அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை தேர்ந்தெடுத்து அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே போட்டி எழுந்துள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்பது, இன்று (அக்.,07) அறிவிக்கப்படும் என, அக்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் ஆதரவு எம்எல்ஏ.,க்களுடனும் தனித்தனி அணியாக உருவாகி ஆலோசனை நடத்தினர். மேலும், அமைச்சர்களும் இருவருடனும் மாறி மாறி ஆலோசனை நடத்தியதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக.,வின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்தார்.
வழிகாட்டுதல் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்பி வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், மற்றும் ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்பி., கோபால கிருஷ்ணன், மாணிக்கம் (சோழவந்தான் எம்எல்ஏ), முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக பழனிசாமி அறிவித்தார். இந்தக்குழுவின் தலைவராக பன்னீர்செல்வம் இருப்பார்.
முதல்வர் வேட்பாளர்
பின்னர் பேசிய பன்னீர்செல்வம், முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், பழனிசாமி தான் வரக்கூடிய தமிழக சட்டசபைக்கான அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியின் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளர் பழனிசாமிக்கு, பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஆதாயம் தேட முயன்ற எதிர்க்கட்சிகளின் சதியை முறியடித்து விட்டதாக பன்னீர்செல்வம் கூறினார்.
இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து, பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதா நினைவிடம் சென்று, மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.
வழிகாட்டுதல் குழு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பாகுபாடின்றி ஒத்த கருத்துடன் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., விவகாரத்தில் குளிர்காயலாம் என்ற எதிர்க்கட்சிகளின் நினைப்பில் மண் விழுந்துள்ளது எனக்கூறினார்.
No comments:
Post a Comment