உணவில் கிடக்கும் எந்த அயல்பொருளும் உணவை மாசுபடுத்தும். உணவில் முடி கிடப்பது உடல் சார்ந்த மற்றும் நுண்ணுயிரியல் சார்ந்த மாசுபாட்டை ஏற்படுத்தும்.
உறவினர் வீட்டில் தலைவாழை இலையில் விருந்து. அறுசுவைப் பதார்த்தங்களையும் ஒரு பிடி பிடித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சாப்பாட்டில் கையை வைத்து, ஒரு வாய் அள்ளி வைக்கப் போகும்போது ஒரு நீநீநீநீ.....ள முடி. `இதுவே வீடா இருந்தா இந்நேரம் பாத்திரம் பண்டமெல்லாம் பறந்திருக்கும்' என்று நினைக்கும்போதே, பக்கத்திலிருந்து ஒரு பாட்டி, ``சாப்பாட்ல தலைமுடி கிடந்தா உறவு நீடிக்கும். தூக்கிப் போட்டுட்டு சாப்பிடு!" என்றார்.
``சாப்பாட்டில் கிடக்கும் தலைமுடி உறவை நீட்டிக்கிறதோ இல்லையோ, நமது உடல்நலத்தை நீட்டிக்காது"என்கின்றனர் மருத்துவர்கள்.
சாதாரணமாக ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் வரை ஒருவரிடமிருந்து உதிர்கிறது. மனித முடி `கெரட்டின்' எனும் புரதத்தால் ஆனது. இந்தப் புரதம் தோல், நகங்களின் மேற்புறத்திலும் காணப்படும். கெரட்டினால் எந்தப் பிரச்னையும் இல்லை என்றாலும் முடி, உணவை மாசுபடுத்தும்.
சிறிய கற்கள், ஆணி போன்ற உலோகத் துண்டுகள், பூச்சிகள் அல்லது பூச்சிகளின் பாகங்கள் போன்றவை உணவில் அதிகம் கிடக்கும் பொருள்கள் என்றாலும், உலக அளவில் உணவில் அதிக அளவில் கலந்திருக்கும் பொருள் முடிதான் என்கின்றன ஆய்வுகள். சாப்பிடக் கூடாதவை மற்றும் உணவில் சேர்க்கப்படும் பொருள்கள்தவிர வேறு எந்தப் பொருள் உணவில் கிடந்தாலும் அது ஃபாரின் பாடி (foregin body) என்று கூறப்படுகிறது. அந்தச் சூழலுக்கு ஒவ்வாத அயல்பொருள் என்பது இதன் பொருள்.
உணவில் கிடக்கும் எந்த அயல்பொருளும் உணவை மாசுபடுத்தும். உணவில் முடி கிடப்பது உடல் சார்ந்த மற்றும் நுண்ணுயிரியல் சார்ந்த மாசுபாட்டை ஏற்படுத்தும். உணவில் நுண்ணுயிரிகள் உருவாவதற்கும் இது வழிவகுக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், உணவு மேஜையில் மாதக்கணக்காக உட்கார்ந்திருக்கும் ஊறுகாய் பாட்டில் இவற்றில் பலநாள்களாக முடி கிடந்தால், அது நோய்க்கிருமிகளின் உற்பத்திக்கு வழிவகுக்கும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)எச்சரித்துள்ளது.
வெறும் முடிக்கே இந்த நிலை என்றால், அந்த முடியில் தேய்த்திருக்கும் எண்ணெய், வியர்வை, முடிக்கான சிகிச்சை பெறுவோர் என்றால் அவர்கள் தேய்த்திருக்கும் மருந்துகள், ஷாம்பு மற்றும் ஹேர் டையில் உள்ள ரசாயனங்கள் இவை அனைத்தும் சேர்ந்து உணவில் ஏற்படுத்தும் விளைவுகளைக் கற்பனை செய்து பாருங்கள். மலைப்பாக இருக்கிறது அல்லவா. அது உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தி, அருவருப்பு உணர்வையும் கொடுக்கும்.
இது தொடர்பாக அவசர சிகிச்சை நிபுணர் கே.ஜி.கதிரவனிடம் கூறுவது:
``சாப்பிடும்போது சாதாரண முடி வயிற்றுக்குள் சென்றுவிட்டால், அது அயல்பொருள் என்பதால், இயற்கையாகவே நமது உடல் அதனை வெளியேற்றிவிடும். அந்த முடியில் ஏதேனும் தொற்று இருந்தால் மட்டுமே, உடலில் நச்சுச் சேரும். அது உறுத்தல் உணர்வையும் ஏற்படுத்தும்.
உடலில் சேரும் நச்சு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். அதில் முடி வெளியே வந்துவிடும். வயிற்றுப்போக்கை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. அதனால் முடி வெளியேற முடியாமல் போகும். வயிற்றுப்போக்கு நிற்கவில்லை என்றால், உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். எனவே, அதிக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். பெரும்பாலும் உடலுக்குள் செல்லும் ஓரிரு முடிகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது. எனவே, வாய்க்குள் கையைவிட்டு வாந்தி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடத் தேவையில்லை" என்றார்.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் வரையறையின்படி, உணவுப்பொருள்கள், பாட்டில், கேன்களில் உள்ள குடிநீர், குளிர்பானங்கள், ஊட்டச்சத்து உணவுகள் இவை அனைத்தும் உணவு என்ற வரையறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பொருள்கள் எதிலும் முடி கிடக்கக் கூடாது என்பது விதி.
இதனால்தான் உணவகங்கள், விடுதிகளில் சமையல் செய்பவர்கள், உணவு விநியோகிப்பவர்கள் தலைக்கு வலை போன்ற தொப்பியை அணிகின்றனர். மீசை, தாடிக்கும் இப்போது தொப்பி வந்துவிட்டது. உணவகங்களுக்குச் சரி, தொப்பி அணிந்து கொண்டு சமையல் செய்வது வீட்டில் சாத்தியமா. ஒருவேளை தலைக்குத் தொப்பி அணிந்தாலும், இமை, புருவத்திலிருந்து விழும் முடியைத் தடுக்க முடியுமா, முடியாது என்பதுதான் நிதர்சனம்!
குறைந்தபட்சம் டிவி, கைபேசியைப் பார்த்துக்கொண்டே சாப்பிடாமல், சாப்பாட்டை மட்டும் பார்த்துச் சாப்பிடுவதால் முடியைக் கண்டுபிடித்து அகற்ற முடியும்.
No comments:
Post a Comment