Friday, October 18, 2019

நான் எடுத்த தவறான முடிவு, திருமணம்!

நான் எடுத்த தவறான முடிவு, திருமணம்! மீண்டும் நடிக்க வந்தது பற்றி நடிகை சீதா: சென்னை தான் சொந்த ஊர். அப்பா, மோகன் பாபு, குணச்சித்திர நடிகர். புதிய பாதை படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே, அதன் இயக்குனர், பார்த்திபன் சாருடன் காதல் ஏற்பட்டு விட்டது. ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறி, கல்யாணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பின் நடிப்பதில், பார்த்திபன் சாருக்கு பிடித்தம் இல்லை. அதனால், படங்களில் நடிக்க வாங்கிய, 'அட்வான்ஸ்' தொகையை திருப்பிக் கொடுத்தேன்.நான்கரை ஆண்டு களில், மூன்று மொழிகளில், ௮௦ படங்களுக்கு மேல், கதாநாயகியாக நடித்திருந்தேன். ஏராளமான வாய்ப்புகள் வந்த நேரத்தில், அவற்றை வேண்டாம் என உதறி, திருமண வாழ்வில் புகுந்தேன். பெற்றோரை எதிர்த்து, நான் சென்ற இல்லற வாழ்க்கையில் நிறைய மனக் கசப்புகளையும், கஷ்டங்களையும் சந்தித்தேன். அப்போது தான், கல்யாண விஷயத்தில், நான் எடுத்த முடிவு தவறு என உணர்ந்தேன். திருமண பந்தத்திலிருந்து இருவரும் விலகி, சுமுகமாக விவாகரத்து பெற்றோம். அது போன்ற ஒரு நாளை, யாருமே எதிர்கொள்ளக் கூடாது. அவ்வளவு அழுகை; அவ்வளவு தவிப்பு... அதன் பிறகு தான், பெற்றோர் வீட்டுக்கு போனேன். என் வாழ்க்கையை மீண்டும் பூஜ்யத்திலிருந்து துவங்கினேன். பொருளாதார ரீதியில் ரொம்ப சிரமப்பட்டேன். அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கினேன். நீண்ட இடைவெளிக்கு பின் நடிக்க வந்தது, சிரமமாக இருந்தது. முதலில், 'டிவி' சீரியல்களில் தான் நடித்தேன். அதன் பிறகு தான், கொஞ்சம் கொஞ்சமாக சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. அந்த நேரத்தில், கணவர் இன்றி, குழந்தைகளை தனியாக வளர்க்கும் பெண்கள் படும் அவஸ்தைகளை அனுபவித்தேன். தாய்ப் பாசத்தால், ஒவ்வொரு நாளும், மிகப் பெரிய போராட்டங்களை எதிர்கொண்டேன்; அந்த வலியை, பிறரால் உணர்ந்து கொள்ள முடியாது. எனினும், மகள் அபிநயாவை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கினேன். மற்ற என் இரண்டு குழந்தைகளுக்கும், முழுமையான அன்பை கொடுக்க முடியவில்லை. அது, வாழ் நாள் துயரம். அழுது, என் கவலைகளை எல்லாம் தீர்த்துக் கொள்வேன்.என் குடும்ப வாழ்க்கை பற்றி, இணையதளத்தில், பல தவறான தகவல்கள் பரவியபடி இருக்கின்றன. அவை, எனக்கு வருத்தத்தை அளிக்கின்றன.பிரிந்த திருமண பந்தத்தில், இனி, இணைந்து வாழும் எண்ணமே எனக்கில்லை. இவ்வளவு நாள் வாழ்ந்தது போல, இனியும் தனியாகவே வாழ விரும்புகிறேன். இரண்டு மகள்களின் திருமணத்தையும், நன்றாக நடத்தி விட்டேன். பையனுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற ஆசை மட்டுமே பாக்கி!படிப்பு தான் முக்கியம் என்பார் அப்பா!தன் தந்தையைப் பற்றி, பாடகி, எஸ்.பி. ஷைலஜா: நாங்கள் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அப்பா பெயர், சாம்பமூர்த்தி; ஹரிகதை சொல்வதில் வல்லவர். அம்மா, சகுந்தலா, குடும்பத் தலைவி, நன்றாக பாடுவார். என்னுடன் பிறந்தவர்கள், ஐந்து பெண்கள், இரண்டு ஆண்கள். 'ஸ்ரீபதி பண்டித்தாராஜுலா' என்ற பெயரில், எங்கள் வம்சத்தில் மகான் இருந்தார். அவர் பெயரை, எங்களின் இனிஷியலாக சேர்ப்பது வழக்கம்.அந்த வகையில் என் பெயர், எஸ்.பி.ஷைலஜா; அண்ணன் பெயர், எஸ்.பி.பாலசுப்ரமணியம். அப்பா ரொம்ப, 'ஜோவியல்!' ஆனால், படிப்பின் மீது அலாதி நம்பிக்கை கொண்டவர். புத்தகம் வாசிப்பது தான் அவரின் விருப்பம். அவர் போலவே, நானும், அண்ணனும் புத்தகங்களை விரும்பி படிப்போம்.அப்பா ரொம்ப மென்மையானவர்; எங்களைத் திட்டவே மாட்டார். அதிக சினிமா படங்களைப் பார்க்க மாட்டார். அப்பாவின் முதல் மனைவி இறந்து விட்டார். அவருக்கு, ஒரு பெண் குழந்தை. அதன் பிறகு, எங்கள் அம்மா சகுந்தலாவை, அப்பா திருமணம் செய்து கொண்டார். வீட்டின் மூத்தவர், அண்ணன் எஸ்.பி.பி., தான். அண்ணன் சினிமாவில் பாட முயற்சித்தது, அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. 'வீட்டின் மூத்த பிள்ளை என்பதால், நல்லா படிக்க வேண்டும்' என்பார். அது போலவே, அண்ணனும் இன்ஜினியரிங் படித்தார்.சினிமாவில் அண்ணன் நுழைந்து, முதல் பாட்டு பாடிய போது, அப்பாவுக்கு மகிழ்ச்சி இல்லை. 'படிப்பிலும் கவனமாக இருந்துக்கோ' என, அறிவுரை கூறினார். படிப்பு தான் முன்னேற்றம் தரும்; வீட்டில் உள்ள பெண்கள் யாரும், பாட்டு, நடனம் என, வெளியே போகக் கூடாது என்பார்.அம்மா தான், அப்பாவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார். நானும், தங்கையும் பள்ளியில் பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டோம். அதையடுத்து, கச்சேரிகளில் பாடத் துவங்கினோம். கச்சேரிக்கு நான் போயிட்டு, வீட்டுக்கு வந்தால், அப்பா, 'உம்'மென்று இருப்பார். அதே நேரத்தில், பாட்டுடன் படிப்பிலும் நான் கெட்டி என்பதால், கண்டிக்க மாட்டார். பரதநாட்டியம் எனக்கு நன்றாக வரும். பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத், எனக்கு அண்ணன் உறவு முறை.அப்பாவை அவர் பார்த்து, 'சித்தப்பா, சங்கராபரணம் படம் பார்த்தீர்கள் அல்லவா... அது போன்ற ஒரு படம் தான், சாகர சங்கமம்! அதில், ஒரு பாத்திரத்தில், ஷைலஜா நடிக்க அனுமதிக்க வேண்டும்' என, கேட்டார்; அப்பாவும் ஒப்புக் கொண்டார்; அதன் பிறகு தான் நடித்தேன். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில், பல பாடல்களும் பாடியுள்ளேன்!
 நான் எடுத்த தவறான முடிவு, திருமணம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...