ஒருசில ஆலயப் பிரகாரங்களில் பெரும்பாலும் கருவறையினைச் சுற்றியுள்ள தரைத்தளக் கற்களில் இம்மாதிரியான வட்ட விளிம்புகள் தென்படும். இது என்ன என்று நேற்றைய பதிவில் வினவினோம்.
பரந்து பட்ட ஆலயங்களில் அகல் விளக்குகள் பந்தங்கள் ஆகியன ஆலய முகப்புகளிலும் கருவறைகளிலும் எரியவைக்கப்படும். அதிகாலை முதல் பிரகாரங்களில் சுற்றிவருதல் எளிதானது. மாலை மங்கி இருள் சூழ் நேரங்களில் கருவறையைச் சுற்றிவரும் நோக்கிலும், கருவறையைச் சுற்றிலும் பிரகாசத்தை ஏற்படுத்தும் முயற்சியே வள்ளாவிகள். பெரும்பாலும் வள்ளாவிகள் கருவறையின் இடப் புறம் ஆரம்பித்து கருவறைப் பின்சுவர் கடந்து ( லிங்கோத்பவர் அமைந்துள்ள பகுதி கடந்து) லாடம் போன்று தொடர்ந்து கருவறையின் வலப் பகுதியின் வெளிச்சுவரை ஒட்டிய பிரகாரக் கற்களில் செய்யப்பட்ட ஒரு பிரகாசம் தருவதற்கான ஏற்பாடு ஆகும்.
வட்ட விளிம்பின் உட்புறத்தில் சிறிதளவு நீர் விட்டு நடுவில் தீப விளக்கு வைத்தால் தீப ஒளியானது நீரில் பட்டுப் பிரகாசிக்கும். ஒரு தீபம் பல விளக்குகள் போலக் காட்சி தரும். இவ்வாறு பல வள்ளாவிகள் வைக்கும் பட்சத்தில் ஆலங்கார விளக்குகளை ஆலயப் பிரகாரங்களில் அமைத்தாற் போலப் பிரகாசிக்கும். வள்ளாவிக்குள் எண்ணெய் நிரப்பி நடுவில் விளக்கு அமைப்பர் என்பது தவறான கற்பனை. தண்ணீரே போதுமானது. சிக்கனமானது. தீப விளக்கு ஒன்று மட்டும் நடுவில் ( எண்ணெய் விளக்கு) போதுமானது.
படத்தில் பாருங்கள் இதை சில்வர் தட்டில் செய்துள்ளோம். மூலவர் சிரத்தின் பின்புறம் அமைக்கப்படுகின்ற பல பட்டைக் கண்ணாடி எவ்வாறு ஒரு தீபத்தை பல தீபங்களாக எதிரொலிக்கிறதோ அது போன்றே வள்ளாவியும் பிரகாசிக்கும். இதை இருளில் மட்டுமே உணர்வு பூர்வமாக இரசிக்க இயலும்.
சூரிய சந்திர கிரகணங்களை கணிக்க உதவியது என்றும் கிரகணங்களின் போது வானை நோக்காமல் வள்ளாவியை நோக்குவர் என்றும் சரவணக்குமார் எனும் நண்பர் தகவல் தந்தார்.
தீபங்களைக் தெப்பக் குளத்தில் விட்டு வணங்கும் மகளிர், படிகளில் நிலயோரங்களில் வைக்கும் தீபவிளக்குகள், கோவில் தூண்களில் ஏற்றி வைக்கும் பந்தங்கள், பிரகாரங்களில் ஒளிர்ந்த வள்ளாவிகள் ஆகியவற்றை மின்சாரம் வந்தபிறகு மெல்ல மெல்லத் தொலைத்துவிட்டோம் என்பதே உண்மை. இயற்கையோடு இணைந்து எளிய செலவில் பிரகாசமாய் வாழ்ந்த நம் முன்னோர்கள் ஏதோ சில வெளிச்சங்களாய் நம் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர்.
No comments:
Post a Comment