Wednesday, April 3, 2019

திக்கு தெரியாத காட்டில்... தினகரனை நம்பிய வேட்பாளர்கள் தவிப்பு.

அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற முனைப்புடன், தேர்தலில் களம் இறங்கி உள்ள தினகரன், மூன்று லோக்சபா; ஆறு சட்டசபை தொகுதிகளில் வெற்றியை இலக்காகக் கொண்டுள்ளார். அவரை நம்பி களம் இறங்கிய வேட்பாளர்கள், அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்களின் பிரசாரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், திக்கு தெரியாத காட்டில் விடப்பட்டது போல் தவித்து வருகின்றனர்.
தினகரன்,வேட்பாளர்கள்

அ.தி.மு.க.,வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன், அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்க்க முயன்றார். இந்த முயற்சியை முறியடிக்கும் விதமாக, அவருக்கு ஆதரவு அளித்த, 18 எம்.எல்.ஏ.,க்களின் பதவியை, சபாநாயகர் பறித்தார். அதன்பின், அவரை நம்பி யாரும் செல்லாததால், அவரது ஆட்சி கவிழ்ப்பு முயற்சி, பிசுபிசுத்தது.
தகர்ந்தது:

எனினும், 'அ.தி.மு.க.,வை கைப்பற்றி விடுவேன்' என, அவர் கூறியதை நம்பி, அவர் பின்னே, அ.தி.மு.க., அதிருப்தியாளர்கள் சென்றனர். ஆனால், கட்சி அவரை விட்டு சென்றது. பன்னீர்செல்வம் - இ.பி.எஸ்., அணிக்கே, கட்சி, இரட்டை இலை சின்னம் என்பது முடிவானது. அரசியலில் இருக்க வேண்டும் என்பதற்காக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை, தினகரன் துவக்கினார்.

ஆர்.கே. நகர் சட்டசபை இடைத் தேர்தலில், பல சூட்சுமங்களை பயன்படுத்தி, அவர் வெற்றி பெற்றார். அதேபோல, பதவி இழந்த, நம்மையும் வெற்றி பெற வைத்து விடுவார் என்ற நம்பிக்கையில், எம்.எல்.ஏ.,க்கள், அவருடனே இருந்தனர். 'தேர்தலில், பெரும் வெற்றி பெறுவோம்; ஆட்சி பறிபோய் விடும். மீண்டும், அ.தி.மு.க., நம் கைக்கு வந்துவிடும்' என, அவர் கூறியதை, அவருடன் இருந்தவர்கள் நம்பினர். ஆனால், லோக்சபா தேர்தலில், யாரும் எதிர்பாராத வகையில், அ.தி.மு.க., பலமான கூட்டணி அமைத்ததால், தினகரன் தரப்பினரின் நம்பிக்கை தகர்ந்தது.

அதிர்ச்சி:

தேர்தல் களத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிக்கு இடையே, நேரடி போட்டி என்ற நிலை உருவானது. எனவே, தேர்தலில் போட்டியிட விரும்பியவர்களும், பின்வாங்கினர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தினகரன், 'தேர்தல் செலவுகளை பார்த்துக் கொள்கிறேன்' எனக் கூறி, முக்கிய நிர்வாகிகளை களம் இறக்கினார். தினகரனின் வற்புறுத்தல் காரணமாக, களம் இறங்கிய, அ.ம.மு.க., வேட்பாளர்கள், தற்போது வழி தவறிய குழந்தைகள் போல், பரிதவித்து வருகின்றனர். 

அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களின் பிரசாரத்திற்கு, அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. அத்துடன், குக்கருக்கு பதில், தேர்தல் ஆணையம் வழங்கிய, 'பரிசுப் பெட்டி' சின்னத்தை, மக்களிடம் கொண்டு செல்வதும் சிரமமாக உள்ளது. சமூக வலைதளங்களில், சின்னம் பரவினாலும், கிராமப்புற மக்களை சென்றடையவில்லை. குறிப்பாக, பெண்களுக்கு, சின்னம் குறித்த விழிப்புணர்வு இல்லை. அ.ம.மு.க., சார்பில், தினகரன் மட்டும், ஒவ்வொரு மாவட்டமாக வலம் வருகிறார். மற்றவர்கள், இருக்கும் இடமே தெரியவில்லை. தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், வெற்றி என்பது எட்டாக்கனி என்பது, அவர்களுக்கு தெளிவாகி விட்டது.

அனைத்து தொகுதிகளிலும், வெற்றி பெற நினைத்தால், எதுவும் நடக்காது என்பதை உணர்ந்துள்ள தினகரன், மூன்று லோக்சபா தொகுதிகள்; ஆறு சட்டசபை தொகுதிகளில், வெற்றி பெற்றாக வேண்டும் என, தன் இலக்கை சுருக்கியுள்ளார். மற்ற தொகுதிகளில், குறைந்தது, 1 லட்சம் ஓட்டுகளைப் பெற வேண்டும் என, கட்சியினரிடம் கூறி உள்ளார். 
எந்தெந்த தொகுதிகள்?

தங்களின் சொந்த மாவட்டமான தஞ்சாவூர், பன்னீர்செல்வம் மகன் போட்டியிடும் தேனி, மதுரை ஆகிய மூன்று தொகுதிகளில், எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும். அதேபோல, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், மானாமதுரை, தஞ்சாவூர், விளாத்திகுளம், பரமக்குடி தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதால், அந்த தொகுதிகளில், அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
திண்டாட்டம் தான்:

அ.ம.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் வசதியானவர்கள், ஓரளவு தங்களால் முடிந்த அளவு செலவு செய்து வருகின்றனர். மற்றவர்கள், 'கடமைக்கு' பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 'கடைசி நேரத்தில், தினகரன் கவனிப்பார். அதில் கரையேறி விடலாம்' என்ற நம்பிக்கை மட்டும், அவர்களிடம் உள்ளது. தினகரன் கை கொடுப்பாரா, கைவிடுவாரா என்பது, இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

இது குறித்து, வட மாவட்டத்தில் போட்டியிடும், அ.ம.மு.க., வேட்பாளர் ஒருவர் கூறியதாவது: தினகரனை நம்பி, ஏற்கனவே, 2 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளேன். தேர்தல் பிரசாரத்திற்கு வரும் கட்சியினர், வாகனத்தில் ஏறுவதற்கு முன், பணம் என்கின்றனர். கடன் வாங்கி செலவழிக்கிறேன். கட்சி தலைமை பணம் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சி தலைமை கைவிரித்தால், என்பாடு திண்டாட்டம் தான். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...