ஆமாய்யா, சென்னையில் மரத்தடி பிள்ளையாருக்கும் பல் டாக்டருக்கும் குறைச்சலே இல்லை. என்ன இப்போ அதுக்கு?
இந்த அரசரடி விநாயகர் ஒரு மேடையில் சிதிலமடைந்த வேர்கள் வளர்ந்த கூரையின் கீழ் இருந்தார். அதன் சாவி ஏதோவொரு சந்தர்ப்பத்தில் திரு.முருகனின் கைக்கு வந்தது. அது முதல் பாலும் இளநீரும் எண்ணெய் காப்பும் கண்டுவந்தார். விளக்கின் ஒளி நிறைந்தது. நெய்வேத்தியம் ஒரு கை அவலும் இரண்டு பூவன்பழமும். சங்கடஹர சதுர்த்தி பூஜை வந்தது.
மேடையும் கூரையும் வாய்ப்பிளக்கத் தொடங்கியது. திரு.முருகன் கலங்கினார். எப்படியாவது கோயில் கட்டவேண்டுமென்று விரும்பினார். வேண்டினார். பிள்ளையாரும் அதையே விரும்பினார் போலும். ஒரு அன்பர் பெருந்தொகை செலவிட முன்வந்தார். நன்கொடைகள் வந்தன. சிறு கோயில் எழுந்து கும்பாபிஷேகம் நடந்தது. மண்டலாபிஷேகம் நடந்தது.
அமாவாசையன்று கிழங்கு போல் இரு வெள்ளி விளக்குகள் மற்றும் ஒரு கிரீடத்தை திரு முருகன் எடுத்துக் கொண்டுவந்து, பாருங்க சார் என்று காட்டினார். பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லவில்லை. எல்லாம் ஒங்களாலே என்று மட்டும் சொன்னேன்.
யாரோ வெள்ளி விளக்கில் நெய் தீபம்தான் போடவேண்டும் என்று சொன்னதற்காக கையில் இருந்த காசுக்கு ஒரு நெய் பாட்டில் வாங்கிவந்து ஏற்றினார். வந்து பாருங்க என்று சொல்லி மகிழ்ந்தார்.
விளக்கும் கிரீடமும் கொடுத்த அன்பர் இன்னொரு சந்தர்ப்பத்தில் அரசடி விநாயகருக்கு முழு வெள்ளி கவசமும் செய்துதருவதாக சொல்லிவிட்டுப் போனதாகச் சொன்னார் திரு.முருகன்.
பெரிய பெரிய கோயில்களுக்கு பெரிய மனிதர்கள் கைங்கர்யம் செய்வது வாடிக்கைதான். ஆச்சரியமும் இல்லை. இந்த அரசமரத்தடி பிள்ளையாருக்கு செய்கிறார்கள் என்றால் அவரது சக்தியை விளக்க முதற்சிப்பது சிறுபிள்ளைத்தனத்தின் உச்சம்.
எனக்கு மந்திரம் தந்திரமெல்லாம் தெரியாது சார். விநாயகானு சொல்லி வெளக்கு திரி போடுவேன். குருவேனு சொல்லுவேன். தேவி பகவதினு சொல்லுவேன். யாராச்சும் வேண்டுதல் வெச்சா, ஒன்ன நம்பி வந்திருக்காங்க நல்லத செய்யினு வேண்டிக்குவேன். தேங்கா ஒடைப்பேன் என்கிறார், திரு.முருகன்.
திரு.முருகனை எல்லோரும் கிருஷ்ணன் நாயரென்று அறிவார்கள்.
கிருஷ்ணன் என்கிற முருகன் தன் வயிற்றுப்பாட்டுக்கு சைக்கிளில் டீ வியாபாரம் செய்கிறார்.
#பெய்யென பெய்யும் மழை.
No comments:
Post a Comment