Wednesday, October 2, 2019

லண்டன் வங்கியில் இருக்கும் ரூ.300 கோடி இந்தியாவுக்கே சொந்தம்- இங்கிலாந்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு.

லண்டன் வங்கியில் இருக்கும் ரூ.300 கோடி இந்தியாவுக்கே சொந்தம்- இங்கிலாந்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
லண்டன் வங்கியில் இருக்கும் ரூ.300 கோடி இந்தியாவுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கிய இங்கிலாந்து கோர்ட்டு


















பிரிட்டிஷ் இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக விளங்கிய ஐதராபாத், 1948-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது. அப்போது ஐதராபாத்தை ஆண்டு வந்த நிஜாம் உஸ்மான் அலி கான், 10 லட்சத்து 7 ஆயிரத்து 940 பவுண்டு பணத்தை (தற்போதைய மதிப்பு சுமார் ரூ.8.70 கோடி) பாகிஸ்தானுக்கான அப்போதைய இங்கிலாந்து தூதர் ஹபிப் இப்ராகிம் ரகிம்தூலாவுக்கு கைமாறினார்.

இந்த பணத்தை அவர் லண்டனில் உள்ள நாட்வெஸ்ட் வங்கியில் போட்டு வைத்திருந்தார். 70 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இந்த பணம் தற்போது 35 மில்லியன் பவுண்டாக (சுமார் ரூ.300 கோடி) உயர்ந்துள்ளது.

இந்த நிதிக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் உரிமை கோரி வரும் நிலையில், லண்டனில் உள்ள கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் ஐதராபாத் நிஜாமின் வாரிசுகளான முகரம் ஜா (8-வது நிஜாம்), அவரது சகோதரர் முபகம் ஜா ஆகியோரும் இந்தியாவுடன் இணைந்து சட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

சுமார் 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் லண்டனில் உள்ள நீதிக்கான ராயல் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் இந்தியாவுக்கு சாதகமாக நீதிபதி மார்கஸ் ஸ்மித் தீர்ப்பு வழங்கினார்.

ஐதராபாத் நிஜாம்

அதாவது, ‘7-வது நிஜாமுக்கு (உஸ்மான் அலி கான்) உரிமையுள்ள இந்த நிதி, அவரது வாரிசுகளான இளவரசர்கள் மற்றும் இந்தியாவுக்கு சொந்தமானதாகும். இந்த வழக்கில் பாகிஸ்தான் வைத்த வாதங்கள் தவறானவை’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

முன்னதாக இந்த நிதிக்கு உரிமை கோரிய பாகிஸ்தான், அதற்கு ஆதரவாக 2 அம்சங்களை எடுத்து வைத்தது. அதாவது பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவதற்காக இந்த நிதி அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டது எனவும், இந்த பணத்தை இந்தியாவுக்கு வெளியே வைத்திருக்கும் நோக்கில் வழங்கப்பட்டது எனவும் பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்த வாதங்களை நீதிபதி நிராகரித்தார்.

இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என நிஜாமின் வாரிசுகள் சார்பில் ஆஜராகி வந்த வக்கீல் பால் ஹெவிட் தெரிவித்தார். இந்த பணம் கைமாறப்பட்ட போது தனது கட்சிக்காரர் அதாவது 8-வது நிஜாம் சிறுவனாக இருந்ததாகவும், தற்போது 80 வயதை கடந்திருக்கும் அவரின் வாழ்நாளிலேயே தீர்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம் இந்த தீர்ப்பால் பாகிஸ்தானுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தீர்ப்பின் முழு விவரத்தையும் ஆய்வு செய்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...