மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் போகும் வழியில் உள்ள பெருஞ்சேரி என்ற கிராமத்தில் பெளத்தம் தொடர்பான பல சுவையான தகவல்கள் கிடைத்தன.
நம் சமூக அமைப்பு அனைத்து நிகழ்வுகளையும் பண்பாட்டின் கூறுகளாக மாற்றி நினைவில் வைத்துள்ளது.
பெருஞ்சேரியில் உள்ள ரிஷிக்கோயிலில் மாசி மாதத்தில் நடக்கும் பண்பாட்டு நிகழ்வுகளை நாம் கவனித்தால் நமக்கு சில புரிதல்கள் கிடைக்கும் .
முதல் நிகழ்வாக,
வழுவூரில் இருக்கும் சிவன் கோவிலிலிருந்து சாமி புறப்பட்டு பெருஞ்சேரி சிவன் கோயிலை நோக்கி வருகையின் இடையே பெருஞ்சேரியில் உள்ள ரிஷி கோயிலான புத்தர் கோயிலின் முன்பு பிச்சையெடுக்கும் படி நடனமாடுகிறார்கள். அந்நிகழ்வுக்குப் பின்பு பெருஞ்சேரி சிவன் கோயிலில் திருவிழா தொடங்குகின்றது.
இரண்டாம் நிகழ்வாக,
அவ்விழாவினை அடுத்து வழுவூரில் இருந்து வந்த சிவன் இங்கு யானைவடிவில் இருக்கும் அரக்கனை அழித்துவிட்டு செல்லும்போது ரிஷிக்கோவிலின் முன்பு பொம்மை யானை தலைகளுடன் சேர்த்து பொம்மை மனித தலைகளையும் வைத்து உடைக்கிறார்கள்.
மூன்றாம் நிகழ்வாக,
வழுவூருக்கு (வீரட்டேஸ்வரர்) சென்ற பிறகு சிவன் கோயிலில் மூன்று நாட்கள் திருவிழா நடக்கின்றது. அதில் இரண்டாம் நாள் நிகழ்வுக்கு ஆயில்யம் என்று பெயர்.
காலையில் பிட்சாடனரும் மோகினியும் அருகில் உள்ள பெருஞ்சேரிக்குச் செல்கிறார்கள். அங்குள்ள ரிஷித்தோப்பில் அவர்களுக்கு அபிஷேகம் நடைபெற்ற பின் மாலை கோயில் திரும்பி விடுகிறார்கள்.
அன்றிரவு பிட்சாடனரும் மோகினியும் வசந்த மண்டபத்தில் எதிரெதிரே நிற்க தீபாராதனை செய்யப்படுகிறது. அப்போது தட்டியின் மறைவில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஐயப்பன் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.
இந்த நிகழ்வினை அடுத்து பின்னிரவில் சிவனை அழிக்க பேய்கள், பூதங்கள் எல்லாம் வருவதாகவும், இறுதியாக யானை வடிவினாலான உருவம் ஒன்று வந்து சிவனை விழுங்குவதாகவும் சொல்லப்படுகிறது.
அப்போது கோயிலின் அனைத்து விளக்குகளையும் அணைத்து விடுகிறார்கள். ஏனெனில், சிவன் அழிந்ததால் உலகம் இருண்டு விட்டதாகக் கூறுகிறார்கள்.
சிவனை விழுங்கிய யானைக்கு உடலில் எரிச்சல் ஏற்பட அருகில் உள்ள குளத்தில் விழுந்து எழுந்து வருகையில், யானையின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு சிவன் வெளியே வருகிறாரென்று, அப்போது கோயிலின் அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டு பூஜை நடைபெறுகின்றது.
இதனால் இங்குள்ள சிவனுக்கு யானைத்தோலுரித்த சிவன் என்று பெயர் . யானை பிற சமய குறியீடாகக் கொண்டால் இந்த மோதலை சமய மோதலாக நாம் கருதலாம் மேலும் சடங்குகளில் மற்றும் நம்பிக்கைகளில் வரலாறுகள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக இருக்கும் . இதனை பெளத்த ,சைவ மோதலாக கருத இடமுண்டு இது குறித்து மேலும் நாம் ஆய்வும் செய்யப்படவேண்டும்.
No comments:
Post a Comment