தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில்..!!
🌟 தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 15வது சிவத்தலமாக விளங்குகிறது.
🌟 திட்டை எனும் சொல் மேடு எனவும் பொருள்படும். புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பூலோகமே நீரில் மூழ்கியிருந்தது. ஆனால், திட்டை என்னும் இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்ததால் திட்டை எனப் பெயர் பெற்றது.
🌟 மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சதுர ஆவுடையார் மீது மூலவர் நான்கு பட்டைகளுடன் காணப்படுகிறார். ராமரின் குலகுரு வசிஷ்டர், இங்கு தவம் இருந்து பூஜித்ததால் இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
தல அமைப்பு :
🌟 இந்த தலத்தில் பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. பசு தீர்த்தத்தில் ஒரு துளி நீரானது, நம்முடைய சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது.
🌟 இங்குள்ள கொடிமரம் கருங்கல்லால் ஆனது. எல்லா சிவாலயங்களிலும் ஞான வடிவான தட்சிணாமூர்த்தியாக குரு கோவில் கொண்டிருப்பார். ஆனால் தென்குடித் திட்டையில் இவர் ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சந்நிதிக்கு முன்னால் செப்பாலான நந்தி பலிபீடம் உள்ளன.
🌟 அம்மன் சந்நிதிக்கு முன்பாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் ராசிக்கு கீழே நின்று பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பிரமிக்கும் அதிசயம் :
🌟 இக்கோவிலின் இறைவன் மீது 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீர் விழுகிறது.
🌟 இறைவன் வசிஷ்டேஸ்வரர் சந்நிதியில் உள்ள உட்புற கோபுரத்தில் சந்திர காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
🌟 இதனால் 24 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த சந்திர காந்தக் கல்லால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கல்லிலிருந்து ஒரு சொட்டு நீராய் இறைவன் வசிஷ்டேஸ்வரர் மீது விழுகிறதாக கூறப்படுகின்றது.
🌟 சிவபெருமான், சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கி தன்னுடைய தலையில் சந்திரனை வைத்துக்கொண்டார். அதற்கு நன்றிக்கூறும் விதமாக சந்திரன் இவ்வாறு 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை இந்த இறைவன் மீது விழுமாறு செய்கிறார் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment