*மாற்றம் இல்லை..*
*எங்கள் வீட்டில் காபி* *வாயில் வைக்க வழங்காது.*
சிந்தாதிரி பேட்டையில் அப்போது அய்யங்கார்ஸ் காபியின் கிளை இருந்தது.
இன்னும் இருக்கிறதா? என்று தெரியவில்லை.
அச்சுதா ! அமரரேறே!ஆயர் தம் கொழுந்தே!அபாரமாக இருக்கும் அந்த அய்யங்கார்ஸ் காபித்தூள் மணம்!
இந்திர லோகம் எல்லாம் வேண்டாம்..அரங்கமாநகருளானே!
ஆனால் அதே சிந்தாதிரிபேட்டையில் எங்கள் மாமாவும் காபித்தூள் கடை ஒன்றை நடத்தி வந்தார்.
பாப்புலர் காபி!
இன்றும் இருக்கிறது.
நடத்துபவர் என் மாமாவிடம் பணி செய்த சுப்பராயன் என்கிற சூப்பராயலு..அவர் குடும்பத்தார்.
நரசுஸ் காபி விளம்பரங்களை நான் வார இதழ்களில் பார்த்ததுண்டு.
ருசித்ததில்லை இன்றுவரை..
நூறாண்டை நெருங்கி கொண்டிருக்கிறது அந்த நிறுவனம்..
அபாரமான சாதனை!
அந்த நாளில் தீபாவளி மலர்கள் எல்லாவற்றிலும் நரசுஸ் காபி விளம்பரம் நிச்சயம் உண்டு..
அந்த ஒன்றிற்காகவே நரசுஸ் காபியிடம் நன்றி பாராட்டுகிறேன்.
கடந்த ஒரு நூற்றாண்டில் காபியை வைத்து மட்டும் சில கோடி நகைச்சுவை துணுக்குகள் வந்திருப்பதாக உறுதி செய்யப்படாத ஒரு தகவல் சொல்கிறது.
சித்ர லேகா படம் போட்டிருக்கிறார்.
சாமா போட்டிருக்கிறார்.
கோபுலுவும் போட்டிருக்கிறார்..
நம்ப நரசுஸ் காபி விளம்பரங்களுக்கான சித்திரங்களை சொல்கிறேன்..
1940 ஆம் ஆண்டுகளில் துவங்கி வெளியான விளம்பரங்களில் ஒரு பத்து விளம்பரங்களை இங்கே பதிவிட்டிருக்கிறேன்...
தேடி தேடி சேகரித்த விளம்பர சித்திரங்கள் அவை.
அவை பற்றியும் உங்களிடமிருந்து அறிய ஆவல்..
பிரதி பலனாக நரசுஸ் காபி தர வக்கற்றவன் என்பதையும் வெட்கத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.
நரசுஸ் காபி என்கிற நிறுவனத்திடமும் அந்த நிறுவனம் செய்து வந்த பத்திரிக்கை விளம்பரங்கள் மீதும் என் சிந்தையை திருப்பியது அவர்கள் 1980 களில் D.D.யில் ஒளிப்பரப்பான நரசுஸ் காபி விளம்பரம் தான்..
தேங்காய்,மனோரமா ஜோடி ஒரு விளம்பரத்தில்..
உசிலை மணி இன்னொரு விளம்பரத்தில்.
என் ஓட்டு தேங்காய் மனோரமா ஜோடி,அந்த ஊஞ்சல் விளம்பரத்திற்கே.
நரசுஸ்னா நரசுஸ் தான்..
பேஷ்!பேஷ்!
ரொம்ப நன்னாருக்கு.
இப்படி இருக்கும் அந்த விளம்பரங்கள்..
குற்றால அழகை மட்டும் அல்ல,
நல்ல காபி பிரியர்கள் காபி குடிக்கும் அழகை பார்க்கவும் ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே!
நான் சில பிரபலங்கள் அப்படி காபி சாப்பிடும் அழகை நிழல் படங்களாக பார்த்திருக்கிறேன்.
வியந்திருகிறேன்.
அசந்தும் போயிருக்கிறேன்.
பளபளவென்று மின்னும் ஒரு பித்தளை லோட்டாவை மேல் துவாலையால் சுற்றிக்கொண்டு மெல்ல மெல்ல அந்த தேவ பானத்தை உறிஞ்சுவார்கள் அந்நாளைய பிரபலங்கள் பலரும்.
கை பொறுக்காத சூடு தான் அந்த காபி!
ஆனால் தொண்டைக்கு அவ்வளவு இதம்!
எப்படி இது சாத்தியம்!
இன்றும் எனக்கு விளங்காத புதிர் தான்.
திரு.வாசன்,அமரர் கல்கி,மூதறிஞ்ஞர் ராஜாஜி ஆகியோர் எல்லாம் மேல் துவாலையால் லோட்டாவை சுற்றிக்கொண்டு தொண்டையை நனைத்துக்கொண்ட அமரர்கள் தான்.
காபியை பற்றி அமரர்கள் கல்கி,தேவன் மற்றும் S.V.V ஆகியோர் எழுதி வைத்தவை அநேகம்..
காபி என்பது இறக்குமதி சரக்கு தான்..
ஆனால் அது தென்னாட்டுக்கே உரிய தொன்மையான வஸ்து என்றே ஆகி போனது.
டெல்லியில் அப்படித்தான் பேச்சாம்!
தென் இந்தியபிராமணர்களையும் காபியையும் பிரிக்கவே முடியாது என்று பேச்சாம்.
காபி அருந்தி அமரர் ஆனவர்களை விட தண்டகுடியாய் ஆன குடும்பங்கள் அநேகம் என்றே எண்ணுகிறேன்..
பட்டு புடவை,ப்ளூ ஜாகர் வேண்டாம்.
நாளைக்கு நாலுவேளை நல்ல காபி நேக்கு போதும்..
பகவான் அனுக்கிரகம் அதற்கு இருந்தால் போதும்டி என்கிற மாது சிரோன்மணிகள்..
சீட்டு கச்சேரி,பாட்டு கச்சேரி ரெண்டும் வேணாம்..
அப்பப்ப தொண்டைய நனைச்சுக்க சித்த சூடா காபி இருந்தா போறும்!
என்கிற சுவாமிகள் என்று இரு பாலரிலும் பலரை பற்றி படித்திருக்கிறேன்.
பார்த்தும் இருக்கிறேன்.
அம்மாதிரி பித்தளை டபரா செட்டில் சூடாக காபி அருந்தியிருக்கிறேன் நானும்.குஷியாகியும் இருக்கிறேன்.
ஆனாலும் அந்த பானத்திற்கு நான் அடிமையாகாத காரணம் நாளும் எனக்கு அந்த பாக்கியம் வாய்க்காது என்கிற மெய் ஞானம் தான்.
பிராமணா போஜனப்ரியா என்று ஸ்லோகம் இருக்கிறதாம்.
ஆனால் அதை விட அவர்கள் நல்ல காபிப்ரியர்கள் என்பதே நிஜம்.
No comments:
Post a Comment