பெங்களூரு புகழேந்தி தலைமையில், கோவையில் கூட்டம் நடத்திய, அ.ம.மு.க., அதிருப்தி அணியினர், 'கட்சியை வழிநடத்தும் தகுதியற்ற தினகரன், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர், ஜெ., மற்றும் தற்போது, பெங்களூரு சிறையில் உள்ள அவரது தோழி சசிகலாவுக்கு, சட்ட ரீதியான உதவிகளை புரிந்தவர், கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த புகழேந்தி.சமீபகாலம் வரை, தினகரன் தலைமையிலான, அ.ம.மு.க.,வின் செய்தி தொடர்பாளராகவும், கர்நாடக மாநில செயலராகவும் இருந்தார்.
கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலத்தில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நபர்களுடன், புகழேந்தி ரகசிய பேச்சு நடத்திய வீடியோ, வெளியானதைத் தொடர்ந்து, ஓரம்கட்டப்பட்டார். இதையடுத்து, 'கோவை மண்டலத்தில், அ.ம.மு.க.,வுக்காக உழைத்தவர்களுக்கு பாராட்டு விழா' என்ற பெயரில், நேற்று திருமண மண்டபம் ஒன்றில், ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டிய புகழேந்தி, தினகரனை கடுமையாக விமர்சித்தார்.
தேர்தல் தோல்வி
இக்கூட்டத்தில், கோவை மாநகர், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், மாவட்ட வக்கீல் அணி இணைச் செயலர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று, கண்டன தீர்மானங்களை முன்மொழிந்தனர்.அதன் விபரம்:அ.தி.மு.க., மற்றும் சின்னம், ஆட்சியை மீட்போம் என, தினகரன் கூறினார்; அது நடக்கவில்லை. அதன்பின் கட்சி துவக்கி, அதையும் பதிவு செய்யவில்லை. புதிய கட்சியை தொண்டர்கள் ஏற்காத நிலையில், தேர்தலில் படுதோல்வி அடைய நேர்ந்தது.
தனித்து செயல்படும் தினகரன், கட்சியிலிருந்து வெளியேறுவோர் வெளியேறலாம் எனக் கூறுவது, கண்டனத்துக்குரியது. இவரது தவறான செயல்பாடுகளால் தான், தங்கதமிழ்செல்வன், பார்த்திபன், வெற்றிவேல் உள்ளிட்ட, 18 பேரின், எம்.எல்.ஏ.., பதவி பறிபோனது; இதற்கு தினகரனே முழுமுதற்காரணம். மேலும், இடைத்தேர்தலில் தோற்றுப் போனதும், அனைவருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்திஉள்ளது. அனைவரும், எம்.எல்.ஏ., பதவியை இழந்துள்ள நிலையில், தினகரன் மட்டும், எம்.எல்.ஏ., பதவியில் தொடர வேண்டுமா; ராஜினாமா செய்ய வேண்டும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இ.பி.எஸ்., அரசுக்கு புகழாரம்
இ.பி.எஸ்., அரசை கடுமையாக விமர்சித்து வந்த புகழேந்தி, இந்தக் கூட்டத்தில், திடீர் பாராட்டு மழையை, தீர்மானத்தின் வாயிலாக பொழிந்துள்ளார்.'கடந்த, 15 ஆண்டுகளாக தமிழகம் - கேரளா இடையேயான நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க முயற்சி மேற்கொண்டிருக்கும் முதல்வர், இ.பி.எஸ்.,க்கும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கும் பாராட்டு' என, தெரிவித்துள்ளார். இதன்மூலம், புகழேந்தி அணியினர், அ.தி.மு.க., வுக்கு தாவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment