Friday, June 23, 2017

தலைஎழுத்தை_மாற்றும்_சிவன்_கோவில்.

ஒருவர் தலையில் எழுதியிருந்தால் மட்டுமே இத்தலத்தை தரிசிக்க முடியும் என்று நம்பப்படும் தலம் ; முருகன் வணங்கிய சிவன் திருத்தலம்..
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகனூர், திருப்பட்டூர் - திருச்சி.
போன்: +91 431 2909 599 (தொடர்பு நேரம்: காலை 9.30 - மாலை 6 மணி)
மூலவர் : பிரம்மபுரீஸ்வரர்
அம்மன்/தாயார் : பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி)
தல விருட்சம் : மகிழமரம்
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
ஆகமம்/பூஜை : காரண ஆகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்பிடவூர், திருப்படையூர்
ஊர் : சிறுகனூர், திருப்பட்டூர்
திருவிழா:
பங்குனி மாதத்தில் பத்துநாள் விழா நடக்கும்.
தல சிறப்பு:
🏽 பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது.
பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.
சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது.
காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.
சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார்.
இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும்.
இத்தலத்தில் 3001 அந்தனர்கள் வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ததால் அதில் உண்டான அதிர்வலைகள் அங்கிங்கெனாதபடி எங்குமாக பரவிக் கிடப்பதால் திருப்பிடவூர் எனப்பெயர்பெற்றது. திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில் திருப்பட்டூராக மாறியது.
இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கைலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை வணங்கி தொழுததால் ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.
கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் இத்தலத்தில் நிகழும்.
திருக்கயிலாய ஞான உலா எனும் நூல் இத்தலத்தில் அரங்கேறியது.
சிவ பெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.
சேர மன்னன் நாயானாரும், சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான இடம் இதுவாகும். மாசாத்தனார் ஓலை நறுக்குகளுடன் காட்சி தரும் விக்கிரகத் திருமேனியை கோவிலின் மூலமூர்த்தமாக இன்றைக்கும் இங்கு தரிசிக்கலாம்.
சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்திலாகும். அந்த பிரம்மன் பரிகாரம் தேடி கொண்டது திருப்பட்டூராகும்.
பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளம், சிவலிங்கச் சந்நிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாதாவாக பிரம்ம சம்பத்கவுரி கனிவு ததும்ப கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணம் இனிதே நடைபெறும்.
பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.
ஏழேழு ஜென்ம பாவங்களை நீக்கி பஞ்சபூதங்களாக உறைந்து இத்தலத்து ஈசன் நம்மை காக்கிறார்.
பிரம்மாவை வணங்கும் போதே குரு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
குரு பகவானுக்கு அதி தேவதை யான பிரம்மா தனி சந்நிதியுடன் திகழும் தலம் இதுவாகும்.
🏽 இத்தலத்திற்கு திருப்படையூர் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது.
சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடி கொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.
தேய்பிறை அஷ்டமி யில், ராகு கால வேளையில் காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்கு வதற்காகத்தான் இத்தலத்தில் கால பைரவரின் வலது காது வித்தியாசமாக உள்ளது.
🏽 இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் இருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.
🏽 இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வநாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து வணங்குபவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புதிய சக்தியுடன் சிவத்தொண்டு புரிவர்.
🏽 திருப்பட்டூர் திருத்தலம் ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்தது. எப்போதும் வேத கோஷங்கள் காற்றில் நிரம்பி புண்ணிய பூமியாக திகழ்ந்தது.
🏽 பூணூல் கல்யாணம் எனும் சடங்கை இத்தலத்தில் செய்வது விசேஷம் ஆகும்.
🏽 திருபட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.
🏽 ஒரேயரு முறை திருப்பட்டூர் தலத்தில் காலடி எடுத்து வையுங்கள். மனதின் அத்தனை துக்கங்களும் பறந்து, மனம், புத்தி, செயல், சிந்தனை யாவற்றிலும் ஓர் ஒழுங்கை, நேர்த்தியை, தெளிவை உணர்வீர்கள்.
திறக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை. பிரதி வியாழன் அன்று பிற்பகல் 1.00 மணி வரை நடை திறந்திருக்கும்..
பூஜைவிவரம் :
காலசந்தி - காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை,
உச்சிக்காலம் - பகல் 11.30 மணி முதல் 12.00 மணி வரை,
சாயரட்சை - மாலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை,
அர்த்தஜாமம் - இரவு 7.45 மணி முதல் 8.00 மணி வரை.
பொது தகவல்:
இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது.
இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பார்கள். நம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களுக்கும், நல்லது கெட்டதுகளுக்கும், லாப நஷ்டங்களுக்கும் நாமே காரணம்! நம் சிந்தனையிலும் செயலிலும் நல்லது இருப்பின், நாம் சந்திக்கிற எல்லா விஷயங்களும் நல்லனவாகவே இருக்கும். வாழ்க்கையில் ஒரேயோரு நல்ல விஷயம் நடந்துவிட்டால், பிறகு அடுத்தடுத்து நடக்கிற எல்லாக் காரியங்களும் நல்லனவாகவே அமையும்!
எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள். நம் எண்ணம் போல் நம் வாழ்க்கை அமைவதற்கு, வாழ்வில் நல்லதொரு திருப்பம் நிகழ்வதற்கு, பேரருள் புரியும் திருத்தலம் தான் திருப்பட்டூர்!
திருப்பட்டூருக்கு வந்தால் திருப்பம் ஏற்படும்’ என்றும், திருப்பதிக்கு நிகரான புகழுடன் பிராபல்யமாகும் திருத்தலம் என்றும் ஓலைச்சுவடிகள் தெரிவிக்கிற அற்புதத் தலத்துக்கு- ஸ்ரீகாசிவிஸ்வநாதரின் கோயிலுக்கு வந்து, ஸ்ரீவியாக்ரபாதர் உருவாக்கிய திருக்குளத்தின் தண்ணீரைச் சிரசில் தெளித்துக்கொண்டு, அந்த ஆலயத்தின் ஸ்ரீவிசாலாட்சி அம்பாளையும் ஸ்ரீகாசிவிஸ்வநாதரையும் தரிசித்துப் பூரிக்கின்றனர்.
அதையடுத்து, அங்கேயுள்ள ஸ்ரீவியாக்ரபாதரின் திருச்சமாதிக்கு அருகில் ஒரு பத்து நிமிடம் கண் மூடி அமர்ந்து, அந்த மகரிஷியின் நல்லதொரு அதிர்வை உணர்ந்து சிலிர்க்கின்றனர். பிறகு, ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று, அங்கே ஸ்ரீபிரம்மா வணங்கிய பல தலங்களின் மூர்த்தங்களையும் தனிச்சந்நிதியில் அருளும் ஸ்ரீபிரம்மாவையும் தரிசித்து மனமுருகப் பிரார்த் திக்கின்றனர். அங்கேயுள்ள பதஞ்சலி முனிவரின் திருச்சமாதிக்கு அருகிலும் கண் மூடி அமர்ந்து பிரார்த்தித்து, அங்கேயுள்ள அதிர்வை உணர்ந்து சிலிர்த்த வாசக அன்பர்கள் ஏராளம்!
🦋 அதற்கு முன்னதாக, சிவாச்சார்யர்களுக்கு அருளும் திருத்தலம் இது என்பதை முன்னரே பார்த்தோம் அல்லவா?! 'ஆகமச் செல்வர்களுக்கு அருளும் இறைவனே!’ என்று இந்தத் தலத்து இறைவனைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர் என்றும், ஆகமங்களைக் கட்டிக் காக்கிற, ஆலயங்களில் உரிய பூஜைகளைச் செய்கிற ஆசார்யர்கள் எனப்படும் அர்ச்சகர்களுக்கு அருளக்கூடிய ஒப்பற்ற தலம் என்றும் பார்த்தது நினைவிருக்கிறதுதானே?
இந்தத் தலத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. பிரம்மோபதேசம் என்றும் யக்ஞோப வீதம் என்றும் சொல்லப்படும் உபநயனம்... அதாவது பூணூல் கல்யாணம் எனும் சடங்கை, இந்தத் தலத்தில் செய்வது விசேஷம் என்கிறார்கள், ஆசார்யப் பெருமக்கள்!
ஆகமச் செல்வர்கள் எனப்படும் அர்ச்சகர் களும் மற்ற அந்தணப் பெருமக்களும் அவர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயதில் உபநயனம் செய்து வைப்பார்கள். அந்த உபநயனத்தை, பிரம்மோபதேச வைபவத்தை ஸ்ரீபிரம்மதேவன் குடிகொண்டிருக்கும் இந்தத் திருவிடத்தில் நடத்தினால், அந்தக் குழந்தை பின்னாளில் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவான் என்பது ஐதீகம்!
கிரகிக்கும் திறனும் முகத்தில் தேஜஸும் கொண்டு, கல்வியில் சிறந்து விளங்கி, ஞானத்துடன் நம் பையன் திகழ வேண்டும் என்பதுதானே ஒவ்வொரு பெற்றோரின் நினைப்பும் கவலையும்?! திருப்பட்டூருக்கு வந்து, ஸ்ரீவியாக்ரபாதர் உருவாக் கிய திருக்குளத்து நீரைத் தெளித்துக்கொண்டு, இரண்டு ஆலயங்களையும் வழிபட்டுப் பிரார்த்தித்தாலே... பித்ருக்களாகிய முன்னோரின் ஆசியுடன் குருவருளும் திருவருளும் கிடைக் கப் பெற்று, நம் சந்ததி சிறக்கும் என்பது ஆசார்யர்களின் வாக்கு! அதன்படி, மாணவர்கள் இங்கு வந்து வழிபட்டாலே சர்வ நலனும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள். ஆசார்ய புருஷர்களும் அந்தணர் களும் அவர்களின் மகன்களுக்கு இங்கு வந்து உபநயனம் செய்து வைத்தால்... இன்னும் பொலிவோடும் வலுவோடும் திகழ்வார்கள் என்பது உறுதி!
எத்தனையோ மகரிஷிகளின் பாதம் பட்ட பூமி இது. மன்னர்கள் பலரும் திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் அளித்து ஆராதித்த ஸ்தலம் இது! 'தில்லை மூவாயிரம் திருப்பிடவூர் மூவாயிரத்து ஒன்று’ என்கிற சொலவடைக்கு ஏற்ப, இங்கே ஒருகாலத்தில் வேத கோஷங்கள் எப்போதும் ஓங்கி ஒலித்து, அதிர்வலைகளைப் பரப்பிய இடம்... என்று பெருமைகள் பல கொண்ட திருப்பட்டூர்...
குரு பரிகார தலம்:
அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார்.
குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது.
மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.
குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு:
🦋 சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர்.
🦋 அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும்.
🦋இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.
ஞானஉலா அரங்கேற்றம்:
சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார்.
இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் "ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார்' என்ற பெயரில் அருளுகிறார்.
ஆடி சுவாதியில் "திருக்கயிலை ஞானஉலா' விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.
ஏழாம் தேதி பிறந்தவரா?
ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது.
சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம்.
பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும்.
ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர்.
இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர்.
ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.
பிரார்த்தனை:
திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம்.
மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
கோவில் அமைப்பு:
இவ்வாலயம் ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது.
நாம் உள்ளே நுழைந்ததும் கொடிமரம். அதனைத் தொடர்ந்து நந்தியெம்பெருமான் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சியளிக்கிறார். இம் மண்டபத்திற்கு பெயர் வேத மண்டபம்.
அதனைத் தொடர்ந்து உள் பிரகாரம் சென்றால் நாத மண்டபம். இம்மண்டபத்தில் சப்தஸ்வரத்தூண்கள் அமையப்பெற்றுள்ளது. இம்மண்டபத்தினைக் கடந்து உள்ளே சென்றால் துவார பாலகர்களை வணங்கி ஈசன் கருணைக் கடலான பிரம்மனுக்கு அருள் புரிந்த பிரம்மபுரீஸ்வரரைக் காணலாம்.
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்க்கு கிழக்கு நோக்கிய சன்னதி. சுயம்பு மூர்த்தி. அழகிய தோற்றம். மேலே தாரா பாத்திரம். நாகாபரணத்துடன் கூடிய சதுர ஆவுடையார் கூடிய திருமேனி. ஈசன் ஸ்ரீ பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி அருள்புரிந்ததால் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.
நாத மண்டபத்தின் தென்புறம் சென்றால் மிகப் பெரிய கிழக்கு நோக்கிய ஸ்ரீ பிரம்மா சன்னதி. பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து. ஆனால் பிரம்மன் இல்லாத சிவ ஆலயம் இல்லை என்பது தான் உண்மை. எல்லா சிவ ஆலயத் திலும், ஈசனின் இடபுறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்டமூர்த்தியாக இருந்து வருகிறார்.
ஆனால் திருபட்டூரில் மட்டுமே மிகப் பிரமாண்ட மான அதுவும் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தியுடன் தனி சன்னதியுடன் காட்சியளிக்கிறார்.
பதஞ்சலி முனிவர் பிரம்மன் சன்னதிக்கு தென்புறம் உள்ளார். இவர் யோக சூத்திரம் அருளிய பதஞ்சலியாவார். இவர் நித்ய கைங்கர்யாள் என்று அழைக்கப்படுபவர். தினமும் இவர் இத்தலத்து ஈசனை வணங்கி இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு யோகமாகிய ஞானத்தை வழங்கி மன நிம்மதி அளித்து அருள்புரிந்து வருகிறார்.
சப்த மாதாக்கள் பதஞ்சலி முனிவர் சன்னதியின் அருகில் உள்ளது. தட்சிணா மூர்த்தி பிரம்மன் சன்னதிக்கு அருகில் வடபுறம் உள்ளது.
