Monday, March 30, 2020

கலைவாணர் ஒரு புரியாத புதிர்.

தன் வாழ்வின் இக்கட்டான நேரங்களில்
என்.எஸ்.கே வின் அறிவுரையைக் கேட்டு நடப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் சிறப்பான குணங்களாக நாம் பேசுகிற விஷயங்களுக்குச் சொந்தக்காரர் என்.எஸ்.கே. இப்படி தன் வாழ்வின் முக்கிய பங்கு வகித்த கலைவாணர் குறித்து “கலைவாணர் ஒரு புரியாத புதிர்!” என்ற தலைப்பில் 1966 ம் ஆண்டு ஆனந்த விகடன், தீபாவளி மலரில் ஓர் கட்டுரை எழுதியிருந்தார்.
அதில் கலைவாணர் பற்றி அவர் தெரிவித்த கருத்து இதோ....
“ஒரு மனிதன் தனது வாழ்க்கையைத் தெரிந்தோ தெரியாமலோ இருவிதத் தன்மைகளைக் கொண்டதாக அமைத்துக்
கொள்ளுகிறான்.
ஒன்று: தனக்காக. இன்னொன்று: பிறருக்காக. தனக்கு என்று அமைத்துக் கொள்ளும் வாழ்க்கையில் அவனுடைய உடல் முக்கிய குறிக்கோளாக அமைகிறது. அந்த உடலைப் பேணிகொள்ளும் முயற்சிகளை அவன் பலவாறு மேற்கொள்ளுகிறான். கவர்ச்சியாக அலங்காரம் செய்து கொள்வதும், விதம் விதமான உடைகளை உடுப்பதும், அணிவகைகளில் ஆர்வம் செலுத்துவதும் அவன் தனக்காகச் செய்து கொள்ளும் செயல்கள். மேலும், தனக்குப் பிடித்தமானதைத் திரட்டிக் கொள்வது, தன் மனைவியை விரும்பிக் காப்பது, தன் குழந்தைகளைப் பராமரிப்பது, தன் உற்றாரை ஆதரிப்பது, இவை எல்லாம் கூட அவன் தனக்காகத் தன் வசதிக்காகச் செய்து கொள்ளும் சில காரியங்கள்தான்.
இதேபோல் பிறருக்காக அவன் செய்கின்ற காரியங்களும் உண்டு. பிறர் என்ற இந்தச் சொல், அவனைத் தவிர மற்றவர் என்ற பொருளில் குறிப்பிடப்படவில்லை. அவனுக்கு உற்றாராக, நலம் தருவோராக பயன்படுவோராக இருப்பவர்கள் பிறர் என்ற சொல்லால் அழைக்கப் படக்கூடியவர்கள் அல்ல; அவனைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவனுடன் எந்தத் தொடர்பும் கொள்ளாமல், ஏன், அவனுக்குச் சிறிதளவும் பழக்கமே இல்லாதவர்கள்தான் இந்தப் பிறர். அத்தகையவர்களுடைய மகிழ்ச்சியைக் கண்டு திருப்தி அடைவதும், அவர்களின் நன்மைக்காகத் தன்னை, தன் பொருளை, தன் அறிவை அளிக்க முன் வருவதும் உள்ளத்திற்கு மகிழ்ச்சியைத் தருவதற்காக. தனக்காக மற்றவரிடம் ஒன்றை வேண்டுவது யாசகம். பிறருக்காகப் பிறரிடம் ஒன்றை வேண்டுவது பெருந்தன்மை. முதலாவது உடலுக்காக, இரண்டாவது உள்ளத்திற்காக.
இவ்வாறு இருவகைப்பட்ட வாழ்க்கை அமைப்புக்களையும் கலைவாணர் நன்றாக அறிந்தவர். அறிந்தே அவற்றைத் தன் புகழ் வந்ததனால் அவர் அதிலே செருக்குக் கொண்டது கிடையாது. அந்தப் புகழ் எத்தகையது; அதன் ஆக்கிரமிப்பால் விளையக்கூடிய முடிவுகள் என்ன என்பதை முற்றும் உணர்ந்தவர். புகழ் மிகுதியின் அடித்தளத்தில் அவரது அறிவும் பண்புமே அவரை நேர் வழியில் இயக்கிக்கொண்டிருந்தன. வந்து குவிகின்ற புகழ் வராமல் போனாலும் ஏமாற்றத்தால் துன்பப்பட்டுத் தவிக்கின்ற பலவீனமான நிலைமை அவரிடம் இருக்கவே இல்லை. மகாத்மா காந்தியை உண்மையிலேயே மதித்தவர் அவர். கதரும் கட்டுவார். ஆனால், காங்கிரஸ்காரர் அல்ல. அறிஞர் அண்ணா அவர்களைத் தலைசிறந்த தீர்க்க தரிசியாக, மக்கள் நலத்தின் வழி காட்டியாகப் போற்றியவர் அவர்; ஆனால் தி.மு.கழக உறுப்பினர் அல்ல.
பெரியார் ராமசாமி நாயக்கர் அவர்களை அரசியல் வழிகாட்டியாகக் கருதினார். ஆனால், திராவிடக் கழகத்தில் அங்கத்தினர் அல்ல.
மக்களால் போற்றப்பட்ட அவர், மக்களிடம் காணும் குறைகளை எடுத்துக் காட்டத் தயங்குவதில்லை. தங்கள் குறைகளை இடித்துக் கூறுகிறாரே என்று யாரும் கலைவாணரைக் குறை கூறுவதில்லை. அதற்கு மாறாக போற்றவே செய்வார்கள்.
சக நடிகர்களிடம் கூட குறைகண்டால் எடுத்துக் கூறித் திருத்துவார். ஆனால், அவர்களால் போற்றி, மாலைகளே சூட்டப்படுவார்.
இப்படி எல்லோரும் போற்றும் ஓர் அதிசயச் சக்தியாகத் திகழ்ந்த அவர் ஒரு புரியாத புதிர் என்று நான் சொல்லும்போது, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். கலைவாணரைப் பற்றி எல்லாம் புரிந்ததுதானே, புரியாத ஒரு புதிராக அவர் இருந்தது எப்படி என்று கேட்கவும் செய்யலாம்.
நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலே அதற்காகப் போராடாமலே அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார். இதுதான் கலைவாணரின் உள்ளம்.
ஆனால், ஒரு செயல் நிகழும் போது அவரைப் பற்றி ஒரு புதிராகத்தான் நினைப்பார்கள். முடிவுக்குப் பிறகுதான் உண்மை விளங்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...