ஒரு மனநல மருத்துவருக்கு ஒரு பெண்மணி போன் செய்து தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொல்லி அழுகிறாள். பதறிப்போன மருத்துவர் ‘அழாதீர்கள்... ஏன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறீர்கள்’ என கேட்க, அந்தப் பெண்மணி அரைமணி நேரம் மூச்சு முட்ட ஏதேதோ காரணங்களைச் சொல்கிறார்.
‘எதுவானாலும் நாளை முடிவெடுக்கலாம். இப்போது தூங்குங்கள்’ எனச் சொல்லி சமாதானப்படுத்துகிறார் மருத்துவர்.
அடுத்த நாள் மருத்துவர் அந்தப் பெண்மணிக்குப் போன் செய்து நலம் விசாரிக்கிறார். ‘தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன் டாக்டர் ரொம்ப நன்றி’ என்று அந்தப் பெண்மணி சொல்ல மருத்துவருக்கோ ஆச்சர்யம். நான் சொன்ன எந்த விஷயம் உங்கள் மனதை மாற்றியது என கேட்டார்.
‘டாக்டர்... நீங்கள் சொன்ன எதுவுமே எனக்கு ஆறுதலாக இல்லை.... இதுவரை நான் சொல்வதை ஐந்து நிமிடம் கூட யாரும் காதுகொடுத்துக் கேட்டதே இல்லை. நீங்கள்தான் நான் சொல்வதை பொறுமையாக கேட்டீர்கள். அதனால்தான் என் மனம் மாறியது’ என்றார் அந்தப் பெண்மணி.
இன்று பலரது பிரச்சனைகளின் தீவிரத்துக்கு மிக முக்கியக் காரணம் அவர்கள் புலம்பித்தள்ள நம்பகமான மனிதர்கள் இல்லாமையே.
கடவுளிடம் நாம் மனதார பிராத்தனை செய்துகொள்வதன் பின்னணியிலும் ஓர் உளவியல் உள்ளது.
கண்ணனின் பக்தர்கள் அனைவரும் தங்கள் பிரச்சனைகளை கண்ணனிடம் மனதாரச் சொல்லி தீர்வு கிடைக்கப்பெற்று வந்தார்கள். ‘நீ சிரிப்பதைத் தவிர எதுவுமே சொல்வதில்லை. எல்லோருக்கும் எப்படி தீர்வு கிடைக்கிறது?’ என்று பிரம்மன் ஆச்சர்யமாகக் கேட்கிறார்.
அப்போது கண்ணன் பிரம்மனை பூலோகத்துக்கு அழைத்துச் செல்கிறார்.
எல்லா வசதியும் இருந்தும் மன நிம்மதி இல்லாத ஒருவனிடம் கண்ணன், ‘உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்று கேட்கிறார்.
அவன் மடைதிறந்த வெள்ளம் போல் தன் குழப்பங்களைக் கொட்டித் தீர்த்தான்.
கண்ணன் அமைதியாக கேட்டு கொண்டிருந்தார்.
அந்தக் குழப்பவாதியே தன் பிரச்சனைகளுக்குத் தான் செய்ய போகும் தீர்வுகளைப் பற்றியும், சாதக பாதங்களையும் தெள்ளத்தெளிவாக விளக்கினான்.
அவன் சொல்லி முடித்ததும் அவனது மனதில் தெளிவு பிறந்தது. மகிழ்ச்சியாக விடைபெற்றான்.
இப்போது கண்ணன், ‘பார்த்தீர்களா பிரம்மா, அவன் புத்திசாலி. அவன் பிரச்னையை அவனே தீர்த்துக்கொள்ளும் அளவுக்கு தீர்வுகளையும் சாதக பாதகங்களையும் தெரிந்தும் வைத்திருந்தான். அதை செயல்படுத்தும் போது தடுமாற்றம் உண்டாகுமோ என்ற கவலையாலேயே அவன் குழப்பத்தில் இருந்தான். நான் அவன் சொல்வதை பொறுமையாக காதுகொடுத்து கேட்டேன். தீர்வை அவனே கண்டு கொண்டான்’ என்றார்.
கடவுளிடம் நாம் மனதார வேண்டிக்கொண்டு நம் பணிகளில் கவனம் செலுத்தும்போது நம்பகமானவரிடம் நம் பிரச்சனைகளை சொல்லி விட்டோம் என்ற நிம்மதியினாலேயே தெளிவான மனநிலை உருவாகி நம் பிரச்சனைகளுக்கான தீர்வு தானாகவே நம் அறிவுக்குப் புலப்படும்.
ஆகவே, பிரச்சனைகளை நம்மிடம் சொல்வோருக்குத் தேவை அறிவுரையோ ஆறுதலோ அல்ல. அவர்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்க உதவும் நம் காதுகளே.
*காசா பணமா.... காது கொடுத்துத்தான் கேட்போமே...!
No comments:
Post a Comment