கு பரிகாரமாக ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் காசி சென்று கங்கையில் நீராட வேண்டும். இல்லாவிட்டால் ஊர் விலக்கு செய்து, அவரை குடும்பத்துடன் நீக்கி வைக்க வேண்டும்’* என்று கூறியதுடன், சிரார்த்தம் செய்யவும் மறுத்து விட்டனர்
*‘வடநாட்டில் இருக்கும் கங்கையில் ஒரே நாளில் நீராடித் திரும்ப முடியுமா? கும்பகோணத்தில் இருந்து காசியில் இருக்கும் கங்கைக்கு சென்று வருவதற்குள், அடுத்த திதி வந்து விடுமே!’* என்று மகான் வருந்தினார்.
இறைவனை நினைத்து மனமுருகி *‘கங்காஷ்டகம்'* என்னும் துதிபாடினார். அவர் பாடி முடித்ததும்,
*அவர் வீட்டுக் கிணற்றில் இருந்து கங்கை பொங்கி வழிந்தது.*
கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக்காடானது.
*இதைக் கண்டு அதிசயித்த மக்கள், ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரிடம் மன்னிப்புக் கேட்டு, அந்த கங்கை நீரில் நீராடினர்கள். சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து மகானிடம் மன்னிப்பு கேட்க, மகானும் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்திக்க கங்கையும் அடங்கி அக்கிணற்றிலேயே நிலைத்தது என்பது ஐதீகம். அதைத் தொடர்ந்து திதி கொடுக்கப்பட்டது.*
காலையில் நடந்த இந்த நிகழ்வுகளின் காரணமான, மகானால் திருவிசநல்லூர் ஆலயத்திற்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை.
அன்று மாலை திருவிசநல்லூர் ஈசன் கருவறையில் மூர்த்தங்களிடம், ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில், *‘இன்று மதியம் ஸ்ரீதர அய்யாவாள் வீட்டின் திதியில் உண்டதால், இரவு நைவேத்தியம் வேண்டாம்’* எழுதியிருந்தது.
இந்த அற்புத நிகழ்வே ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திருவிசநல்லூர்
ஸ்ரீதர வெங்கடேச மடத்தில் நிகழ்கிறது.
மகான் தன்னுடைய கங்காஷ்டகத்தில், *‘கங்கையே நீ இங்கேயே ஸ்திரமாக இரு’*
என்று வேண்டுகிறார். அதனால் இந்தக் கிணற்றிலுள்ள தீர்த்தம் எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே!.
*இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். மகான் வசித்த இல்லம் மடமாக மாற்றப்பட்டுள்ளது.*
இங்கு கங்கை பொங்கும் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. பத்தாம் நாளன்று கார்த்திகை அமாவாசை அன்று தான் கங்கை கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும்.
*கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று, சங்கல்ப ஸ்நானம் செய்து விட்டு, அங்கிருந்து தீர்த்தம் கொணர்ந்து கிணற்றில் விடுவார்கள். பிறகு கிணற்றுக்கு கங்கா பூஜை நடத்திவிட்டு காலை ஐந்து மணியில் இருந்து எல்லோரும் நீராடுவார்கள். அப்போது அங்கு நடக்கும் கங்கா பூஜையின்போது அந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதன் அடையாளமாக நுரை மிகுந்துகொண்டு நீர் மட்டம் உயர்ந்து வருமாம். அன்று ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும் சிறிதும் நீர் மட்டம் குறையாது. இந்த ஞானம் வழியும் கிணறான திருவிசநல்லூர் தலத்திற்குச் சென்று கார்த்திகை அமாவாசையன்று நீராடுவது பெறுவதற்கு அரிய பெரும் பாக்கியமாகும்.*
பின்னர் ஈசன் அருளால் அற்புதங்கள் பல புரிந்த ஸ்ரீதர வெங்கடேசர் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமியிடம் ஜோதி வடிவில் ஐக்கியமானார். கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று
திருவிடைமருதூர் திருக்கோவில் மகாலிங்க சுவாமிக்கு, ஸ்ரீதர வெங்கடேசர் மடத்திலிருந்து வழங்கப் பெறும் வஸ்திரம் சாத்தப்படுகிறது.
*அதுபோல அன்று உச்சிகாலப் பூஜையின் நைவேத்தியம், திருநீறு முதலிய பிரசாதங்கள் திருக்கோவில் சிவாச்சாரியார் மூலம் மகானின் மடத்துக்கு தந்தருளும் ஐதீக நிகழ்வும் இன்றளவும் நடக்கிறது.*
கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் இருக்கிறது.
இன்று அந்த ஸ்ரீ வேங்கடேச ஸ்ரீதர அய்யாவாள் வீடு மடமாக மாற்றப்பட்டுள்ளது. அந்தக் கிணறு இன்றும் உள்ளது. கார்த்திகை அமாவாசியன்று பலரும் இங்குவந்து நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டுச் செல்கிறார்கள்.
நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் இவரது சமகாலத்தவர். திருவிசைநல்லூரில்
அய்யாவாள் வீட்டில் கங்கை பொங்கிய அற்புதம் நிகழ்ந்த போது சதாசிவர் உடனிருந்ததாகவும் *“ஜய துங்க தரங்கே கங்கே”* என்ற கீர்த்தனை அப்போது தான் இயற்றப் பட்டது என்றும் ஒரு ஐதிகம் உள்ளது.
🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...