''தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை, 67 ஆக உயர்ந்துள்ளது. நோய் பரவலை தடுக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, 1.50 கோடி முக கவசங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க, 'ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளது,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.
தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய, 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களின் ஆலோசனை கூட்டம், நேற்று சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் தலைமையில் நடந்தது.அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம், டி.ஜி.பி., திரிபாதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின், முதல்வர் அளித்த பேட்டி:கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, இந்தியாவில், 27 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில், ஒருவர் இறந்துள்ளார்.தமிழகத்தில், நேற்று மேலும், 11 பேருக்கு, நோய் தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால், நோய் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை, 67 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு, 10; சென்னை, 4; மதுரை, 2, திருவாரூர், 1 என, 17 பேர், நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லிக்கு, 1,500 பேர் குழுவாக சென்றுள்ளனர். அவர்களில் இருந்தவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. குழுவில் இடம்பெற்ற, 981 பேர் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. இவர்களால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில், 17 ஆயிரத்து, 89 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 3018 'வென்டிலேட்டர்' கருவிகள் உள்ளன.
நோய் தொற்றை கண்டறியும் ஆய்வகம், 14 மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில், மூன்று மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதுவரை, ஐந்து பேர், சிகிச்சையில் குணமாகி, வீடு திரும்பியுள்ளனர்.அரசு சார்பில், 1.50 கோடி முக கவசங்கள்; 25 லட்சம், 'என் 95' முக கவசம்; 11 லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள்; 2,500 வென்டிலேட்டர்கள்; 30 ஆயிரம், 'டெஸ்ட் கிட்' என்ற, பரிசோதனை கருவிகள் வாங்க, 'ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளது.கொரோனா நோய் அறிகுறி இருந்தால் மட்டுமே, சோதனை நடத்தப்படும்.
இதையே, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நோய் குறித்து மக்களிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இந்நோய்க்கான மருந்து தனிமை. எனவே, நம்மை நாம் தனிமைப்படுத்த வேண்டும்.தமிழகத்தில், கொரோனா நோய், நிலை ஒன்றில் இருந்து, நிலை இரண்டுக்கு வந்துள்ளது. இப்போது, கட்டுப்படுத்தி விட்டால், நமக்கு பிரச்னை வராது. இதற்கு, மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.நோய் பரவலை தடுக்க, அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும், அமைச்சர்கள் தலைமையில், கூட்டம் நடக்கிறது.
ரேஷன் பொருட்கள் வினியோகம் குறித்து, மாவட்ட கலெக்டர்கள் முடிவெடுக்க, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.சளி, இருமல், காய்ச்சல் வந்தால், மருத்துவமனையை அணுகவும்.இது, மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்னை. இதில், அரசியல் கட்சிகள் கூடி பேச, அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டியதில்லை.வெளி மாநில தொழிலாளர்களுக்கு, முகாம் அமைத்து, உணவு வழங்கப்படுகிறது. தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து ஏற்பாடுகளையும், அரசு செய்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறுவது, தவறான தகவல்.இவ்வாறு, அவர் கூறினார்.
வெளி மாநில தமிழருக்கு உதவி!
முதல்வர் கூறியதாவது:பிற மாநிலங்களில் உள்ள, தமிழக தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி, அந்த மாநிலங்களிடம் கேட்டுள்ளோம். அதற்கான செலவை தருவதாக, அந்த அரசிடம் கூறியுள்ளோம். வெளி மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், அவர்கள் வர இயலாது. அதேபோல, தமிழகத்தில், 1.49 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர். கட்டுமான தொழிலாளர்கள், 32 ஆயிரம் பேர் உள்ளனர்; அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளோம்.தினக்கூலி தொழிலாளர்களுக்கு, தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி செய்து கொடுக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment