திமுக – வின் பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நேற்று இரவு முதல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். இன்று காலை 8 மணி வரை அவரது இல்லத்தில் தொடர்ந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான வீடு, சிபிஎஸ்இ பள்ளி,கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழகத்தில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக வின் முக்கிய புள்ளியான துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், துரைமுருகன் வீட்டில் திமுக தொண்டர்கள் மற்று அவரின் வழக்கறிஞர்கள் கூடியதால் அவர்களுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் இதுக் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
ஸ்டாலின் கூறியிருப்பதாவது, “தேர்தல் காலத்தில் வருமான வரித்துறை ‘காபந்து பிரதமரின்’ தலைமையில் இயங்க தடை விதிக்க வேண்டும்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நேரடி பார்வையில் செயல்படுவதற்கான வழிமுறைகளை கண்டறிய தேர்தல் ஆணையம் முயற்சிக்க வேண்டும்.
வருமான வரி, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவைக்கும் தேர்தல் நடத்தைவிதி பொருந்தும் என ஆணையம் அறிவிக்க வேண்டும்.ரெய்டு, பயமுறுத்தலுக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என மோடிக்கும், பழனிச்சாமிக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். மிசாவையே கண்டு மிரளாதவர்கள் நாங்கள்,சேடிஸ்ட் சேட்டையை பார்த்து திமுக ஒருக்காலும் ஓய்ந்துவிடாது. இது பனங்காட்டு நரி, இந்த வெற்று சலசலப்புக்கெல்லாம் நடுங்கி ஓடிவிடாது.
ஹிட்லர்” பாணி அரசியலை, 130 கோடி மக்களைக் கொண்ட வலிமைமிக்க இந்திய ஜனநாயகம் ஒருபோதும் ஏற்காது,அதை மன்னிக்காது. அதிமுக கூட்டணி படுதோல்வியடையும் என்ற சர்வே முடிவுகளால் மோடி எரிச்சலும், ஏமாற்றமும் அடைந்துள்ளார். ஒரு நாட்டின் பிரதமர் ஆணவத்தின் சின்னமாகவும், அகங்காரத்தின் உருவமாகவும்,சர்வாதிகாரத்தின் அடையாளமாகவும் மாறி ஊழிக் கூத்தாடுவது, உலகப் புகழ் பெற்ற இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைகுனிவு.
விரைவில் பிரதமர் பதவியிலிருந்து ஜனநாயக தேர்தலில் வெளியேற்றப்படும் பிரதமர், மூழ்கும் கப்பலில் இருந்து எப்படியாவது தப்பித்து விட முடியுமா என்ற நினைப்பில் கடைசி நிமிட வருமான வரித்துறை ரெய்டுகளை தி.மு.க.வின் மீதும், நாடுமுழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் மீதும் நடத்துகிறார்.
பாவம் புதிதாகப் பிரதமர் பதவியைப் பார்த்து அதில் பித்தம் கொண்டிருக்கும் திரு நரேந்திர மோடிக்குப் புரியாது. அடிக்க அடிக்கத்தான் இந்த திராவிடப் பேரியக்கம் என்ற பந்து வீறுகொண்டு எழும் என்ற உண்மை கூடப் புரியாமல், ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக ஐந்து வருடம் கழித்து விட்டாரே என்று திரு.நரேந்திரமோடியைப் பார்க்கப பரிதாபமாகத்தான் இருக்கிறது. திமுகவின் மடியில் கனமில்லை; எனவே அதன் பயணத்தில் எப்போதும் பயம் என்பது ஏற்பட்டதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment