குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் உலகளவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் ‘பிம்ஸ்’ நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரம் முதல் 5 ஆயிரத்து 500 என்று சராசரியாக இருந்து வருகிறது. இதுவரை 6.50 லட்சம் பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக 13 முதல் 60 வயதினர் 5 லட்சத்து 83 ஆயிரம் பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 83 ஆயிரத்து 500 பேரும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 24 ஆயிரத்து 700 பேரும் அடங்குவர்.
கொரோனா வைரஸ் ஒரு நபரின் நுரையீரலை அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி மூச்சு திணறலை உண்டாக்கும். பெரும்பாலும் இந்த வைரஸ் தொற்று முதியவர்களையும், வேறு சில நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கே அதிகளவில் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளை இந்நோய் தொற்று பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு பின்னர் குழந்தைகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குறைந்த அளவிலும், 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகள் இருக்கும் வீட்டில், கொரோனா தொற்று அறிகுறி இருக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் கொரோனா பரிசோதனை செய்யும்போது, குழந்தைகளை தவிர மற்றவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
இதனால் தங்களது குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பெற்றோர் நிம்மதி பெரு மூச்சுவிடுகின்றனர். இந்த சூழ்நிலையில் 2 அல்லது 3 வாரங்கள் கழித்து அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உடலில் சிறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இது பல நாடுகளில் ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்திலேயே உலக நாடுகளில் பலர், கொரோனாவுக்கு பிறகு குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பின் விளைவுகளை கண்டறிந்துள்ளனர்.
ஆனால் இந்தியாவில் ஜூன் மாதத்துக்கு பிறகுதான் இது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல், சளி மற்றும் தோல்கள் சிவந்து காணப்படுவது போன்ற அறிகுறியாக உண்டாகிறது. இங்கிலாந்து போன்ற உலக நாடுகளில், இத்தகைய பாதிப்புக்கு ‘பிம்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அறிகுறி வந்ததும் குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிவில் மீண்டும் தொற்று இல்லை என முடிவு வரும் பட்சத்தில் பெற்றோர் அலட்சியம் காட்டி டாக்டரை அணுகாமல் இருந்து விட்டால் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு பெரிய அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு அதிகளவில் உள்ளது. அதாவது, ‘பிம்ஸ்’ குழந்தைகளின் உடல் உறுப்புகளை மெல்ல மெல்ல அமைதியான முறையில் தாக்கி பாதிப்படைய செய்யும்.
முக்கியமாக குழந்தைகளின் இதயத்தை தாக்கி, அந்த குழந்தை 20 வயதை நெருங்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்படுத்தும் அபாயம் உண்டாகும். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ‘பிம்ஸ்’ பாதிப்புடன் வருகிற குழந்தைகளுக்கு ‘ஐ.வி.ஐ.ஜி’ எனப்படும் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த மருந்து மூலம் சிகிச்சை அளிக்கும்போது, குழந்தையின் உடல் உறுப்பை பாதிக்காமல் தடுக்கப்படுகிறது. இதுவரை இந்த மருத்துவமனையில் 55 குழந்தைகள் ‘பிம்ஸ்’ பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளின் பெற்றோர் மட்டும் அல்ல, அவர்களின் உறவினர்கள் யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது அந்த குடும்பத்தில் யாரேனும் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்திருந்தாலும், அந்த தொடர்பில் உள்ள குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
‘பிம்ஸ்’ ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்த போது, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருக்கிறது. இதன்பிறகு ‘ஐ.வி.ஐ.ஜி’ மருந்து மூலம் சிகிச்சை அளிக்கும்போது, விரைவில் அவர்கள் குணமடைகின்றனர்.
இது போன்ற பாதிப்புகளுடன் சென்னை, மும்பையில் அதிகளவில் குழந்தைகள் கண்டறியப்படுகின்றனர். இந்த நிலையில் தற்போது மதுரையில் கடந்த 2 மற்றும் 3 வாரங்களாக அதிகளவில் ‘பிம்ஸ்’ பாதிப்புடன் குழந்தைகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கூட வைரஸ் தொற்று பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் கொரோனாவுக்கு பின் ஏற்படுத்தும் விளைவுகள், குழந்தைகளின் உடலுறுப்பை பெரிதும் பாதிப்படைய செய்கிறது.
எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளை, அவர்களது பெற்றோர் கண்காணித்து, ஏதேனும் அறிகுறி இருந்து, தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டாலும், மருத்துவமனை சென்று ‘பிம்ஸ்’ பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
இதற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளும், மருத்துவ வசதிகளும் தமிழக சுகாதாரத்துறையிடம் போதுமான அளவு உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வும் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.
No comments:
Post a Comment