மகாவிஷ்ணு ஈசனின் நேர் மேற்கில் கோஷ்டத்தில் உள்ளது.
முருகன் வள்ளி, தெய்வானை ஸ்ரீ பிரம்மன் சன்னதியின் பின்புறம் சற்று தள்ளி உள்ளது. முருகன் வள்ளி தெய்வானையுடன் கூடிய தனித்துவமான சன்னதி. முருகன் இடபாக மயிலில் வாகன மூர்த்தியாக உள்ளார்.
சுதை சிற்பத்துடன் ஒரு கஜலட்சுமியும், கல்சிலா ரூபமாக ஒன்றும் உள்ளது. விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு அருகில் உள்ளது. இந்த சன்னதி கொடிமரத்தின் வடபுறம் ஸ்ரீ பிரம்மசம்பத் கௌரி தனிக்கோவிலாக அமைந்துள்ளது. ஸ்ரீ பிரம்ம தேவன் வழிபட்ட அம்பிகை, பிரம்மனுடைய சம்பத்தாகிய தேஜசை அம்பிகை திரும்ப வழங்கியதால் பிரம்மசம்பத் கௌரி என்று வழங்கப்படுகிறது.
வித்தியாசமான அமைப்பு:
குருர் பிரஹ்மா;
குருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர;
குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ''
என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது.
கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.
முருகன் வணங்கிய சிவன்:
🦋 முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் "திருப்படையூர்' எனப்பட்ட தலம் "திருப்பட்டூர்' என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்.
எல்லாமே மஞ்சள் நிறம்:
பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர்.
பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.
பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார்.
குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம்.
யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம்.
அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது.
உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.
நரசிம்மர் மண்டபம்:
நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன.
🦋 நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.
பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது.
எலும்பு நோய்க்கு பூஜை:
பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும்.
வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் "பதஞ்சலி பிடவூர்'எனக் கூறப்பட்டுள்ளது.
மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.
பதஞ்சலியின் ஜீவசமாதி:
ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார்.
வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார். அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில்.
🦋 பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது.
🦋 தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.
🦋 பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது.
🦋 ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.
தல வரலாறு:
பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார்.
அதனால் ஈசனை மதிக்காமல் இருந்தார். ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழித்து அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், "ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,'' எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார்.
படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.
பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார்.
மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்தார்..
பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனின் படைப்பாற்றலையும், திரும்ப வழங்கி கூடுதலாக ஒரு வரம் வழங்கினார். பிரம்மனே உன்னுடைய வழிபாட்டில் மகிழ்ந்த யாம் எல்லோருடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் உன்னுடைய தலையெழுத்தை மாற்றியது போல் இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு மீண்டும் ஒரு முறை அவர்களுடைய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக என்று வரமளித்தார். “விதியிருப்பின் விதி கூட்டி அருள்க” என்றும் வரம் வழங்கினார்.
இந்த வரத்திற்கு இரு பொருள் உண்டு
”விதியிருப்பின்” அதாவது இத்தலத்தில் வந்து யாருக்கெல்லாம் தலைவிதி மங்களகரமாக மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ அவர்களே உன்னை வந்து பார்த்து மாற்றிக் கொள்ள இயலும்.
“விதியிருப்பின் விதி கூட்டி அருள்க” யாருடைய தலையெழுத்தை யெல்லாம் விதி கூட்டி மங்களகரமாக அருள முடியுமோ அவர் களுக்கெல்லாம் அருள்க என்பதாகும்.
பிரம்மனுக்கு வரம் அளித்த இத்தலத்து இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார். பிரம்மனுக்கு தேஜஸை வழங்கியதால், அன்னை பிரம்ம சம்பத் கௌரி என அழைக்கபடலானாள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
🤹🏻 பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.
🤹🏼 சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது.
இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சந்நிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
🤹 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்கிறார் இங்கு வரும் பக்தர் ஒருவர்.
🤹வெள்ளைத் தாமரை சார்த்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் நிச்சயம் சேரும்.
🤹ஆடி சுவாதி நட்சத்திர நாளில், திருப்பட்டூர் வந்து மூன்று கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அப்படி தரிசித்த பலனை, அடுத்தடுத்த நாளிலேயே உணர்வீர்கள்.
இருப்பிடம்:
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் செல்லும் பேருந்துகளில் சென்று 30 கி.மீ., தொலைவிலுள்ள சிறுகனூரில் இறங்கி, அங்கிருந்து மேற்கே பிரியும் சாலையில் 4 கி.மீ.,தூரம் சென்றால் திருப்பட்டூரை அடையலாம்சிறுகனூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...