கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. மதுக்கடைகளையும் மூடி இருக்கிறார்கள்.
ஊரடங்குக்கு முந்தைய நாளே பலர் மதுபான கடைகளுக்கு சென்று பல நாட்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்தது. அப்படி வாங்காதவர்கள் தவிக்கிறார்கள். இந்த நிலையில் இந்தி திரையுலகின் மூத்த நடிகரான ரிஷி கபூர் மாலையில் கொஞ்ச நேரம் மதுக்கடைகளை திறந்து வைக்கலாம் என்று அரசை வற்புறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “அரசு, மாலை நேரத்தில் அனைத்து மதுபான கடைகளையும் சிறிது நேரம் திறந்து வைக்கலாம். இதற்காக என்னை தவறாக நினைக்க வேண்டாம். வீட்டில் இருக்கும் மனிதனுக்கு மனச்சோர்வு இருக்கும். போலீசார், மருத்துவர்கள், பொதுமக்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
இதனை டைரக்டர் குணால் கோலி வரவேற்று, “மாலையில் இல்லை என்றால் காலையிலாவது திறந்து வைக்கலாம். அரசுக்கு வருமானம் வரும்” என்று கூறியுள்ளார். ஆனால் பலர் ரிஷி கபூர் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment